தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்!

கேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்!

கோயம்பத்தூர்: அண்மையில் வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி, தர வரிசைப் பட்டியலில் தான் முதலிடம் பெற்றிருந்தாலும் தனக்கு இளங்கலை வேதியியல் பாடத்தில் இணைந்து படிக்கவே விருப்பம் எனக் கூறியிருப்பது ஆச்சர்யப் படத்தக்க விஷயம். வியாழனன்று வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா (18) முதலிடம் பெற்றிருந்தார். முதலிடம் பெற்றது சந்தோஷத்திற்குரிய விஷயமாக இருந்த போதும் மாணவி கீர்த்தனா பொறியியல் கல்லூரியிலோ, பல்கலைக் கழகங்களிலோ சேர்ந்து கற்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் தான் டெல்லி, செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வேதியியல் கற்கவே விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். முதலில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கும் நோக்கம் இருந்ததால் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும் ஆனால், இப்போது வரை தனது ஆர்வம் இளங்கலை வேதியியல் படிப்பையே நாடுவதால் தான் டெல்லி கல்லூரியில் சேர்ந்து படிக்கும் விருப்பத்துக்கே முன்னுரிமை தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மாணவி கீர்த்தனாவின் வீடு கோவையில் இருந்த போதும் அவர் கேரளமாநிலம், பாலக்காடு BSS  குருகுலம் பள்ளியின் மாணவி. கேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது. எனவே அவர் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். இப்போது தரவரிசைப் பட்டியலில் முதலிடமும் பெற்றிருக்கிறார்.

பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும், தனக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பாடத்தில் அதீத விருப்பம் இருக்கும் காரணத்தால் அதையே கல்லூரியில் விரிவாகக் கற்க விரும்புவதாகத் தெரிவித்தார். வேதியியலில் மீதான விருப்பத்துக்குக் காரணம் பள்ளியில் தனக்குக் கிடைத்த அருமையான வேதியியல் ஆசிரியையே எனக்கூறும் மாணவி கீர்த்தனா, ஒருவேளை நான் பொறியியல் படிப்பில் சேர நேர்ந்தாலும் கூட கெமிக்கல் இஞ்சினியரிங் பாடப்பிரிவையே தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் தங்கள் மகள் முதலிடம் பெற்ற போதும், பொறியியலுக்கு முன்னுரிமை அளிக்காமல் இளங்கலை வேதியியல் கற்க விரும்புவது குறித்து கீர்த்தனாவின் பெற்றோர் என்ன கருதுகிறார்கள் எனில், கல்வியைப் பொறுத்தவரை தங்களது மகளின் விருப்பத்துக்கே முன்னுரிமை அளிப்பதென தாங்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மதிப்பெண்கள் அதிகம் பெற்று முதலிடம் பெற்று விட்டதனாலேயே மகளை அவளுக்கு விருப்பமில்லாத ஒரு பாடத்தில் சேர்ந்து கற்கச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என அவர்கள் முடிவெடுத்திருப்பது ஆறுதலான விஷயம். ஏனெனில், பல பெற்றோர்களால் இன்று அப்படி முடிவெடுத்து விட முடிவதில்லை.

மகள் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள். முதலிடம் பெற்ற எல்லோரும் பொறியியல் படிக்கிறார்களா? நம் குழந்தையும் அதைத்தான் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆட்டு மந்தை சமூகப் பிரதிநிதிகளாக அவர்களும் இல்லாமலிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாணவி கீர்த்தனாவின் தந்தை A S ரவியும் ஒரு பொறியாளரே. தாயார் பாலாம்பிகா ரவி பாலக்காடு BSS கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com