தொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல! உஷார்... அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே!

குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.
தொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல! உஷார்... அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே!

அறியாக்குழந்தைகளை அம்மாவாக்கும் அசிங்கமான ஜென்மங்களை எல்லாம் துள்ளத் துடிக்க கழுவேற்றினால் ஒழிய சிறார் வன்முறை ஒழியாது! 

- என்றெல்லாம் நாம் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளைக் கடுமையாக நிந்திக்கலாம்.  அவர்களை நிந்திப்பதில் தவறே இல்லை, ஆனால் அதற்கெல்லாம் முன்பு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு; நம் வீட்டுக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமோ? என்பது தான் அது! ஒவ்வொரு பெற்றோரும் இந்தக் கேள்வியை தங்களுக்குள் பலமுறை கேட்டுப்பாருங்கள். கிடைக்கும் விடை உங்களுக்கே திருப்தியாக இருந்தால் சரி. இல்லையேல், இந்த விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டியவர்களாவீர்கள்.

எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் ‘கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்’ என்பதாக ஆகி விடக்கூடாது.

தொட்டுப் பேசுதல் என்பது தமிழர் நாகரீகம் அல்ல!

  • அதனால், குழந்தைகளுக்கான முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘குட் டச், பேட் டச்’ குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எது நல்ல தொடுகை?, எது கெட்ட தொடுகை? என்பதை குழந்தைகள் உணர்ந்து கொண்டால் அவர்களால் தங்களை முறைகேடாக அணுகும் கருப்பு ஆடுகளை எளிதில் அடையாளம் காண முடியும்.
  • பெற்றோர் இல்லாது தனித்திருக்க வேண்டிய சூழல் நேர்ந்தால் அத்தகைய சூழலில் உறவினரே ஆயினும் தவறான நோக்கத்துடன் தன்னை எவரேனும் அணுகினால் அதை உணர்ந்து கொண்டு எதிர்த்துக் குரலெழுப்பி தன்னை தற்காத்துக் கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு வர வேண்டும். அதற்கான பயிற்சிகளைச் சிறுகச் சிறுக குழந்தைகள் உள்ளத்தில் புகுத்த வேண்டியது பெற்றோரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
  • சில சம்பவங்களில், பாலியல் வல்லுறவுக்கு உட்படும் குழந்தைகள் சிலருக்கு, தங்களுக்கு நேர்ந்த அவலங்களே புரிவதில்லை. அத்தகைய சூழலில் தான் பாலியல் கல்வியின் அவசியத்தைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றும் கூட குழந்தை எப்படிப் பிறக்கிறது? என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குவதில் கூட நமக்கு எண்ணற்ற தர்ம சங்கடங்கள் உள்ளன. இன்றும் கூட ‘அம்மா வயிற்றில் பாப்பாவை வைப்பது கடவுள் தான்’ என்று நம்பும் ஆரம்பப் பள்ளி சிறுவர், சிறுமியர் இருக்கிறார்கள். எனவே பாலியல் கல்வி எத்தனை அவசியம் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் நாம்.
  • பாலியல் வன்முறை என்றால் என்ன? என்பதைப் பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது சற்றுச் சிரமமான காரியமே, ஆனால், அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் நம் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டு அதை நாம் தாமதமாக அறிந்து கொள்ள நேர்ந்தால் அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி நினைக்கையில் முன்னது சுலபமானது. பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறை என்றால் என்ன? அதன் மோசமான விளைவுகள் என்ன? என்பதைப் பற்றி மேலோட்டமாகவேனும் அறிவுறுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
  • பாலியல் உறவு தொடர்பாக டீன் ஏஜ் குழந்தைகளுக்கு பள்ளியில் பிற சிறுமிகளோ அல்லது உயர் வகுப்புச் சிறுமிகளின் மூலமாக பேச்சுவாக்கில் ஏதேனும் சிற்சில விஷயங்கள் தெரிய வந்து அதைக் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள குழந்தை பெற்றோரை நாடினால் அது நிச்சயம் ஆரோக்யமான விஷயம் என்று நம்புங்கள். ஆண் குழந்தைகள் எனில் தந்தையும், பெண் குழந்தைகள் எனில் தாயும் தம் குழந்தைகளின் சந்தேகங்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் நாசூக்காகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறி விளங்க வைப்பதே சிறந்தது.பாதுகாப்பானது. பெற்றோருக்கு அவ்விஷ்யங்களைக் குழந்தைகளுடன் விவாதிப்பதில் அசூயை இருப்பின் குழந்தைகள், தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பிறரை நாடி அது பிற்பாடு தேவையற்றை விபரீதங்களில் முடியலாம். இது நிச்சயம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல!
