'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்!

இப்படி ஒரு வேண்டுகோளை துணை ஜனாதிபதியே முன்வைக்கும் போது அதில் ஊடகங்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடக் கூடாது எனும் மிரட்டல் தொனி தான் அதிகம் தெரிகிறது.
'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்!

சமீபத்தில் நமது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள்,  ‘ஊடகங்கள் செய்திகளின் மீது வண்ணம் பூச வேண்டாம்’ விவசாயிகள் பிரச்னை குறித்து மக்களிடம் உரிய வகையில் எடுத்துச் சென்று அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்களின் கடமை.  என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து நடத்தப் பட்ட ஒரு விவாத நிகழ்ச்சியில் மூத்த பத்திரியகையாளர், அரசியல் விமர்சகர், அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதி எனப் விவரமறிந்த சிலர் முன் வைத்த விமர்சனங்களைப்  பற்றி தினமணி வாசகர்களின் கருத்து என்ன? என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த விவாத நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் கீழே பகிரப்பட்டுள்ளது.

ஜெனிஃபர் வில்சன் (ஊடக நெறியாளர்)

செய்திகளை முந்தித் தரும் போட்டி அனைத்து ஊடகங்களுக்கும் இருக்கிறதா இல்லையா? அரசாங்கம் எதை மறைக்க நினைக்கிறதோ அதை வெளியில் கொண்டு வருவது தான் ஊடகங்களின் பணி அப்படி இருக்கையில் ஒரு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருப்பவரே, ஊடகங்கள் அரசின் நலத்திட்டங்களை மட்டுமே வெளிச்சமிட்டுக் காட்டினால் போதும், பிற விஷயங்களில் எல்லாம் தலையிடாதீர்கள் என மிரட்டுவது போல ஒரு கருத்தை முன் வைப்பது சரியா?  

ராமசுப்ரமண்யன் (அரசியல் விமர்சகர்) 

ஆங்கில ஊடகங்கள் சமீபகாலங்களாக இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மும்பை தாக்குதல் விவகாரத்தின் போது பர்கா தத் போர் முனையில் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாத, ராணுவம் அனுமதிக்க மறுக்கும் எல்லை வரை சென்று செய்தி சேகரித்து ராணுவ ரகசியங்களை எல்லாம் ஊடக வெளிச்சமிட்டுக் காட்டியதால் தான், அவர் அந்த இடத்தை விட்டு அகன்ற அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் சொல்லி அடிப்பதைப் போல நான்கைந்து இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது. பர்கா தத் மாதிரியான செய்தியாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வண்ணம் அப்படிச் செய்தது முற்றிலும் தவறு. ஊடகங்களின் மீதான அதிருப்திக்கு அதுவும் ஒரு காரணம்.

அது மட்டுமல்ல, கெளரி லங்கேஷ் கொலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில்... கொலை நடந்த சமீபத்தில் கொலைக்கான காரணகர்த்தர்கள் ஆளும் பாஜக அரசின் கிளைக்கட்சியான ஆர்எஸ்எஸ் வெறியர்கள் தான் என அனைத்து ஊடகங்களும் குற்றம் சுமத்தின. ஆனால், தற்போது கொலைக்கான காரணம் சொந்தப் பகையாக இருக்குமோ என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. கெளரி லங்கேஷின் தந்தை தொடங்கிய பத்திரிகையை யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக மூண்ட பகையின் காரணமாக நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன, அதனடிப்படையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரை ஊடகங்கள் என்ன செய்தன? கெளரி லங்கேஷ் கொலையுண்ட உடனேயே அதற்கான காரணம் பாஜகவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதாக அல்லவா நிறுவப் பார்த்தன! அப்படியான சூழலில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை குறையாமல் என்ன செய்யும்?

ஆசிய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதற்கு ஆளில்லை. மத்திய பாஜக செய்யும் நல்ல விஷயங்களை எல்லாம் ஊடகங்கள் முன் வைப்பதில்லை என்று வெங்கய்ய நாயுடு கூறுகிறார். அதைச் செய்ய வேண்டியதும் ஊடகங்களின் கடமை தான்.

