கழனியூரன் - இன்றுடன் மெளனித்தார் ஒரு கதை சொல்லி!

கூடிய விரைவில் கி ரா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி முடித்து விடும் தீரா ஆவலைச் சுமந்து கொண்டிருந்த கழனியூரன் அந்த ஆசை ஈடேறாமலே மறைந்தது வருத்தமான விசயமே
கழனியூரன் - இன்றுடன் மெளனித்தார் ஒரு கதை சொல்லி!

கி ரா வின் நாட்டுப்புறக் கதை சொல்லி வாரிசாக அறிமுகமான எழுத்தாளர் கழனியூரன் இன்று மறைந்தார். தெற்கத்தி கிராமியக் கதைகளை அவற்றின் ஈரம் குறையாது கரிசல் மண்ணின் வாசம் குறையாது இலக்கிய வாசகர்களிடையே எடுத்துச் சென்றதில் கழனியூரனுக்கும் முக்கியப் பங்குண்டு. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கழனியூரனின் இயற்பெயர் எம்.எஸ். அப்துல் காதர். புனித ரமலான் பண்டிகைக்கு மறுநாள் மறைந்தது அவர் பெற்ற பெரும் பேறாகவும் இருக்கலாம். ஆனால் கழனியூரன் எழுதிய, வெளிக்கொணர்ந்த கதைகள் எதிலும் இருந்ததில்லை அவரது மத அடையாளங்கள் எதுவும்! இன்று அவர் மறைந்த பின்னரே தெரிய வருகிறது அன்னாரது இஸ்லாமிய அடையாளம்.

ஆயினும் கரிசக்காட்டுக் கதைகளை கி ரா வின் அடியொற்றி பிசகாது பதிவு செய்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. நாட்டார் கதைகளைப் பதிவு செய்வதில் கி ரா வைத் தொடர்ந்து எளிய வாசகர்களுக்கும் விளங்கும் வண்ணம் கர்ண பரம்பரைக் கதைகளையும், கிராமிய வாழ்வையும், நாட்டார் தெய்வங்களையும் காட்சிப் படுத்தி கதைக் களன்களாகவும், சம்பவங்களாககும் விரித்தெழுத நமக்கு வாய்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் கழனியூரனும், பாரத தேவியும் முக்கியமானவர்கள். அவர்களில் ஒருவரை இழந்தது நாட்டார் இலக்கியத்துக்குக்கான நஷ்டமே என்றால் மிகையில்லை. 

கி ரா வின் அடியொற்றி அவரது கதை சொல்லி இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர் கழனியூரன். இதுவரை சுமார் 50 நூல்களை எழுதி இருக்கிறார், அவை பெரும்பாலும் நாட்டார் வழக்காற்றியல் சிறுகதைகள், சொலவடைகள், சிறுவர் நாடோடிக் கதைகள். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய கழனியூரன் நெல்லைச் சீமைக்காரர். கூடிய விரைவில் கி ரா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி முடித்து விடும் தீரா ஆவலைச் சுமந்து கொண்டிருந்த கழனியூரன் அந்த ஆசை ஈடேறாமலே மறைந்தது வருத்தமான விசயமே என கழனியூரனின் நண்பர் ஒருவர் முகநூல் அஞ்சலியில் தெரிவித்திருக்கிறார். எது எப்படியோ நாட்டுப்புறக் கதை சொல்லிகளில் ஒருவர் இன்றோடு தன் கதை சொல்லலை நிறுத்திக் கொண்டமைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகட்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com