‘என் நாட்டை விட்டு வெளியேறு’, மெட்ரோ ரயிலில் ஆசியப் பெண்களை அச்சுறுத்திய அமெரிக்கன்!

பாலியல் ரீதியான சில வசைமொழிகளையும் தங்களை நோக்கி விட்டெறிந்து ‘என் நாட்டை விட்டு வெளியேறு’ என்று வெறி பிடித்துக் கத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘என் நாட்டை விட்டு வெளியேறு’, மெட்ரோ ரயிலில் ஆசியப் பெண்களை அச்சுறுத்திய அமெரிக்கன்!

நிறவெறி பிடித்த அமெரிக்கன் புரிண்டன், இந்திய மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்களுக்கும், ஆசியர்களுக்கும் எதிரான நிறவெறி அறைக்கூவல்களும், அத்துமீறல்களும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கடந்த வியாழன் அன்று மீண்டும் ஒரு இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஹர்னிஷ் படேல் அமெரிக்காவில் சொந்தத் தொழில் செய்து வந்த மனிதர். மிகவும் அமைதியான மனிதராக இருந்த படேல் கொலையும் நிறவெறியால் தான் நிகழ்ந்ததா? எனும் ரீதியில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்க மெட்ரோ ரயில் ஒன்றில் இந்தியப் பெண்ணான ஏக்தா தேசாய் என்பவர் ஆஃப்ரிக்க அமெரிக்கன் ஒருவனால் 100 பேர் அவர்களைச் சூழ்ந்து நிற்கும் நேரத்திலும் நிறத்தின் பெயரால் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறார். இதை அந்தப் பெண் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட போதும் ஸ்ரீனிவாஸ் கொலைக்குப் பின்னரே அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. அந்த ஆஃப்ரிக்க அமெரிக்கன், நிறத்தைக் சொல்லிக் காட்டி ஏக்தாவிடம் முறைகேடாக நடந்து கொண்ட போது அவர்களைச் சுற்றி பலர் இருந்தனர். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை என்று ஏக்தா குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னை மட்டுமல்லாது அந்த நபர் தனக்கு அருகில் இருந்த ஆசியப் பெண் ஒருவரிடமும் இதே போல மோசமான முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான சில வசைமொழிகளையும் தங்களை நோக்கி விட்டெறிந்து ‘என் நாட்டை விட்டு வெளியேறு’ என்று வெறி பிடித்துக் கத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏக்தா தேசாய் நியூயார்க்கில் வசித்து வருகிறார். தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை அவர் வீடியோ பதிவாக்கி ‘தி வாய்ஸ் ரெய்ஸர்’ எனும் இணையதளத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் இந்த வீடியோவைக் கண்டு கொதித்துப் போயினர். அதன் பின்னர் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் நிறவெறிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ உலகம் முழுக்கப் பரவி வைரலாகியது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்று இன்னும் மூன்று மாதங்கள் முழுதாக முடியாத நிலையில் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிராக நிகழ்த்தப் படும் இம்மாதிரியான வன்முறைகள், அங்கிருக்கும் இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்ரம்ப் ஆட்சியின் நிறவெறிக் கொள்கையை அமெரிக்கர்களே வெறுக்கும் நிலையில் அங்கு அதிபருக்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினர் தினமும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.

அதற்கான வீடியோ சான்று;

Image Courtsy: News World India

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com