பட்டாசு இல்லாமல் எப்படி தீபாவளியை கொண்டாடுவது? டிவிட்டரில் சீறுகிறார் சேத்தன் பகத்

தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ள
பட்டாசு இல்லாமல் எப்படி தீபாவளியை கொண்டாடுவது? டிவிட்டரில் சீறுகிறார் சேத்தன் பகத்

தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து பிரபல எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளரான சேத்தன் பகத், தனது டிவிட்டரில் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகமாக ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு கடந்த நவம்பரில் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

'தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது காலம் காலமாக நம்முடைய பழக்கமாக இருந்து வருகிறது, எனவே பட்டாசு விற்பனையாளர்களின் விற்பனையை தடை செய்வது தேவையற்றது’ என்கிறார் பகத்

புது தில்லியைத் தவிர இந்தியாவின் பெரும்பகுதிகளில் தீபாவளி வழக்கம் போலக் கொண்டாடுப்படுவதை நினைத்து சந்தோஷப்படுவதாகக் கூறினார்.

நவம்பர் 1-ம் தேதி வரை புது தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பட்டாசு விற்கத் தடை இருப்பதால் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போகும். இது குறித்து நீதிமன்றம் கூறுயது, 'குறைந்தபட்சம் இந்த ஒரு வருடமாவது வெடிச் சத்தமில்லாத தீபாவளி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இது குறித்து தனது ஆதங்கத்தையும் மறுப்பையும் பகத் தொடர் டிவீட்டுகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 'பட்டாசு வெடிக்காத தீபாவளி குழந்தைகளுக்கு எப்படி பிடிக்கும்? ’ என்பதில் தொடங்கி சரவெடி போல வெடித்துச் சிதறுகின்றன அவருடைய எமோஷனல் டிவீட்டுகள்.

தூய்மையான காற்றுக்கான மாற்று வழிகளையும் சேத்தன் யோசிக்கச் சொல்கிறார். அதில் ஒன்று, 'ஒரு வாரம் உங்கள் வீட்டில் மின்சாரம் உபயோகிக்காமல் இருப்பதும், ஒரு வாரம் காரைப் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்' என்று டிப்ஸ் தருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், 'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வலியுறுத்துபவர்கள், கிறுஸ்துமஸ் பண்டிகையில் கிறுஸ்துமஸ் மரத்தை வெட்டச் சொல்வார்களா? மட்டன் பிரியாணி இல்லாமல் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடச் சொல்லுவார்களா?’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். நம்முடைய பாரம்பரியமான விஷயங்களை மதிக்க வேண்டும். தடை செய்வது சுலபம் தான், ஆனால் மாற்று வழிகளை கண்டறிவதே முக்கியம்’ என்றார் பகத்.

இன்னொரு டிவிட்டர் பதிவில், ‘நான் பட்டாசு தடைப் பற்றி ஒன்றே ஒன்று கேட்கலாமா? இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் இதைச் செய்ய வேண்டும்?  எல்லா பண்டிகைகளையும் சீர்திருத்த இதே ஆர்வத்தை காட்டுவார்களா?’ என்று பகத் இன்னொரு கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதற்குப் பதிலாக சில தனிப்பட்ட தாக்குதல்கள் காரசாரமாக அவருக்கு எழுதப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தன் பாணியில் எதிர்வினை புரிந்து கொண்டிருந்தார் பகத். 

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வானவேடிக்கை உள்ளிட்ட அனைத்து பட்டாசுகளையும் விற்பதற்கு உரிமங்களையும் நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தற்காலிகமாக பட்டாசு விற்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் தற்போது மீண்டும் பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்குவது என்பது நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகுதான் சாத்தியமாகும். காரணம் இந்தக் காலகட்டத்திலாவது தில்லியின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்குமா எனத் தெரிந்து கொள்ள முடியும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com