தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஏற்பு: மாநில உரிமைகளை தாரை வார்ப்பதா?

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், தமிழகத்தில் இச்சட்டம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், தமிழகத்தில் இச்சட்டம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், இச்சட்டத்தை ஏற்றதன் மூலம் மாநில உரிமைகள் தாரைவார்க்கப்பட்டுள்ளன.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வருமாறு:
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013ஆம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் பல மாநிலங்களுக்கு சாதகமானது என்ற போதிலும், தமிழகத்திற்கு மிகவும் பாதகமானது ஆகும். தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் பொது வினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டப்படி கிராமப்புறங்களில் 75% மக்களுக்கும், நகர்ப்புறங்களில் 50% மக்களுக்கும் மட்டும் தான் உணவு தானியங்களை வழங்க முடியும். தமிழகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால் மத்திய அரசின் திட்டப்படி 50.55% மக்களுக்கு மட்டும் தான்  உணவு தானியங்களை வழங்க முடியும். அதனால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை, தமிழகத்திற்கு முழுமையாக பயனளிக்கும் திட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதே காரணத்திற்காகத் தான் தமிழக அரசும் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இத்தகைய சூழலில், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு, வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வோருக்கான அரிசி விலையை கிலோ 8.30 ரூபாயிலிருந்து, ரூ.22.54 ஆக உயர்த்தியது. அதுமட்டுமின்றி, உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் நிபந்தனைகளை ஏற்று இந்த திட்டத்தில் இணையும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு பணிந்து தான் இத்திட்டத்தில் அரசு இணைந்ததாகவும் கூறப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்ததன் மூலம், உணவு சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் உரிமையை மத்திய அரசிடம் தமிழக அரசு தாரைவார்த்துள்ளது. இது தமிழகத்தின் சுயாட்சி உரிமைக்கு வைக்கப்பட்ட வேட்டு ஆகும்.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். 2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 20.12.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்,‘‘ இந்தியா போன்று கூட்டாட்சி தத்துவம் கடைபிடிக்கப்படும் நாடுகளில் மாநில அரசுகள் தான் மக்களுடன் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்பு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். மாறாக மாநில அரசுகளின் அதிகார எல்லையை ஆக்கிரமிக்கவோ, அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தவோ மத்திய அரசு முயலக்கூடாது’’ என ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்பின் 24.08.2013 அன்று மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்திலும், 03.06.2014, 07.08.2015 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தாக்கல் செய்த மனுக்களிலும், ‘‘உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதை விட அதிக உணவு தானியங்களை தமிழகம் ஏற்கனவே பெற்று வரும் நிலையில், அதே அளவு தானியங்களை தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.  அந்த தானியங்களுக்கு கிலோ ரூ.3 என்ற விலை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் அனைவருக்கும் இத்திட்டப்படி உணவு வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கான மத்திய அரசின் மானியம் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்’’ என ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார். இதை வலியுறுத்தி 29.09.2015 அன்று அவர் மீண்டும் கடிதம் எழுதினார். ஆனால், தமிழக அரசின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுகொள்ளவில்லை.  
அவ்வாறு இருக்கும்போது இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் மத்திய அரசிடம் தமிழக அரசு சரணடைந்து விட்டது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை எதிர்த்து அதிமுக அரசு போராடியிருக்க வேண்டுமே தவிர, பணிந்து போயிருக்கக் கூடாது. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அடுத்த சில ஆண்டுகளில் உணவு வழங்கும் முறையை கைவிட்டு, அதற்கு பதிலாக நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இந்த நிபந்தனையையும் செயல்படுத்தி உழவர்களுக்கும், மக்களுக்கும் மீண்டும் துரோகம் இழைக்குமா? என்பதையும்  தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில், உணவுக்காக மேலும் ரூ.1200 கோடி மானியம் வழங்குவது தமிழகத்தின் நிதிநிலைமையை கடுமையாக பாதிக்கும். மாறாக, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்திற்கு சாதகமாக உணவுப்பாதுகாப்பு திட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com