யாருக்காக... இது யாருக்காக? தமிழக சிறைத்துறையில் வெட்டியாய் கொட்டிக் கிடக்கும் 9 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி?!

தமிழகம் முழுதும் பல்வேறு குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதியாக சுமார் 9 கோடி ரூபாய் தமிழக சிறைத்துறை நிர்வாகத்தின் பொறுப்பில் யாருக்கும் பயனற்று வீணே கிடக்கிறது.
யாருக்காக... இது யாருக்காக? தமிழக சிறைத்துறையில் வெட்டியாய் கொட்டிக் கிடக்கும் 9 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி?!

தமிழகம் முழுதும் பல்வேறு குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதியாக சுமார் 9 கோடி ரூபாய் தமிழக சிறைத்துறை நிர்வாகத்தின் பொறுப்பில் யாருக்கும் பயனற்று வீணே கிடக்கிறது என்று ஒரு செய்தி கசிந்தது. இதென்ன புது விதமான இழப்பீட்டு நிதியாக இருக்கிறதே என்று சிறைத்துறை அதிகாரிகளைக் அணுகி விசாரிக்கும் போது தான் தெரிய வந்தது. இப்படி ஒரு நிதி இழப்பீடு கோர முடியும் என்பதே பலருக்கும் குறிப்பாக குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் கூட இது முற்றிலும் புதிய செய்தியாக இருப்பது தெரிய வந்தது.

அதாவது குற்றவாளிகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படும் போது, சிறைத்துறை, அவரவருக்குப் பொருத்தமாக சிறைக்குள் சில வேலைகளை ஒதுக்கித் தரும். அவர்கள் அந்தந்த வேலைகளைச் செய்து அதற்குரிய ஊதியம் ஈட்ட வேண்டும். குற்றவாளி விடுதலை அடையும் போது அவர் சிறையில் ஈட்டிய ஊதியத் தொகை அவரிடமே திரும்ப அளிக்கப்படும். இதைத் தான் நாம்
திரைப்படங்களில் பார்த்திருக்கிறோமே என்கிறீர்களா? ஆமாம் அது அப்படித் தான், ஆனால் இதில் நமக்குத் தெரியாத விசயமும் ஒன்றிருக்கிறது. அதாவது குற்றவாளி சிறையில் ஈட்டும் ஊதியத்தில், குற்றவாளியால் பாதிப்படைந்தவர்களுக்கும் பங்கு உண்டு என்பதே அது! பாதிக்கப்பட்டவர்கள் சிறைத்துறை நிர்வாகத்துக்கு விண்ணப்பித்து தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். 

இது வரை அப்படிச் சேர்ந்த நிதி சுமார் 9 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களைப் போய் அடையாமல் வீணே கிடக்கிறது, அந்த இழப்பீட்டுத் தொகை உரியவர்களைச் சென்றடைய வேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் தான் இழப்பீடு பெற முடியும் எனும் நிலையில் விவரமறிந்து இதுவரை அப்படி வந்த விண்ணப்பங்களும் வெகு குறைவு. விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், தகுதிகாண் அதிகாரி எனும் மூவர் குழு அவற்றைச் சரிபார்க்கும், பின்னர் சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் சிறைத்துறை நிர்வாகத்துக்கு இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உறுதி செய்யப்படும் எனவும் பெயர் வெளியிட விரும்பாத சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாத காரணத்தால், இழப்பீட்டுத் தொகை உரியவர்களைச் சென்றடையாமல் வீணே பயனற்று கிடக்கும் பரிதாப நிலை நிடிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் சர்வ தேச குற்றத்தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயலாற்றும் ‘சைக்கோ சோசியல் இண்டர்வென்ஷன்’ அமைப்பின் மேலாளர் ஸ்வேதா சங்கர், பாதிக்கப்பட்டவர்களுக்காக இப்படி ஒரு இழப்பீட்டுத் திட்டம் இருப்பதே எங்களுக்குத் தெரியாது என்கிறார். இவரது அமைப்பின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்படுகிறது எனவும், பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வேண்டியதான பல்வேறு வகையான இழப்பீடுகளை அவர்களுக்குப் பெற்றுத் தருவது தான் தங்களைப் போன்றோரின் வேலை எனவும், அப்படி இருந்தும் தனக்கு இது குறித்து இது வரை எதுவும் தெரியாமல் போனது ஆச்சரியமே என்றும் அவர் கூறுகிறார்.

