ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு!

ஒருவழியாக தற்போது அந்த வீட்டை இடிக்க அதன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட பின் 14 வருடங்களாக நிலைத்து நின்ற அந்த வீடு வெறும் 90 நிமிடங்களில் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது
ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு!

நடு மரத்தில் ஆணி அடித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கே சீனாவில் நட்ட நடுச்சாலையில் ஒரு வீடே, ஆணி அடித்தாற் போல கடந்த 14 வருடங்களாக அசையாமல், அசைக்க முடியாமல் நின்று கொண்டிருந்து அரசாங்கத்தை வந்து பார் என கண்ணில் விரல் விட்டு ஆட்டாத குறையாக அடம் பிடித்து நீடித்திருந்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் அனுமதிப்பார்களா என்ன? ஆளும், பேரும் தெரியாமல் வீட்டு ஓனரை அள்ளிக் கொண்டு வந்து மொத்தி, இடத்தை எழுதி வாங்கி ...வீட்டை இடித்து எப்போதோ அரசுக்குச் சொந்தமான இடமாக ஆக்கியிருப்பார்கள். ஆனால் அங்கே அதெல்லாம் சாத்தியப் பட்டிருக்கவில்லை. 

நாட்டின் பிரதான சாலையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த இந்த நடுச்சாலை வீட்டை குறிப்பிட்ட தொகையை காம்பன்சேஷனாகப் பெற்றுக் கொண்டு அரசுக்கு விற்றுவிடுமாறு சீன அரசு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த விசேஷமான வீட்டின் உரிமையாளர்களுக்கோ கடந்த 14 வருடங்களாக அரசின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க விருப்பமில்லாமலே இருந்து வந்தது. அதன் பலன்... வீடிருக்கும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வீட்டை இடித்து விட்டு அந்தச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றினால் அந்தப் பாதையைப் பயன்படுத்தும் அனேகம் பேருக்கு மிகுந்த நேர விரயம் தவிர்க்கப் படலாம் எனும் நிலை. ஆனால் வீட்டு உரிமையாளர்களைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் சீன அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

நெயில் ஹவுஸ் என்றழைக்கப்படும் அந்த வீடு அப்படித்தான் கடந்த 14 வருடங்களாக நட்டநடுச் சாலையில் வாகன ஓட்டிகளுக்குப் பெருத்த இடைஞ்சலாக அந்த இடத்தில் நீடித்து வந்தது. ஒவ்வொரு முறை அந்த வீட்டைக் கடக்கும் போதும் தேசிய நெடுஞ்சாலை தானே என்று வேகமாக கடந்து விட முடிவதில்லை. வீடு நெருங்கும் போது வேகத்தை மொத்தமாகக் குறைத்து பிறகு மீண்டும் பழைய வேகத்தில் பயணிக்க வேண்டும். இது அந்தச் சாலையைப் பயன்படுத்துவோருக்கு மிகுந்த இடைஞ்சலாக இருந்தது.

ஒருவழியாக தற்போது அந்த வீட்டை இடிக்க அதன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட பின் 14 வருடங்களாக நிலைத்து நின்ற அந்த வீடு வெறும் 90 நிமிடங்களில் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. வீட்டை இடிப்பதற்கு முன் இடிப்பாளர்கள் முதலில் வீட்டின் மீது ஹெல்காப்டர் மூலம் நீர் தெளித்து பெரிதாக தூசு மண்டலம் எழும்பாமல் பார்த்துக் கொண்டனர். தற்போது வீட்டை இடிக்க ஒப்புக் கொண்டவகையில், வீட்டு உரிமையாளர்களுக்கு 4 வீடுகளும், 2.7 மில்லியன் யென்கள் பணமும் இழப்பீடாக வழங்கப்படவிருப்பதாக சீன ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com