பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி!

பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு பேருந்தில் ஏறும் ஆண்களில் எவரும் இந்த கேமராக்களில் அகப்படுவதில்லை. பொதுப்பேருந்துகளில் எப்போதுமே கூட்டம் அதிகமிருக்கும்.
பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி!

குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி. 

‘பொதுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்பது மக்களின் பணத்தை வீணடிப்பதற்குச் சமமானது. ஏனெனில் பேருந்துகளில் பெண்கள் பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படியான சமயங்களில் அத்தகைய பேருந்துகளில் எடுக்கப்பட்ட கேமரா ஃபூட்டேஜுகள் எதுவுமே இதுவரை பலனளித்தது இல்லை. பொதுப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும் போது அவர்களது உடலில் படக்கூடாத இடங்களில் கை வைப்பது, இடிப்பது மாதிரியான சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேற்றப்படும். ஆனால் அந்தக் காட்சிகள் எதுவும் கேமராக்களில் பதிவாவதில்லை. ஏனெனில் பேருந்துகளில் பொருத்தப்படும் கேமராக்கள் நிலையானவை. அவை சுழல் கேமராக்கள் இல்லை. பேருந்தில் பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு பேருந்தில் ஏறும் ஆண்களில் எவரும் இந்த கேமராக்களில் அகப்படுவதில்லை. பொதுப்பேருந்துகளில் எப்போதுமே கூட்டம் அதிகமிருக்கும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான். எனவே பொதுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வீணான வேலை தேவையில்லை.அத்தகைய கேமராக்களை எங்கு பொருத்தினால் அதனால் நிஜமான, நிறைவான பலன்கள் கிடைக்கக் கூடுமோ அங்கே அந்த கேமராக்களைப் பொருத்தினால் மட்டுமே அதனால் பலன் உண்டு எனும் போது பேருந்துகளில் பொருத்த முயல்வது வீண் வேலை என்கிறார் மேனகா காந்தி. பெண்கள் நலத்துறை அமைச்சகம் சார்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் சில பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், அவற்றால் இதுவரை ஒரு பயனும் இல்லை. எனவே டெல்லி மாநில அரசின் வேண்டுகோளின் படி, நிர்பயா நிவாரண நிதியிலிருந்து  பணம் எடுத்து  டெல்லி கார்ப்பரேஷன் பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் மறுத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com