யோகா அல்லது விளையாட்டுகளில் பங்கேற்றால் மட்டுமே இனி பொறியியல் பட்டம் பெற முடியும்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
யோகா அல்லது விளையாட்டுகளில் பங்கேற்றால் மட்டுமே இனி பொறியியல் பட்டம் பெற முடியும்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கிடையாது. இருப்பினும், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொறியியல் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ் எனப்படும் நேஷனல் சோஷியல் சர்வீஸ், என்.சி.சி. எனப்படும் நேஷனல் கேடட் கார்ப்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் மக்களாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்த உன்னத் பாரத் அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது) போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (All India Council for Technical Education (AICTE) கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இனி இவர்கள் கட்டாயமாக யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

இவற்றில் ஏதாவது ஒன்றில், 25 சதவிகித வருகை பதிவு இருக்க வேண்டும். இந்தச் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் எதுவும் கிடையாது. ஆனால், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படிப்புடன் யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் பட்டம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 'படிப்பைத் தவிர, மாணவர்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும், சமுதாய நலத்திற்கும் சேர்த்து, இத்தகைய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் வேண்டும், என்றார் AICTE சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர். யோகா அல்லது விளையாட்டு ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் அவர்களின் உடல் அரோக்கியம் மேம்படும் என்றார் மற்றொரு அதிகாரி.

பொறியியல் கல்லூரி மாணவர் கிருஷ்ண பிரபு கூறுகையில், 'இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். எங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றால் இதில் எல்லாம்  ஈடுபடமாட்டோம். இப்போது வேறு வழி இல்லை, எனவே பின்பற்றுவோம்’ என்று கூறினார். 

இத்திட்டத்தைப் பற்றி அதிகாரி ஒருவரு கூறுகையில், 'இதற்கு முன் அரசு அறிவித்திருந்த கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதன் குறிக்கோளான அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கிராமங்களைப் பார்வையிட வேண்டும். அதன்படி கிராமப்புற மக்களுடைய வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் அத்திட்டம் கட்டாயம் இல்லை என்பதால் யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. யோகா மற்றும் விளையாட்டை கட்டாயப்படுத்தியதன் மூலம் மாணவர்கள் தங்களின் சமூக அக்கறையை விஸ்தரித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தானும் பயனடைந்து தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றும் வாய்ப்புக்கள் அமையும்’ என்றார்.

யோகா மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை பொறியியல் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்தில் கூடுதலாக சேர்ப்பதை ஆல் இந்தியா போர்ட்ஸ் ஆஃப் ஸ்டடீஸ் பரிசீலித்து வருவதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

யூனிவர்சிட்டி க்ராண்ட்ஸ் கமிஷன் (யூ.ஜி.சி) அனைத்து பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று அதன் சாட்சியாக உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கச் சொன்னது.

அரசாங்கம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக உன்னத் பாரத் அபியான் (UBA) மூலம் பல திட்டங்களை முன் வைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்குத் தகுந்த பங்களிப்பைச் செய்யத் தொடங்கினால், ஒட்டுமொத்த சமூகமும் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேற வாய்ப்புக்கள் உருவாகும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். NSS அமைபின் மூலம் இளைஞர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம். எத்தகைய சமூகப் பிரச்னைகளாக இருந்தாலும் அதற்கு அவர்கள் குரல் கொடுக்கலாம். உதாரணமாக தில்லி பல்கலைக்கழகம், 1969 - ல் இத்திட்டத்தை செயலாக்கத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com