தனி ஒருவன்! ஷியாம் லாலின் மகத்தான சாதனை!

திரைப்படங்களில் தனி ஒருவனாக கொடியவர்களை வீழ்த்தி வெற்றி கொடி நாட்டிய கதாநாயகர்களை நாம் பார்த்திருப்போம்.
தனி ஒருவன்! ஷியாம் லாலின் மகத்தான சாதனை!

திரைப்படங்களில் தனி ஒருவனாக கொடியவர்களை வீழ்த்தி வெற்றி கொடி நாட்டிய கதாநாயகர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் திரை மறைவில் நிஜத்திலும் சில ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினால் தான் இச்சமூகம் எனும் சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு மனிதர் தான் சத்திஸ்கரைச் சேர்ந்த ஷியாம் லால்.

சத்தீஸ்கர் மாவட்டத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள சாஜா பகத் எனும் கிராமத்தில் பல வருடங்களாக குடிதண்ணீர் பிரச்னை நிலவி வந்தது. கிராமத்தினர் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஆடு மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் அவஸ்தைக்குள்ளாகின. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமோ, அந்த கிராமத்து மக்களோ முன் வரவில்லை. தன்னுடைய கிராம மக்களும், கால்நடைகளும் குடிக்க நீர் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாத 15 வயது நிரம்பிய ஷ்யாம் லால் என்னும் இளைஞர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு செய்தார். இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தன்னுடைய மண்வெட்டியால் குளம் வெட்டத் தொடங்கினார்.

கிராமத்தினர் அவரது செயலைப் பார்த்து கேலி செய்தனர். ஆனால் பழங்குடி இனத்தைச் சார்ந்த அந்த இளைஞன் சற்றும் மனம் தளரவில்லை. கிராம மக்களின் கேலிகளையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் விடா முயற்சியோடு 27 ஆண்டுகள் போராடி 15 அடி ஆழம் கொண்ட குளத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒற்றை ஆளாக நின்று உருவாக்கிவிட்டார் ஷ்யாம் லால். அவருடைய  அசுர உழைப்பின் பலனைத் தான் இன்று அந்த கிராம மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 

தற்போது 42 வயதாகும் ஷியாம் கூறுகையில் 'அரசாங்கமோ கிராம மக்களோ, இந்தக் குளத்தை வெட்டும் போது எனக்கு உதவி செய்யவில்லை. ஆனாலும் இதை கிராம மக்களின் நலனுக்காகவும் கால்நடைகளின் நலனுக்காவும் தான் செய்தேன்’ என்றார். செயற்கரிய இந்தச் செயலை செய்து முடித்த பெருமை அவர் முகத்தில் தெரிந்தது. பிஹாரின் மலை மனிதர் மாஞ்சியைப் போலவே ஷியாம் லால் தனி நபராக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 15 அடி ஆழத்தில் அக்குள்ளத்தை வெட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ராம்சரண் பர்கார் என்பவர் கூறுகையில், 'ரொம்ப வருஷமாக ஷியாம் லாலின் உழைப்பைப் பார்த்து வருகிறேன். இந்த குளத்து தண்ணீரைத் தான் இப்போது நாங்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஷியாம் லாலுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

ஷியாம் லாலின் செயலைப் பாராட்டிய அத்தொகுதி எம்.எல்.ஏ தனிநபராக குளம் வெட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஷயாம் லாலுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். கோரியா பகுதியின் கலெக்டர் ஷியாமைப் பாராட்டி அவருக்கு உதவி புரிவதாகக் கூறியுள்ளார்.

ஷியாம் லாலின் இச்செயல் தனி நபராகப் போராடி மலையைக் குடைந்து சாலை அமைத்த தஸ்ரத் மாஞ்சியின் செயலை ஒத்ததாக உள்ளது என்றனர். அவரைப் போன்றே தனி நபராகப் போராடி தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஆழமான குளம் வெட்டிய ஷியாம் லாலை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவரை கேலி பேசிய அதே கிராமத்தினர் தற்போது ஷியாம் லாலை ஒரு ஹீரோவாகவும் தங்களுடைய ரட்சகராகவும் பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com