நிலத்தை உழுதால் இந்திரன் மழையைக் கொண்டு வருவானா? இந்த இளம்பெண்களின் நம்பிக்கை ஈடேறுமா?

மேற்கண்ட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே உத்தரப் பிரதேசத்தில் அந்த இளம்பெண்கள் இந்திரன் மனம் குளிர்ந்து மழையாகப் பொழிவான் எனும் மிகுந்த நம்பிக்கையோடு தங்களது நிலத்தை ஏர்கலப்பையால் உழுது கொண்டிருக்கி
நிலத்தை உழுதால் இந்திரன் மழையைக் கொண்டு வருவானா? இந்த இளம்பெண்களின் நம்பிக்கை ஈடேறுமா?

மழை வேண்டி வருணனையும், இந்திரனையும் துதிப்பதும், அவர்களை மகிழ்விக்க யாகங்கள் நடத்துவதும் வேதகால நாகரீகத்தின் போது பின்பற்றப்பட்ட பழக்கங்களில் ஒன்று. இப்போதும் அந்தப் பழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்படி பெரும்பொருட்செலவுடன் யாகங்களை நடத்துபவர்கள் செல்வந்தர்களாகவும், அரசியல்வாதிகளாகவுமே இருப்பார்கள். சாதாரண மக்களில் யாரும் இப்படி யாகங்கள் நடத்துவதில்லை என்றாலும் அவர்களுக்கும் அப்படியான நம்பிக்கைகள் பலமாகவே இருக்கின்றன. மக்களில் சிலர் கழுதைகளுக்குத் திருமணம் செய்வதும், தவளைகளுக்குத் திருமணம் செய்வதும். ஏன் சில இடங்களில் எறும்புகளுக்குக கூட திருமணம் செய்விக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்... மக்களது நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவையெல்லாம். மக்கள் ஏன் இப்படியான விஷயங்களை எல்லாம் நம்புகிறார்கள் எனில், ‘நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்பதால் தான். மழையின் அத்யாவசியம் அப்படிப்பட்டதாக இருப்பதால்... மழை பொய்த்துப்போனால், வராத மழையை கட்டி இழுத்துக் கொண்டு வர வைக்கவே இத்தகைய உத்திகளை அவர்கள் கையாள்கிறார்கள்.

இவற்றைத் தவிர்த்து மழை வேண்டி தொடர்ந்து நிலத்தை உழும் புது விதமான நம்பிக்கையொன்றை உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு இளம்பெண்கள் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அறிமுகப்படுத்த இதொன்றும் புதிய உத்தியில்லை... முன்பே வேத காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும் பருவ மழை பொய்த்துப் போன காலங்களில் வராத மழையை வரவழைக்க மக்கள் அதீத நம்பிக்கையுடன் நிலத்தை உழுது வைப்பது வழக்கம் தான். ஆனால், அந்தப் பழக்கத்தை இந்த தலைமுறையில் இப்பெண்கள் மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி பலித்தால் நல்லது. 

வேத காலம் மழைக்கடவுளாக இந்திரனைக் குறிக்கிறது. எனவே, உத்தரப் பிரதேச விவசாயி ஒருவரின் மகள்களான இவ்விரு பெண்களும் தமது தந்தையுடன் இணைந்து மழை வேண்டி இந்திரனைத் துதித்து நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்கள். உழுவது என்றால் டிராக்டர் வைத்து அல்ல, நிலத்தில் இறங்கி ஏர்கலப்பை பிடித்து மனம் முழுக்க மழை குறித்த மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஐந்தாண்டுகளாகவே போதிய மழையின்றி வறண்டு கிடக்கும் தங்கள் நிலத்தை ஆழ உழுது கொண்டிருக்கிறார்கள். 

இந்த முறையாவது மழை பொய்க்காது பூமி தழுவினால் மாத்திரமே தங்களால் ஜீவிக்க முடியும் என்பதால் அவர்கள் தங்களது நம்பிக்கையொன்றை மட்டுமே பற்றுக்கோடாக வைத்து நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்கள். இப்படி உழுவதால் இந்திரனின் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. மழைக்கடவுளான இந்திரனை மகிழ்விக்க ஆயர்கள் பெரும் யாகங்களை நடத்தி இந்திர விழா எடுப்பதாக மகாபாரதத்தில் வரும். ஆயர்களின் தலைவனான கிருஷ்ணன் இந்திர வணக்கத்தையும், இந்திர விழாவென்ற பெயரில் கால்நடைகள் யாகத்தில் பலியிடப்படுவதை எதிர்த்தும் ஒரு சமயத்தில் இந்திரனுக்கான விழாவை தடுத்தி நிறுத்து விடுகிறார். அப்போது கோபம் கொண்ட இந்திரன் பெருமழையாகக் கொட்டித் தீர்க்க ஒட்டுமொத்த ஆயர்பாடியும் வெள்ளத்தில் மூழ்காது தடுக்க கோவர்த்தனகிரி மழையை கிருஷ்ணன் குடையாகப் பிடித்தார் என்கின்றன பாகவத புராணக் கதைகள். 

மேற்கண்ட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே உத்தரப் பிரதேசத்தில் அந்த இளம்பெண்கள் இந்திரன் மனம் குளிர்ந்து மழையாகப் பொழிவான் எனும் மிகுந்த நம்பிக்கையோடு தங்களது நிலத்தை ஏர்கலப்பையால் உழுது கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின் பால் இப்படி செய்வது நல்ல விளைவைத் தரலாம். ஒருவேளை இயற்கை இம்முறையும் பொய்த்தாலும் இந்தப் பெண்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். விவசாயம் பட்டுப் போகும். அதைத் தாண்டி இந்த நம்பிக்கையால் சமூகத்துக்கு எந்தவிதமான கேடும் இல்லை. ஆனால், இதே மாதிரியான நம்பிக்கையோடு தான் நாட்டில் பலர் மழை வேண்டி தவளைகளுக்குக் கல்யாணம் செய்யலாம், நாய்களுக்குக் கல்யாணம் செய்யலாம், கழுதைகளுக்குக் கல்யாணம் செய்யலாம் என்று வினோதமான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள்.

அது சமூகத்திற்கு கேடோ இல்லையோ? நிச்சயம் அந்தந்த விலங்குகளுக்கு உயிர் வதையாகக் கூட இருக்கலாம்.

எனவே மழைக்கடவுள் இந்திரனே! தயவு செய்து மக்கள் மழை வேண்டி மேலும் புது தினுசாக ஏதாவது வினோத சம்பிரதாயங்களைத் தொடங்கும் முன் தயவு செய்து அந்தந்த வருடக்கோட்டா மழையை மட்டும் அவ்வப்போது சரியாக டெலிவரி செய்து விடுங்களேன் பிளீஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com