9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை: திருமணவிழாவில் நிகழ்ந்த பயங்கரம்!

இட்டா மாவட்டத்திலுள்ள கெல்த்தா கிராமத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெற்றோருடன் சென்றிருந்த 9 வயதுக் குழந்தை ஒன்று திருமண நாளன்று இரவில் திடீரெனக் காணாமல் போனார்.
9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை: திருமணவிழாவில் நிகழ்ந்த பயங்கரம்!

காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுப்பப் பட்டு இவ்வேளையில் கடந்த வியாழன் அன்று உத்தரப்பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் அரங்கேறிய மேலுமொரு பாலியல் பலாத்காரக் கொலை கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இட்டா மாவட்டத்திலுள்ள கெல்த்தா கிராமத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெற்றோருடன் சென்றிருந்த 9 வயதுக் குழந்தை ஒன்று திருமண நாளன்று இரவில் திடீரெனக் காணாமல் போனார். விழா நிகழ்வுகளில் ஆழ்ந்திருந்த குழந்தையின் பெற்றோர் இரவு விருந்தின் போது தங்களது மகளைத் தேடிச் செல்ல அப்போது தான் சிறுமி காணாமல் போன விஷயம் தெரியவந்திருக்கிறது. திருமண வீடு என்பதால் அதில் பங்கேற்க வந்திருந்த பிற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்த தங்கள் மகளைக் காணோம் என்றதும் திகைத்துப் போன பெற்றோர் சிறுமியைத் தேடத்துவங்கினர். இரவு முழுவதும் தேடிய பின்னர் சிறுமியின் சடலம் பலத்த காயங்களுடன் திருமண நடந்த இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அத்துவானப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த பிற குழந்தைகள் அளித்த சாட்சியங்களின் படி, திருமண நாளன்று இரவு விருந்துக்கு முந்தைய பொழுதில் திருமண விருந்து தயார் செய்வதற்காக வந்திருந்த சமையற்காரர்களின் குழுவில் இருந்த பிண்டு குமார் என்பவனுடன் அந்தக் குழந்தையைக் கடைசியாகக் கண்டதாகத் தெரியவந்தது. 25 வயது பிண்டு குமார் சமையல் உதவியாளராக சமையற்காரர்கள் குழுவுடன் வந்தவன். இரவு விருந்துக்கு முந்தைய மது விருந்தில் தனது மதுவில் தண்ணீர் கலக்க சிறுமியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறான். சிறுமி தண்ணீர் கொண்டு வந்து தரவே, அப்போது மது அருந்திய போதையில் சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் அவளை அருகிலிருக்கும் கடைக்கு அழைத்துச் சென்று விரும்பியதை வாங்கித்தருவதாக ஆசை காட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறான். மது போதையில் சிறுமியை புதர் போன்ற அத்துவானப் பகுதிக்கு அழைத்துச் சென்றவன் அங்கே வைத்து 9 வயதுச் சிறுமியென்றும் பாராமல் தனது தகாத ஆசையை நிறைவேற்றிக் கொண்டு சிறுமியை கொலையும் செய்திருக்கிறான். இத்தனைக்கும் காரணம் மது போதை.

சிறுமியை அவனுடன் கடைசியாகக் கண்ட உறவுக்காரக் குழந்தைகள் அளித்த சாட்சியத்தின் படி தற்போது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும், கொலை செய்த குற்றத்துக்காகவும், கொலைக்குப் பின் சாட்சியங்களை மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுமியைக் கொன்ற பிண்டு குமார் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இந்தப் பகுதியில் இதே போன்றதொரு கொடூர சம்பவம் கடந்த செவ்வாயன்றும் அரங்கேறியிருக்கிறது. காஷ்மீர் சிறுமி விவகாரத்தால் அந்தச் செய்தி அப்படியே அமுங்கி விட்டது. கிட்டத்தட்ட கெல்த்தா கிராமத்துச் சிறுமிக்கு நேர்ந்ததைப் போலவே அதே மாவட்டத்தின் சித்தல்பூர் கிராமத்தில் இதே போல திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த 7 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். உத்தரப் பிரதேசத்து இட்டா மாவட்டத்தில் இது இரண்டாவது சம்பவம். பாஜக துறவி, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ள உத்தரப் பிரதேசத்தில் அறியாச் சிறுமிகள் இப்படி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுவது வாடிக்கையாகி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை படுகொலைகளின் விகிதாச்சாரம் 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2016 ஆம் ஆண்டில் 82% அதிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நாடு முழுவதும் பதிவாகும் இத்தகைய பாலியல் வன்முறைக் குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே 15% பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எப்பகுதியிலாக இருக்கட்டும், எந்த மாநிலத்திலாக இருக்கட்டும், இந்திய சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது சிறுமிகளை பகடைக்காய்களாக வைத்து யாரும் எளிதில் எண்ணிப்பார்க்க அஞ்சக் கூடிய விதத்தில் இப்படியான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான பலாத்காரச் செயல்கள் அரங்கேறி வருவது மிக மிகக் கேவலமான செயல் மட்டுமல்ல, இந்தியர்களான நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலும் தான் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது கண்டனத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், யாருடைய கண்டனத்தையும் பொருட்படுத்தாது இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைவதாக அரசு புள்ளி விவரக் கணக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது நிஜம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com