உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்... பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்ட்டனி போர்டைன் தற்கொலை!

அமெரிக்காவில் கடந்த 1999 முதல் 2016 வரையிலான தற்கொலை கணக்கெடுப்பு விகிதத்தை ஆராய்ந்ததில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 45,000 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கின்றனர்.
உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்... பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்ட்டனி போர்டைன் தற்கொலை!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்டனி போர்டைன் 8.6.2018 அன்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டு மரணத்தைத் தழுவினார். சிஎன் என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஃபுட் & டிராவல் தொடரான பார்ட்ஸ் அன்னோன் (உலகின் அறியப்படாத பகுதிகள்) மூலமாக உலகப் புகழ் பெற்றவரான போர்டைன் ஃபிரெஞ்சு ஐந்து நட்சத்திர விடுதியறையொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட செய்தி உலகம் முழுவதுமிருக்கும் அவரது ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவைப் பொருத்த வரை இந்த தற்கொலையானது சமீபகாலமாக மக்களை அதிர வைத்திருக்கும் இரண்டாவது பெரிய தற்கொலையாகும். மறைந்த ஆண்டனி போர்டைனுக்கு வயது 61.

ஃபிரான்ஸில் இருக்கும் ஸ்ட்ராஸ்பர்க் நட்சத்திர விடுதியில், தான் பங்கேற்று நடத்தி வரும் ஃபுட் & டிராவல் தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளவெனத் ஆண்டனி போர்டைன் தங்கியிருந்த சூழ்நிலையில் தான் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என சி என் என் தொலைக்காட்சி பிரதிநிதி தெரிவித்துள்ளார். போர்டைன் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரான கேட் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டார். கேட் ஸ்பேட் தான் வடிவமைத்த சிக்னேச்சர் ஹேண்ட்பேக்குகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பால் அமெரிக்க டிசைனர் உலகையே கட்டியாண்டவர். திடீரென கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தனது அபார்ட்மெண்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியிலிருந்தே அமெரிக்கர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த அகில உலகப் புகழ் செலிபிரிட்டி செஃப் ஆண்டனி போர்டைனின் தற்கொலைச் செய்தி அமெரிக்கர்களை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்ட்டனி போர்டைனின் தொலைக்காட்சி ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1999 முதல் 2016 வரையிலான தற்கொலை கணக்கெடுப்பு விகிதத்தை ஆராய்ந்ததில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 45,000 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கின்றனர். அவர்களது மரணத்துக்கான காரணங்களை US  சென்ட்டர் ஃபார் டிஸீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்சன் துறை ஆராய்ந்ததில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அல்சைமர்ஸ் நோய் பாதிப்பால் உட்கொள்ளும் மருந்துகள் ஓவர் டோஸ் ஆவதால் மனிதர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வலுக்கிறது என்பதே!

போர்டைன் பிரபலமாகத் தொடங்கியது 1999 ஆம் ஆண்டில். நியூ யார்க்கர் பத்திரிகை முதன்முறையாக போர்டைனின் உணவு தொடர்பான கட்டுரை ஒன்றை "Don't Eat Before Reading’ எனும் தலைப்பில் தொடராக வெளியிடத் தொடங்கியது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2000 மாவது ஆண்டில்  "Kitchen Confidential: Adventures in the Culinary Underbelly.
என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமிருக்கும் உணவுப் ப்ரியர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

புத்தக வெளியீட்டால் கிடைத்த பிரபலத்தன்மை மற்றும் புகழின் அடிப்படையில் அடுத்ததாக போர்டைன் உள்ளூர் ஃபுட் நெட்வொர்க் மற்றும் டிராவல் தொடர்பான தொலைக்காட்சி சேனலொன்றில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். 2013 ல் சிஎன்என் தொலைக்காட்சியில் சேரும் முன்பு வரை போர்டைனின் வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது.

சாகஸமாக நிகழ்ச்சியை நடத்திச் செல்வதில் இருக்கும் ஆர்வம், புதுப்புது நண்பர்களைத் தேடிக்கொள்ளும் ஆர்வம், அருமையான சமையல் திறன், சமைப்பது மட்டுமல்ல அவற்றைப் பற்றி மணிக்கணக்கில் கேட்பவர்களுக்கு சலிக்காத வகையில் மிக அருமையாகக் கதைகள் சொல்லத் தெரிந்த நேர்த்தி என போர்டைனின் திறமைகள் அத்தனையும் அவரது ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் மாயக்கயிறுகளாயின. அவரது சி என் என் சேனல் ஃபுட் அண்ட் டிராவல் தொடருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பரவியது இப்படித்தான். எனவே போர்டைனின் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா தவிர உலகம் முழுவதிலும் பரவலாகக் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவு. நம்மூர் துல்கர் சல்மான் கூட ஆண்ட்டனி போர்டைன் ரசிகரே! எனக்கும், என் அப்பாவுக்கும் மிகப்பிடித்த செஃப் இவர். நாங்கள் ஒரு முறை இவரை நேரில் சந்திக்க சென்றிருந்த போது எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அனுப்பி வைத்தார். பழகுவதற்கு மிக இனிமையானவரான செஃப் ஆன் ட்டனி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இதை என்னால் நம்ப முடியவில்லை’ என துல்கர் ட்விட்டரில் துக்க ஸ்டேட்டஸ் தட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்டனியின் மரணத்திற்காக சி என் என் சேனல் தரப்பும் தங்களது துக்கம் கலந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது. செஃப் ஆண்ட்டனி போர்டைனின் சமையல் மற்றும் கதை சொல்லி நிகழ்ச்சி நடத்தும் திறமை ஒருபோதும் எங்களுக்கு சலித்ததில்லை. அவரது மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. செஃபை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வாழ்வின் இத்தகைய கடுமையான சூழலை அவர்கள் கடந்து வர நாங்கள் எங்களால் முடிந்தவரை உதவுவோம். அவரது மகள்கள் மற்றும் மனைவியின் மனம் துக்கத்தில் இருந்து விடுபட்டு வெளிவந்து இயல்பு வாழ்க்கை பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என சேனல் தரப்பு தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

செஃப் தற்கொலை செய்து கொண்டதற்கு தீவிரமான மன உளைச்சலே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் கருத்துச் சொல்லி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com