5 நட்சத்திர விடுதியில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சுற்றுலாப் பயணிகள்!

புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிசிடிவி ஃபூட்டேஜ் ஆதாரங்கள் அடிப்படையில் ஐடிசி ராஜபுதனா 5 நட்சத்திர விடுதியின் ஜெனரல் மேனேஜரான ரிஷி ராஜ் சிங் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்
5 நட்சத்திர விடுதியில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சுற்றுலாப் பயணிகள்!


பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா அங்கம் வகிக்கிறது என நேற்றுத்தான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ திரும்பிப் பார்ப்பதற்குள் அதை மெய்ப்பிப்பது போலொரு சம்பவம் ராஜஸ்தானில் பிரபல 5 நட்சத்திர விடுதியொன்றில் அரங்கேறியிருக்கிறது. ஐடிசி ஹோட்டல்கள் என்றாலே மக்களிடையே நற்பெயருண்டு. சுற்றுலாப் பயணிகள் விரும்பித் தங்கிச் செல்லும் லக்ஸூரி விடுதிகளில் ஐடிசி விடுதிகளுக்கு என்றும் பிரதான இடமுண்டு. அங்கே தங்கினால் பாதுகாப்பு என்பதோடு அவர்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விதமும் அலாதியானதாக இருக்கும். அதனால் தான் அயல்நாட்டுப் பயணிகளும் கணிசமாக அங்கே தங்கிக் கொண்டு இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த செவ்வாயன்று மெக்ஸிகோவில் இருந்து இந்தியா வந்த இரு பெண்கள் ராஜாஸ்தானில் இருக்கும் ஐடிசி நட்சத்திர விடுதியான ஐசி ராஜபுதனாவில் தங்கிக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க விரும்பினர். அதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது ராஜபுதனாவின் ஜெனரல் மேனேஜரான ரிஷி ராஜ் சிங்.மெக்ஸிகன் பெண்களுக்கு, ரிஷி ராஜ் சிங்கின் தொலைபேசி எண்கள், அந்த விடுதியில் முன்பே தங்கிச் சென்றிருந்த அவர்களது நண்பர்கள் சிலரிடமிருந்து கிடைத்ததால், அவர்கள் ராஜஸ்தான் ஐடிசி ராஜபுதனா விடுதிக்கு வந்ததுமே சந்தித்த முதல் நபர் ரிஷிராஜ் சிங் தான்.

ரிஷிராஜ் சிங்கின் புகைப்படம்...

செவ்வாயன்று அந்தப் பெண்களுடன் ராஜஸ்தானின் முக்கியமான இடங்களுக்கு எல்லாம் ரிஷி ராஜ் சிங்கும் உடன் சென்று ஊர் சுற்றிக் காண்பித்துமிருக்கிறார். பின்னர் ஐடிசி விடுதியில், விடுதி ஊழியர்களில் ஓய்வு பெற்றுச்செல்லப்போகிற சிலரைக் கொண்டாடும் விதமாக ஃபேர்வெல் டே எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். இதுவரை எல்லாமும் நார்மலாகவே சென்று கொண்டிருக்க, 9.30 மணியளவில் மெக்ஸிகோ பெண்கள் விடுதியில் தங்களது அறைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சுமார் 11.30 மணியளவில் கதவு தட்டப்பட்டிருக்கிறது. யாரென எட்டிப் பார்த்தால் ரிஷி ராஜ் சிங். உள்ளே வந்தவர் அந்தப் பெண்களிடம் தவறான விதத்தில் பேசத்தொடங்கியதோடு மெக்ஸிகோ பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடவும் முயன்றிருக்கிறார். உண்மையில் அந்தப் பெண்கள் பயந்துவிட்டார்கள். இரவு விடைபெற்றுச் செல்லும் போது இந்த மனிதர் நன்றாகத்தானே இருந்தார். என்று அவர்கள் திகைத்து நிற்க அறைக்குள் தகராறு நடந்திருக்கிறது. அறைக்குள் 20 நிமிடங்கள் இருந்த ரிஷிராஜ் சிங் தகராறுக்குப் பின் அங்கிருந்து வெளியேற  அதையடுத்து அதிகாலை 3.30 மணியளவில் இவ்விஷயம் தொடர்பாக காவல்துறையில் அப்பெண்கள் புகார் அளித்திருக்கின்றனர்.

புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிசிடிவி ஃபூட்டேஜ் ஆதாரங்கள் அடிப்படையில் ஐடிசி ராஜபுதனா 5 நட்சத்திர விடுதியின் ஜெனரல் மேனேஜரான ரிஷி ராஜ் சிங் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 

ரிஷி ராஜ் சிங் இந்த 5 நட்சத்திர விடுதியில் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. இங்கு பணியில் இணைவதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பிரபல 5 நட்சத்திர விடுதிகளில் பல பொறுப்புகளில் இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனினும், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளான மெக்ஸிகோவைச் சேர்ந்த பெண்களிடம் இவ்விதமாக நடந்து கொண்டது சுற்றுலாத்துறைக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுவதாக அத்துறை சார்ந்த உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் தொழில்களில் சுற்றுலாத்துறைக்கு என்றுமே சிறப்பான இடமுண்டு. ரிஷி ராஜ் சிங் போன்ற சிலர் அதைக் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com