லடாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் யோகப் பயிற்சி செய்த இந்திய ராணுவ வீரர்கள்!

இந்திய ராணுவ வீரர்கள் அதிகாலையில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் பொருட்படுத்தாமல்18,000 அடி உயரத்தில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருந்தது.
லடாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் யோகப் பயிற்சி செய்த இந்திய ராணுவ வீரர்கள்!

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. 2014 ஆம் ஆண்டில் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டமைப்பில் யோகாவின் முக்கியத்துவத்தைக் குறித்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் மோடி தனது முதல் உரையை நிகழ்த்தினார். உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க சட்டங்களும், தண்டனைகளும் மட்டும் போதாது. மனிதர்களை மனம், உடல், சிந்தனை வாயிலாக நல்வழிப்படுத்த யோகா போன்ற பயிற்சிகளும் வேண்டும், அந்த வகையில் யோகா இந்தியா உலகுக்கு அளித்த நற்கொடையாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட மேன்மை வாய்ந்த யோகப் பயிற்சிகளை உலக மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தி யோகக் கலையை வளர்க்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என மோடி கோரிக்கை வைத்தார். ஜூன் 21 ஆம் நாள் போமியின் வடபகுதியில் உள்ள நாடுகளில் மிக நீண்ட பகலையும், தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு மிக நீண்ட இரவுப் பொழுதையும் கொண்ட நாள் என்பதால் அந்த நாளை உலக யோகா தினத்தைக் கொண்டாட சிறந்த நாளாகத் தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரைத்தார் மோடி. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டு முதல் ‘சர்வதேச யோகா தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று இந்தியாவில் சிறப்புற கொண்டாடப் பட்டு வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் மோடி உட்பட அரசியல், சமூக, கலைத்துறை பிரமுகர்கள் அனைவரும் யோகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு யோகப் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினமான இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் அதிகாலையில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் பொருட்படுத்தாமல்18,000 அடி உயரத்தில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

லடாக்கில் மட்டுமல்ல உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பிரதமர் மோடியும் யோகா பயிற்சி செய்ததோடு அங்கிருந்தவாறு யோகாவின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்காக ஊடகங்கள் வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் படி கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. நாடெங்கும் யோகா பயிற்சி வகுப்புகள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளன. யோகா கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும், சிந்தனைக்கும் மிக ஆரோக்கியத்தை அளிக்கும் எளிய பயிற்சி முறைகளில் ஒன்று. யோகா இந்தியா உலகிற்கு அளித்த நன்கொடை. அதை சிறப்பிக்கும் வகையில் மக்கள் யோகா கற்றுக் கொண்டு தமது உடல் நலன், ஆன்ம நலன் இரண்டையும் மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். எனவும் மோடி உரையாற்றினார்.

தமிழ்நாட்டிலும் கோவையில் ஈஷா யோக மையம் சார்பாக அமைக்கப் பட்டுள்ள ஆதியோகி தியான மந்திரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின யோகப் பயிற்சிகளில் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com