தொடரும் டார்ஜிலிங் பிரச்னை! இளைஞர்கள் உணவுக்காக கடைகளை உடைத்தனர்! 

அவர்களுடைய வயது 15 லிருந்து 50 வரை. அவர்கள் அணிந்திருந்த உடை கண்ணியமானது.
தொடரும் டார்ஜிலிங் பிரச்னை! இளைஞர்கள் உணவுக்காக கடைகளை உடைத்தனர்! 

பதினைந்து வயதிலிருந்து ஐம்பது வரையிலான சாமானியர்களான அவர்கள்  அணிந்திருந்த உடை கண்ணியமாகவே இருந்தது. ஆனால், முகத்தை ஒரு துணியால் மூடி மறைத்திருந்தனர். கைகளில் ஆயுதம் போல் குடைகளை வைத்திருந்தனர். இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் டார்ஜிலிங் தெருக்களில் இவர்களைப் பார்க்க முடியும். அவர்கள் செய்த செயல் என்ன?  

திருடர்களைப் போல் இவர்கள் தெருக்களில் அலைந்து திரிந்து பூட்டியிருக்கும் கடைகளிலிருந்தும் தாளிடப்பட்டிருக்கும் வீடுகளின் கதவைத் தட்டியும் இறைஞ்சுவது எதனை? உணவு என்றால் அதிர்ச்சியாக உள்ளதா? சமீபத்தில் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து டார்ஜிலிங் மலைப் பகுதியில் நடைபெறும் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் பின் விளைவுதான் இது

மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங்கில் கோர்க்கர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தங்களுக்கு கோர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைத்து தர வேண்டும் என்று அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. அதனை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

'மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் முதல் வகுப்பிலிருந்து அனைவரும் வங்க மொழியைப் படிக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பினைக் கிளப்பியது. நேபாளம் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கோர்க்காலாந்துப் பகுதிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்தது. மேலும் டார்ஜிலிங்கில் மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை மீண்டும் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங் மலைப்பகுதியில் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஜெஜேஎம் கட்சியினர் தங்கள் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினர்.

கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வணிக வளாகங்கள், ஆகியவை பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு கோதுமை, அரிசி, எண்ணெய், காய்கறி, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டு இருந்தது. உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் சிலர் களத்தில் இறங்கி தங்களுக்கு வேண்டிய பொருட்களை அடாவடியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இரவில் ஒரு காலி சாக்குப் பையை எடுத்துக் கொண்டு செளக் பஜார் பகுதிக்குச் செல்லும் இவர்கள், கையில் கிடைத்த உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், குளிர் பானங்கள் போன்றவற்றை கடைகளை உடைத்து திருடி விடுகின்றனர். 150 நபர்கள் அடங்கிய மக்கள் குழுவொன்று ரோந்துக்கு வந்திருந்த சீனியர் போலீஸ் துறை அதிகாரி ஒருவரை சூழ்ந்து, தங்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்து தரும்படி கலாட்டா செய்தனர். அந்த அதிகாரி அவர்களிடம், சமீபத்தில் உணவுத் திருட்டில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தன் வீட்டிலிருந்து அளித்ததாகக் கூறினார்.

ஆனால் அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் கையும் களவுமாக பிடிபட்டனர். தன்னால் தினமும் அவர்களுக்கு உணவுப்பொருட்களை அளிக்க முடியாத நிலையை எடுத்துக் கூறி அவர்களுடைய பெயர்கள் மற்றும் முகவரியைக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இவர் தங்களை சிறை பிடிக்கத்தான் இந்த தகவல்களைக் கேட்கிறார் என்று நினைத்து சென்றுவிட்டனர். உணவுப் பொருட்கள் விற்பனையாளர்களிடம் போராட்டக்காரர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் யாரும் கடையைத் திறப்பதில்லை. மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள். மக்கள் உதவ முன் வராவிட்டால் காவல்துறை என்னதான் செய்வது? நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்’ என்றார்.

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் மற்றும் எம்எல்ஏ அமர் ராய் கூறுகையில், 'நாங்கள் ரேஷன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்குமாறு ஏற்பாடுகளை கூடிய விரைவில் செய்கிறோம்' என்று உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com