அய்ய நாதன் (மூத்த பத்திரிகையாளர்) 

மும்பை தாக்குதலின் போது லைவ் டெலிகாஸ்ட் செய்தது தவறு என சுட்டிக்காட்டுபவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறார்கள், உலகில் எங்கு போர் நடந்தாலும், போரில் முதலில் சாவது உண்மை தான். அதை வெளியே கொண்டு வரத்தான் ஊடகத்தினரை போர் முனையில் அனுமதிக்கின்றனர். போர் முனையின் அப்பட்டமான உண்மைகளை ஊடகம் வெளியில் கொண்டு வந்ததற்கான மிகச்சிறந்த உதாரணம் இலங்கை உள்நாட்டுப்போர் குறித்த செய்திகளைப் பதிவு செய்து வெளியிட்டதன் பின்னரே மக்களுக்கு அப்போரில் பின்பற்றப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடூரச் செயல்கள் பற்றி முழுதாகத் தெரியவந்தது. வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது அப்போர் குறித்து ஊடகங்களில் வெளிவந்த ஒற்றப் புகைப்படம் தான்.
அதேபோல இலங்கைப் போரின் கொடூரம் முடிவுக்கு வந்ததும் ஊடகங்களால் தான். மக்களின் உரிமைகள் போரைக் காரணம் காட்டி எவ்விதம் நசுக்கப் படுகின்றன என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. மக்களின் உரிமையைப் பாதுகாப்பது தான் ஊடகங்களின் தர்மம்.
 
சரீப் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி)  

ஊடகங்கள் உண்மையைச் சொல்வதா? அல்லது அரசுக்கு ஆதரவான செய்தியைச் சொல்வதா? வெங்கய்ய நாயுடுவின் ஊடகங்கள் மீதான ஆதங்கம் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது. அரசின் பிரச்சார பீரங்கியாகத் தான் அனைத்து ஊடகங்களும் இயங்க வேண்டும் என அவர் விரும்புகிறார். சாமானியர்களின் மனதில் நல்லாட்சி நடத்தும் அரசின் மீது கூட சில குற்றம் குறைகள் இருக்கத்தான் செய்யும். அரசு தனக்கு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற குறைபாடு அப்போது அரசின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும் வேலையை ஊடகங்கள் தான் செய்ய வேண்டும். போர்முனையில் ஊடகப் பணியாற்ற பர்கா தத்துக்கு அனுமதி அளித்தது யார்? இந்த அரசின் அதிகாரிகள் தானே? செய்திகளை முந்தித் தர வேண்டும் எனும் நிர்பந்தம் ஊடகங்களுக்கு இருக்கிறது. பரபரப்பான முக்கியச் செய்திகள் அனைத்தும் அரசு சார்பில் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே தனியார் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு விடுகின்றன. இன்றைய அரசு தங்களுக்கு எதிரான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என எதிர்பார்க்கிறது. ஆனால், இம்மாதிரியான வேண்டுகோளை ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, ஒரு எம்.பி யோ முன் வைத்தால் அது வேறு விதமாக நோக்கப்படும் ஆனால் இப்படி ஒரு வேண்டுகோளை துணை ஜனாதிபதியே முன்வைக்கும் போது அதில் ஊடகங்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடக் கூடாது எனும் மிரட்டல் தொனி தான் அதிகம் தெரிகிறது.

விவசாயிகள் பிரச்னை குறித்து அரசுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதை ஊடகங்கள் தான் எடுத்துப் பேச வேண்டும்... மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இதன் அர்த்தம் விவசாயிகள் விஷயத்தில் அரசு கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

இப்போது வாசகர்கள் நேரம், ஊடகங்களில் மக்கள் வெறுக்கும் அம்சம் என்ன? ஒரு செய்தியை ஊடகங்கள் எப்படிச் வெளியிடக்கூடாது? எப்படி வெளியிட வேண்டும்? என்பது குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்தான உங்களது மேலான கருத்துக்களை முன் வையுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com