624 / 625 மதிப்பெண் பெற்ற மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து சென்ட்டம் பெற்ற அதிசயம்!

மொத்த மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைந்ததை முகமது கைஃப் ஆல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
624 / 625 மதிப்பெண் பெற்ற மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து சென்ட்டம் பெற்ற அதிசயம்!

கர்நாடக மாநிலம் கெல்காவியில் இருக்கும் செயிண்ட் சேவியர்ஸ் இங்க்லீஷ் மீடியம் ஹை ஸ்கூல் மாணவரான முகமது கைஃப் முல்லா, அம்மாநில ஸ்டேட்போர்டு கல்வித்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளிவந்த போது முகமது கைஃப் 625 மதிப்பெண்களுக்கு 624 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவராக அறிவிக்கப்பட்டார். மொத்த மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைந்ததை முகமது கைஃப் ஆல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அறிவியல் பாடத்தில் மட்டும் 1 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டு இருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல், முகமது கைஃப் மீண்டும் மறு மதிப்பெண் கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இம்முறை அறிவியல் பாடத்தில் 1 மதிப்பெண் கூடுதலாகக் கிடைத்ததில் முகமது கைஃபின் எதிர்பார்ப்பு பலித்தது. மொத்தப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று தனது கனவை நனவாக்கிக் கொண்டார். இப்போது முகமது கைஃப் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர் அல்ல, முதலிடம் பெற்ற மாணவர்களில் அவரும் ஒருவர் என்பதில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி!

தற்போது மேல்நிலைக் கல்வி பெறுவதற்காக RLS College of KLE Institution for the PU (science) study ல் இணைந்திருக்கும் முகமது கைஃபின் அடுத்த கனவு ஐஏஎஸ் அதிகாரியாவது மட்டுமே. தனது மேற்படிப்பை முடித்து விட்டு குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதிலும், போராடுவதிலும் பெருவிருப்பம் கொண்டிருக்கும் முகமது கைஃப் நமது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுவதும் அதைத்தான்.

மேற்படிப்பை முடித்து விட்டு தகுதி வாய்ந்த அதிகாரியாக அரசின் மக்கள் நலனுக்கான கொள்கை வரைவுத் திட்டக் குழுவில் தானும் பங்கேற்கும் நேரம் வரும் போது தான் முன்னுரிமை தரும் பிரச்னைகளில் முதலிடம் பெறுவது குழந்தை தொழிலாளர் பிரச்னையாகவே இருக்கும். என்னால் முடிந்தவரை வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்க ஆவண செய்வேன். ஏனெனில் கல்வி மட்டுமே அந்தக் குழந்தைகளின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை வழங்கக் கூடியது. மிக மோசமான வாழ்வாதரங்களைப் பெற்றுள்ள அந்தக் குழந்தைகளை அதிலிருந்து மீட்டெடுக்க உதவக் கூடியது கல்வி மட்டுமே. எனவே அவர்களது கல்வி உரிமையில் நான் அதிகம் கவனம் செலுத்த விரும்புவேன் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

முகமது கைஃபின் பெற்றோர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். தந்தை ஹரூன் ரஷித் முல்லா உருது ஆசிரியர். தாயார் பர்வீன் முல்லா அரசுப் பள்ளியொன்றில் கன்னடம் கற்பிக்கும் ஆசிரியை. தங்களது மகனின் கனவு அவனது கடின முயற்சியால் நனவானது கண்டு பெருமிதப்பட்டு நிற்கும் அந்தப் பெற்றோரே முகமது கைஃபின் ரோல்மாடல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com