பெண்களில் ரெண்டே வகை தானா? அன்னை தெரஸாக்கள் அல்லது பின் லேடன் தங்கைகள் இதைத் தாண்டி வேறு சாய்ஸ் இல்லையா?

அன்னை தெரஸாக்களாக வாணி, ராணி, அர்ச்சனா, உமாக்கள், பின் லேடனின் உடன்பிறவா தங்கைகளாக தேஜஸ்வினி, டிம்பிள், அவந்திகா, காயத்திரி, நந்தினி இத்யாதிகள்...
பெண்களில் ரெண்டே வகை தானா? அன்னை தெரஸாக்கள் அல்லது பின் லேடன் தங்கைகள் இதைத் தாண்டி வேறு சாய்ஸ் இல்லையா?

தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழ் டி.வி சேனல்களில் அலையடித்துக் கொண்டிருக்கும் மெலோ டிராமாக்களை பார்க்கும் வழக்கம் உண்டா உங்களுக்கு? தினமும் அவற்றை கண்டு கழிக்க முடியாதவர்கள் இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு சோதனை முயற்சியாக பிறகு அந்த சீரியல்களைப் பார்த்தாலும் ஒன்றும் மோசமில்லை. இரண்டுமே ஒன்று தான் தமிழ் டி.வி சீரியல்களில் பெண் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தில் எந்த விதமான பெரிய மாறுதல்களும் வந்து விடப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அப்படி சித்தரிக்கப் படுவதைத் தான் இந்த சமூகமும் விரும்புகிறது. ஏனெனில் இந்தச் சமூகம் எப்போதுமே பெண்களின் குணாதிசயங்களில் இரண்டே இரண்டு நிலைப்பாடுகளுக்குத் தான் அனுமதி அளித்திருக்கிறது. 

ஆகவே நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுக்கு இந்தச் சமூகம்,  உங்களை வெளிப்படுத்திக் கொள்ள இரண்டே இரண்டு சாய்ஸ்களை மட்டும் தான் அளித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் துளி கூட தன்னலமற்ற சுத்த ஆத்மாவாக, குடும்பத்தில் பிறரது நலன்களை மட்டுமே எண்ணிச் செயலாற்றிக் கொண்டிருக்கும் நல்ல பெண்ணாக உங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து தீர்க்க வேண்டும். அப்படி இல்லாமல் உங்களுக்கும் ஏதோ கொஞ்சம் சுயநலம் இருக்கிறது என்றால் உங்களை நல்ல பெண் லிஸ்டில் வைக்க இந்தச் சமூகம் ஒப்புக் கொள்ளப் போவது இல்லை, அப்போது நீங்கள் கெட்ட பெண்ணாகத்தான் வரையறுக்கப் படுவீர்கள். 

சமூகக் கண்ணோட்டத்தில் டி.வி சீரியல்களைப் பொறுத்தவரை, நல்ல பெண்ணுக்கான வரையறைகள் எப்போதுமே குறைவு. நீங்கள் தான் நல்ல பெண் ஆயிற்றே! பிறகு உங்களைப் பற்றி விளக்கிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நல்லவர்களுக்கு, ‘நல்லவர்’ என்ற ஒரே விளக்கம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் கெட்ட பெண் என்றால் அவர் எப்படி கெட்டவர்? எந்த விதத்தில் கெட்டவர்? அவர், தன் குடும்பத்திற்கும், இந்தச் சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவர்” என்றெல்லாம் விளக்கியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக வேண்டியதாகி விடுகிறது. கெட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களை வரையறுக்கும் போது இந்த சமூகத்திற்கு தங்களது வாதத்தை அழுத்தமாக முன் வைக்க கொஞ்சம் அதிகமாகவே உயர்வு நவிற்சி அணியும், தற்குறிப்பேற்ற அணிகளும் தேவைப்பட்டு விடுகின்றது. அதனால் தான் பாருங்கள்... டி.வி சீரியல்களில் வரும் கெட்ட பெண்கள் எல்லாம் எப்போதுமே பின் லேடனின் உடன்பிறவாத் தங்கைகள் ரேஞ்சில் சதா சர்வ காலமும் பிறருக்கு கெடுதல் செய்வதைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டே அலைவதாகக் சித்தரிக்கப் படுகிறார்கள். டி.வி சீரியல்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட பெண் என்றால், அதிலும் அவள் கல்லூரி மாணவி என்றால், உடனே உலகிலுள்ள எல்லா கெட்ட சகவாஸங்களுடனும், கெட்டுக் குட்டிச் சுவராகி சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு வீணாய்ப் போன இளைஞனின் மீது அவளுக்கு கண் மூடித் தனமான காதல் வர வேண்டும். அவனுக்காக தனது மொத்தக் குடும்பத்தையும் கதறி அழ வைத்து விட்டு அவள் அவனோடு ஓடிப் போய் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு வாழத் தொடங்க வேண்டும். அந்த வாழ்க்கையில் அவள், புராணக் கதைகளின் பதிவிரதைகளான, சத்யவான் சாவித்திரிக்கும், நளாயினிக்கும் இணையாகக் கஷ்டங்களைப் பட்டுத் திருந்தி நல்ல பெண்ணாக முயற்சிக்க வேண்டும். அவ்வளவே தான்.

