சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ்; பலியான கருத்து சுதந்திரம்!

சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ்; பலியான கருத்து சுதந்திரம்!

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்படுவது நமது வரலாற்றில் புதிதல்ல. அதுவும் முழுக் கருத்து சுதந்திரம் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில்.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்படுவது நமது வரலாற்றில் புதிதல்ல. அதுவும் முழுக் கருத்து சுதந்திரம் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில். தற்போது அவ்வாறு பலியாகியிருப்பது பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி.

சமத்துவம் மற்றும் முற்போக்கு கொள்கைகளை உடைய இவர் பிரபல கன்னட வார இதழ் ‘லங்கேஷ் பத்ரிகா’வின் நிறுவனரும், ஆசிரியருமான பத்திரிகையாளர் லங்கேஷ் அவர்களது மகள். தந்தையைப் போல் சாமானிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் அவலங்களைப் போக்க அதிகார வற்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பத் தீர்மானித்து எழுதுகோலைக் கையில் எடுத்தார். 

“நிமிர்ந்த நன்னடை,
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்”  

என்று பாரதி கண்ட புதுமை பெண்ணிற்கு ஒரு தலை சிறந்த உதாரணம் கௌரி லங்கேஷ் என்று ஐயமில்லாமல் கூறலாம். ஆம், பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் தங்களது கால்களில் போட்டு மிதித்த ஆணாதிக்க சமூகத்திற்கு முன்பு அவர் சற்று நிமிர்ந்துதான் நடைபோட்டார். பொய்யுரைப்பவர்தான் பயப்பட வேண்டும், நான் உண்மைகளையே எனது கருத்துகளில் வெளிப்படுத்துகிறேன் என்று தன்னை எதிர்த்தவர்களை நேர்கொண்ட பார்வையுடன் எதிர் கொண்டார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று அரசாங்கத்தையே எதிர்த்து குரல் கொடுத்த அஞ்சாத நெறிகளைப் பெற்றிருந்தார். கண்மூடித்தனமாகக் கருத்துக்களை கூறாமல் உண்மையை உறக்கக் கூறினார்.

தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தம்பி இந்திரஜித் லங்கேஷுடன் இனைந்து லங்கேஷ் பத்ரிகா வார இதழை நிர்வாகிக்க முடிவு செய்தார். லங்கேஷ் பத்ரிகா-வின் ஆசிரியரான இவர் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் நக்ஸலைட் மறுவாழ்விற்கு உதவும் மனப்பான்மையுடன் பல செய்திகளை எழுதினார், ஆனால் இதழின் நிர்வாக பொறுப்பில் இருந்த இவரது தம்பி இந்திரஜித் அரசாங்கத்திற்கு எதிராக இவர் எழுதும் எழுத்துகளுக்குத் தடை போட்டார். இதனால் எழுந்த கருத்து மோதலால் தனியே ‘கௌரி லங்கேஷ் பத்ரிக்கா’ என்ற கன்னட வார இதழைத் துவங்கினார். அதன் நிர்வாக பொறுப்பையும், ஆசிரியர் பொறுப்பையும் இவர் இணைந்தே வகித்ததால் இவருடைய இடது சாரி கொள்கைகள் சார்ந்த எழுத்துக்கள் மேலும் வலுப்பெற்றன. இந்துத்துவ ஆதிக்கங்களுக்கு எதிராகப் பல செய்திகளை வெளியிட்டார், ஆளுங்கட்சியில் பெரிய பொறுப்புகளில் இருந்த ஊழல் வாதிகளின் முகத் திரைகளை கிழித்தெறிந்தார்.

பல அவதூறு வழக்குகளைச் சந்தித்த போதும் இவருடைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபடாமல், பத்திரிகை தர்மத்தையும் மீறாமல் காத்து நின்றார். இவர் இறுதியாக கர்நாடகாவின் ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிகொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக இவருடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கிறார்கள். நக்ஸலைட் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன், விரைவாக அந்த அமைப்பின் வாயிலாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் நக்ஸலைட் மக்களின் மறுவாழ்விற்கு வழி செய்யவுள்ளேன் என்பதே அவர் இறுதியாகப் பங்கேற்ற கூட்டத்தில் பேசியது.

இரவு 8 மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் இவரை நோக்கி 7 முறை சுட்டுள்ளனர், அதில் 3 தோட்டாக்கள் இவருடைய நெற்றியையும், நெஞ்சையும் துளைத்தது. சமூக சீர்கேடுகளை எதிர்த்துப் போராடியவரை நெற்றியில் திலகமிட்டு, மார்பில் பதக்கம் குத்திப் பாராட்டுவதற்கு பதிலாக மூன்று துப்பாக்கி குண்டுகளைப் பரிசளித்து பலியிட்டுவிட்டார்கள். 2015-ம் ஆண்டு மந்திரி ஒருவருக்கு எதிராக ஆதாரத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டதற்காக உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜகேந்திர சிங் என்கிற பத்திரிகையாளர் உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டார். இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அவரது மரணத்திற்கே நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரம், பெண்ணிய சுதந்திரம் என்றெல்லாம் கூக்குரலிடும் இந்திய நாட்டில் இன்று (05/09/2017) கருத்து சுதந்திரமே கொல்லப்பட்டுவிட்டது என்றுதான் வரலாற்றுப் பக்கங்கள் பதிவு செய்யும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com