இதைப்பற்றிப் பேசுகையில் சமூக ஆரவலரும், பேராசிரியருமான அ.மார்க்ஸ் பகிர்ந்து கொண்ட செய்தி, 

இதில் வருத்தத்திற்குரிய விசயம் என்னவெனில்? சிறைத்துறை விதிகளின் கீழ் இப்படி ஒரு இழப்பீட்டு வசதி இருப்பதே பலருக்கும் தெரியாது என்பதே! பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுத் தரும் முனைப்பில் போராடும் சமூகப் போராளிகளுக்கு கூட இந்த விசயம் தெரிந்திருக்கவில்லை என்பது தான் விந்தை. அதோடு கூட தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் கூட தமிழக சிறைத்துறை விதிகளின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே! என்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த இழப்பீட்டுத் தொகையானது குற்றவாளியின் ஊதியத்திலிருந்து மட்டுமே தரப்பட வேண்டும் என கருதத் தேவையில்லை எனவும், எப்போதுமே குற்றங்களுக்கு, குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பில்லை, இந்தச் சமூகமும் தான் பொறுப்பு. ஆகவே குற்றவாளிகள் ஈட்டும் சொற்ப சம்பளத்தோடு இந்தச் சமூகமும் தனது அங்கத்தினர்களான பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது இழப்பீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக முன்னாள் DGP யும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நட்ராஜ் இது குறித்துப் பேசுகையில், இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக இப்படி ஒரு திட்டம் முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது, அது எத்தனை பேருக்குத் தெரியுமோ? ஆனால், இந்த திட்டத்திலுள்ள பெரிய சவாலே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமலிருப்பது தான். அதோடு கூட இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காமல் இருப்பதும் மற்றொரு சவால் என்கிறார்.

நியாயப்படி இதிலுள்ள மற்றொரு சிக்கல், சிறைத்துறை தகுதிகாண் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தெளிவான லிஸ்ட் என எதுவும் இதுவரை பரமரிப்பில் இல்லை. ஒரு குற்றவாளி பரோலில் செல்லும் போது, அவர் நலமுடன் இருக்கிறாரா? எனத் தொடர்ந்து கண்காணிக்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு, இப்போது இது, குற்றவாளிகளைப் போலவே, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்காணித்துக் கண்டடைய வேண்டிய நேரமாகி விட்டது. அதோடு பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் எளிதான காரியமில்லை. அவர்கள் ஜாகை மாறிச் செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அது மட்டுமல்ல, இது குற்றவாளியின் மூலமாகக் கிடைக்கக் கூடிய இழப்பீடு கருதி  பெரும்பான்மையோர்  அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயங்கலாம். அவர்களை சமரசம் செய்து, இது குற்றவாளியின் பணமில்லை, அரசு தரும் இழப்பீடு எனக் கருத வைப்பதும் மிகப்பெரிய சவாலே.

இந்த சவால்கள் எல்லாவற்றையும் தாண்டி, பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நிறுத்த வேண்டிய விசயம் ஒன்றுள்ளது. அது; இந்த இழப்பீடு நீதிமன்ற வரம்புகளுக்கு உட்பட்டது அல்ல, இந்த இழப்பீட்டை சிறைத்துறை நிர்வாகமே நேரடியாக வழங்கும் என்பதால், உரியவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து தங்களுக்கான இழப்பீட்டைப் பெறுவது எளிதானது. இழப்பீட்டுக்காக அவர்கள் நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கத் தேவையில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com