நல்ல தன்மைக்கும், கெட்ட தன்மைக்கும் இடைப்பட்டு, கொஞ்சம் நல்ல பெண், கொஞ்சம் கெட்ட பெண் என்ற நடுநிலைத் தன்மைகளுக்கு எல்லாம் சீரியல் பெண்களுக்கு வாய்ப்புகளே இல்லை. அவர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினீர்களென்றால்... நீங்கள் உங்களிடமே கேள்வி கேட்டுக் கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஏனெனில், ஒரு தலைமுறைக்காலம் சமையலறைக்குள் அடங்கியிருந்த பெண்களுக்கும், வயோதிகத்தாலும், உடல் நலமின்மையாலும் வீட்டை விட்டு வெளியில் எங்கும் நகர முடியாத சாபம் கொண்ட வயது முதிர்ந்த பெண்களுக்கும் விமோஷனம் அளிக்க வல்ல ஆபத்பாந்தத் தன்மை கொண்டவையாக தற்போதைய டி.வி சீரியல்கள் கருதப்படுகின்றன. அவர்கள் ஆண்களைப் போல வார இறுதிகளில் மால்களில் உள்ள சினிமாத் தியேட்டர்களுக்குப் படையெடுப்பதில்லை. இரண்டெட்டு எடுத்து வைத்தால் சமையல்கட்டு வந்து விடும் என நம்பும் தூரத்தில் அமைந்த வரவேற்பறையி டி.விக்களும் அவற்றில் வீடு தேடி வந்து குண மாற்றம், மன மாற்றம் ஏற்படுத்த வல்ல மெகா சீரியல்களுமே போதுமானதாக இருக்கிறது. அவர்கள் தங்களது சொந்த வாழ்வின் சாயல்களை டி.வி தொடர்களில் தேடத் துவங்குகிறார்கள். அந்தத் தேடலில் அவர்கள் பெரும்பாலும் கண்டடைவது அதீத கற்பனைகளைத் தான். ஆனால் நாளடைவில் அந்த அதீத கற்பனைகளுக்கு அவர்கள் அடிமைகளாகவே மாறி விடுகிறார்கள் என்பதும் உண்மை.

ஒரே மெகா சீரியல் மாய்மாலங்களை எவ்வளவு நேரம் தான் பார்த்து ரசிப்பது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காகத் தான் எல்லா சேனல்களிலும், ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் பார்வையாளர்கள் நேரடியாக பங்கேற்கக் கூடிய டி..வி நிகழ்ச்சிகள் வந்தன. அவை தவிர பலர் செய்திச் சேனல்களையும் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது வரவேற்புக்குரிய விசயமே என்றாலும் டி.வி மெகா சீரியல்களை அடித்துக் கொள்ள இப்போது வரை ஆளே இல்லை. வார இறுதி தவிர காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் நேரத்தை அதிகமும் அபகரித்துக் கொள்வது மெகா சீரியல்களே!

