ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியை விவாகரத்து செய்கிறார் இந்திராணி

ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோர் மீது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டு
ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியை விவாகரத்து செய்கிறார் இந்திராணி


மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோர் மீது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது,  பீட்டர் முகர்ஜியை விவாகரத்து செய்வதற்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட தாம் விரும்புவதாக சிபிஐ நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி தெரிவித்தார். மேலும், தனது சொத்துகளை சமூக நல அறக்கட்டளைக்கு எழுதிவைக்கும் வகையில் உயிலை மாற்றி எழுத விரும்புவதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், விவாகரத்து மனு தாக்கல் செய்வதற்கோ, உயிலை மாற்றி எழுதுவதற்கோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

மும்பையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி. அவரது முதல் கணவர் சித்தார்த்த தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா. அவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எரிக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கை முதலில் மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஷீனா போராவைக் கொன்றதாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவர் பீட்டர் முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்தக் கொலை எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதை அவர் சிபிஐ-யிடம் விரிவாக எடுத்துக் கூறினார். அதாவது, இந்திராணியின் மகளான ஷீனா போராவுக்கு, தன் தாயின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜிக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராகுலுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் கோபமடைந்த இந்திராணி தன் சொந்த மகளையே கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி தன் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோருடன் இணைந்து கொலை செய்தார். பின்னர் ஷீனாவின் உடலை காரில் எடுத்துச் சென்று ராய்கட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எரித்துவிட்டனர். இந்த விவரங்கள் அனைத்தையும் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.எஸ்.மகாஜன் முன்னிலையில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, சஞ்சீவ் கன்னா, ஷியாம்வர் ராய் ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது விளக்கப்பட்டது. அப்போது, தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்றும் விசாரணையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்திராணி உள்ளிட்டோர் மீது குற்றவியல் சதி, கொலை, குற்றம் தொடர்பாக தவறான தகவலைக் கொடுத்தது, ஆதாரங்களை அழித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, ஷீனா போராவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அவரது சகோதரர் மைக்கேல் போராவைக் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக இந்திராணி மற்றும் சஞ்சீவ் கன்னா மீது கொலை முயற்சிக்கான சட்டப் பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com