  •  
  • ஒரு வேளை திருவிழா கூட்டங்களிலோ, அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த சுற்றுலாத்தலங்கள் ஏதோவொன்றிலோ குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனியாகக் காணாமல் போக நேரிடும் பட்சத்தில், அப்போது குழந்தை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளையாட்டுப் போல அறிமுகம் செய்து வையுங்கள், இந்தக் காலத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என எவரையும் அறுதியிட்டு முத்திரை குத்த முடியாது. சூழலும் தவறுகள் நடக்க முக்கியமான வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. இம்மாதிரியான சமயங்களில் குழந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றி கூட்டாகப் பல குழந்தைகளை அழைத்து உட்கார வைத்து இதையும் விளையாட்டுப் போலக் கற்றுத்தர முயலலாம்.
  • குழந்தைகள் எளியவர்கள், உடல் வலிமையில் பெரியவர்களைக் அவர்களுக்கு வலு குறைவு, எனவே அடக்குமுறையைப் பிரயோகித்தால் பெரும்பாலான குழந்தைகள் பயந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை பாலியல் குற்றவாளிகளுக்கு நாம் தந்து விடக்கூடாது. பயந்த குழந்தைகளே அதிகமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றன என்பது பல்வேறு ஆய்வுக் கட்டுரை முடிவுகளின் பின் அனைவருக்கும் தெரிய வந்த உண்மை. எனவே எக்காரணம் கொண்டும் இக்காலக் குழந்தைகளை பயந்தவர்களாக வளர்த்து விடாதீர்கள். பயமும், பணிவும் அவசியமற்றவை. அறிவும், தெளிவும், துணிவுமே முக்கியமான வலு! பயத்தைக் காட்டிலும் பகுத்தறிவை ஊட்டி வளர்க்கலாம் குழந்தைகளை. பகுத்தறியத் தெரிந்த குழந்தைக்கு வளரும் போக்கில் எவ்விடத்தில், எவ்விதமாக நடந்து கொள்ள வேண்டும்?, யாரிடம், எப்படிப் பழக வேண்டும்? என்ற ஞானமும் தானே தெரிய வரும்.
  • எத்தனை நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி, குழந்தையிடத்தில் அனாவசியமாக உரிமை எடுத்துக் கொண்டு அடிக்கடி தொட்டுப் பேசுதல், கன்னத்தைக் கிள்ளுதல், தொடையில் கிள்ளுதல், பிருஷ்டத்தில் அடித்தல், குழந்தையிடம் தன் நெருக்கத்தைக் காட்டும் வண்ணம் தோளில் கை போட்டு கை வளையத்துக்குள் வைத்துக் கொண்டு பேசுதல் போன்ற அநாகரீகமான செயல்பாடுகளை அரங்கேற்றுகிறார்கள் எனில் உறவினர்கள் தானே... அதிலும் வயதானவர்கள் என அதைக் கண்டும் காணாமலும் சென்று பெற்றோர் அவர்களின் செயலை ஊக்குவிப்பது போல நடந்து கொள்ளத் தேவை இல்லை. குழந்தைகள் பெற்றோர்களிடம் கூடப் பகிரத் தயங்கி அசெளகரியமாக உணரக்கூடிய இம்மாதிரியான செயல்களை எப்போதும் அனுமதிக்காதீர்கள். 
  • மேலே சொன்னதைப் போலவே, உறவினர்களுக்குள் சின்னஞ்சிறுமிகளையும், சிறுவர்களையும் கைக்காட்டி ‘இவள் தான் என் பெண்டாட்டி, இவன் தான் உன் புருஷன்’ என்பது மாதிரியான வேடிக்கைப் பேச்சுகளையும் கூடத்தவிர்த்து விடுவது நல்லது. 
  • அன்பு, பாசம், பரிவு என்பது வேறு! பிறத்தியார் கண்களை உறுத்தும் வண்ணம் உறவினர்களே ஆனாலும் மேலே விழுந்து பழகுவது என்பது வேறு. ஒருவரிடத்தில் இருக்கும் அபிமானத்தையும், அன்பையும் இப்படித்தான் மேற்கத்திய ஸ்டைலில் காட்டியாக வேண்டும் என்பதில்லை. தந்தையானாலும், சகோதரனே ஆனாலும் மேலே விழுந்து புரண்டு பாசத்தைக் காட்ட வேண்டும் என்பது தமிழர் கலாச்சாரமில்லை. எனவே சொந்த தந்தையானாலும், சகோதர, சகோதரர்கள் ஆனாலும் ஒரு எல்லைக்குள் நின்று அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வித்தையை, நாகரீகத்தையும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியது பெற்றோரது கடமையே!

இறுதியாக ஒரு விஷயம்...

குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் மிக முக்கியமானது அவர்களை எந்த விதமான ஆபத்துகளும் அண்டாமல் பாதுகாப்பது.

அந்தக் கடமை யாருடையது? பெற்றோர்களுடையது தானே! பெற்றோர் இல்லாத பட்சத்தில் அந்தக் கடமை நெருங்கிய உறவினர்களுடையதாகிறது. நெருங்கிய உறவினர்களே கயவர்களாயிருக்கும் பட்சத்தில் அத்தைகைய குழந்தைகளின் நிலை என்ன? உபாயம் சொல்கிறோம் என சிலர் அரசுக்காப்பகங்களில் சேர்க்கச் சொல்லலாம். அங்கேயும் முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் நடக்காமலா இருக்கின்றன. மொத்தத்தில் இந்த உலகில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகளுக்கு முற்றிலுமாகப் பாதுகாப்பே இல்லை என்பது தான் உண்மை. சட்டங்கள் மனிதனைத் திருத்தவல்லவை அல்ல.

தனிமனித ஒழுக்கமே மனிதனை நல்வழிப்படுத்தக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com