முன்னைப் போல இல்லை. இப்போதும் வார இறுதிகளில் மால்களில் சினிமா பார்க்கும் பழக்கமுள்ள ஆண்களும் கூட இரவுகளில் 11 மணி தாண்டியும் உச்சஸ்தாயியில் கதறும் ஆவிகளுக்குப் பிரியமான பைரவியையும், சின்ன பாப்பா, பெரிய பாப்பாவையும் பார்த்து ரசிப்பதாகத் தெரிகிறது. ஆக மொத்தத்தில் இப்போது ஆண்களிலும் மெகா சீரியல் ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள். எல்லா சீரியல்களிலும் ஓட்டப்பட்டுக் கொண்டிருப்பது வேறு வேறு கதைகள் தான் என்றாலும். அந்த எல்லாக் கதைகளிலும் மையம் கொண்டிருப்பவர்கள் என்று பார்த்தால் அது நாம் மேற்கண்ட அந்த இரண்டு வகைப் பெண்கள் மட்டுமே தான். யோசித்துப் பாருங்கள். அன்னை தெரஸாக்களாக வாணி, ராணி, அர்ச்சனா, உமாக்கள், பின் லேடனின் உடன்பிறவா தங்கைகளாக தேஜஸ்வினி, டிம்பிள், அவந்திகா, காயத்திரி, நந்தினி இத்யாதிகள்...

சீரியல் பெண் கதாபாத்திரங்களின் இந்த க்ளிஷேத்தனமான சித்தரிப்புகளை உடைக்கும் விதமாக கடந்த வாரத்தில் தனியார் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ ஒன்று டி.வி சீரியல்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து தனது பங்கேற்பாளர்களைப் பேச வைத்தது. அதில் தெரிய வந்த நீதி தான் மேலே விவரிக்கப்பட்ட அத்தனையும். ஏன் பெண்களில் நல்ல தன்மைக்கும், கெட்ட தன்மைக்கும் இடைப்பட்டு யாருமே இருக்க முடியாதா என்ன? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. மேற்கொண்டு அதற்கான எந்தவிதக் கேள்விகளையும் எழுப்பாமல் பெண்களாகிய நாம் தொடர்ந்து அதே விதமான மெகா சீரியல்களைப் பார்த்துக் கொண்டு தான் இனிமேலும் காலம் கழிக்கப் போகிறோமா? என்பது தான் அடுத்த கேள்வி. அதற்குள் உங்களுக்குள் ஒரு எளிய கணக்கைப் போட்டுப் பாருங்களேன். நாளொன்றுக்கு 2 மணி நேரங்கள், வாரத்தில் 6 நாட்கள் இப்படி டி. வி சீரியல்களில் கழிப்பதை விட உருப்படியாகச் செய்வதற்கு வேறு எத்தனையோ வேலைகள் இருக்கலாம் நமக்கு. அதை ஏன் மெனக்கெடக் கூடாது? சீரியல்கள் வரையறுக்கும் விதமான நல்ல பெண்களாக ஆவதைக் காட்டிலும் பிடிவாதமான கெட்ட பெண்களாக இருப்பது எவ்வளவோ மேல் ஏனெனில் எல்லா சீரியல்களிலும் வரும் மோசமான பெண் கதாபாத்திரங்களால் தான் அந்தந்த சீரியல்களின் ஆயுள் நீடிக்கிறது எனும் போது அவர்களை நாம் ஏன் வெறுக்க வேண்டும்.

என்ன சொல்லி முடிக்க இந்தக் கட்டிரையை? அதாகப் பட்டது சீரியல்களைப் பார்த்து நாம் நல்ல பெண்களாக மாறத் தேவையே இல்லை. ஆக்கவ்ப்பூர்வமாகச் செய்வதற்கு ஆயிரம் வேலைகளுண்டு இங்கே! அதைப் பெண்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்... அவ்வளவு தான்.

Article concept courtsy: Archanaa Sekar, Chennai based activist& feminist

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com