கோகோ கோலா கேன்களில் மிதந்தன மனித கழிவுகள்! கோலாவுக்கு இது சோதனைக் காலம்!

அசுத்தப்படுத்தப் பட்ட கேன்களை முற்றிலும் தடை செய்து விட்டதாகவும். அசுத்தமான ஒரு கேன் கூட தற்போது வட அயர்லாந்து சந்தையில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதாகவும் தெரிவித்துள்ளனர்
கோகோ கோலா கேன்களில் மிதந்தன மனித கழிவுகள்! கோலாவுக்கு இது சோதனைக் காலம்!

வடக்கு அயர்லாந்திலிருக்கும் கோகோ கோலா கேன்களில் மனிதக் கழிவுகள் மிதந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அங்கு காவல்துறை சோதனைகளும், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. லிஸ்பர்னில் இருந்து வரவழைக்கப் பட்டு இங்கு கோலா நிரப்பப் படும் கோகோ கோலா கேன்களில் மனிதக் கழிவுகள் மிதக்கக் காரணமான சாத்தியக் கூறுகள் என்ன? எனும் ரீதியில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் கோகோ கோலா நிறுவன தயாரிப்பு இயந்திரங்களில் ஏற்பட்ட இந்த திடீர் கோளாறுகளைத் தொடர்ந்து அன்று இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

முன்னரே கோலா நிரப்பப்பட்ட கேன்களும் சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாகத் தடை செய்யப்பட்டு விற்பனைக்குச் செல்லும் அபாயம் தடுக்கப் பட்டது. என அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவன ஊழியர்களில் ஒருவர் ‘இது முற்றிலும் அசம்பாவிதமான ஒரு நிகழ்வு’ என்று தெரிவித்துள்ளார். அசுத்தப்படுத்தப்பட்ட அந்த கேன்களை மீண்டும் சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர கிட்டத்தட்ட 15 மணி நேரங்கள் தேவைப்படுமாம். கோகோ கோலா நிறுவனத்திற்கு தேவையான கேன்கள் வழக்கமாக லிஸ்பர்னில் இருந்து தான் வரவழைக்கப்படும். ஆனால் இம்முறை கேன்கள் வழக்கத்திற்கு மாறாக ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ளன. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அங்கு உலவிக் கொண்டிருக்கும் வதந்திகளில் ஒன்று, தொலைதூரம் லாரிகளில் பயணம் செய்து வந்திறங்கும் அயல்நாட்டு குடியேறிகளின் வேலையாகவும் இது இருக்கலாம் என்று கருதப் படுகிறது. லாரிகளில் பயணம் செய்யும் போது அவர்கள் தங்களது இயற்கைக் கடன்களைக் கழிக்க கோலா கேன்களைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கலாம், என்பதாக வதந்தி உலவுகிறது.

ஆனால் கோகோ கோலா நிறுவனத்தினரைப் பொறுத்தவரையில் இந்த விசயத்தை மிக சீரியஸாகக் கையாளவிருக்கிறார்களாம். தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கோகோ கோலா நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுத் துறையினர் மிகத் தீவிரமாக சோதனையிட்டு அசுத்தப்படுத்தப் பட்ட கேன்களை முற்றிலும் தடை செய்து விட்டதாகவும். அசுத்தமான ஒரு கேன் கூட தற்போது வட அயர்லாந்து சந்தையில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை அந்நாட்டின் ஃபுட் ஸ்டாண்டர்டு ஏஜென்ஸியும் உறுதி செய்துள்ளது. தற்போது இந்த அசம்பாவிதம் குறித்து வட அயர்லாந்து காவல்துறையும், லிஸ்பர்ன் சுற்றுப்புறச் சூழல் நலத்துறையும் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com