பெங்களூர் தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொலைபேசி மிரட்டல்!

பெங்களூர் நந்தினி லே அவுட்டைச் சேர்ந்த 50 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு
பெங்களூர் தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொலைபேசி மிரட்டல்!

பெங்களூர் நந்தினி லேஅவுட்டைச் சேர்ந்தவர் 50 வயதான தொழிலதிபர் ஆர். சத்யபிரகாஷ். அவருக்குத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.

பெங்களூரில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருபவர் ஆர்.சத்யபிரகாஷ். இவர் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று மேற்சொன்ன புகாரை அளித்துள்ளார். தொலைபேசி மூலம் இரண்டு கோடி பணம் கேட்டதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது என்று புகார் செய்துள்ளார் சத்யபிரகாஷ்.

அந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு அவருக்கு முதலில் செப்டம்பர் 19-ம் தேதி, பகல் 3.15 மணிக்கு வந்துள்ளது. +44 என்று தொடங்கும் நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருப்பதைப் பார்த்து, இது சர்வதேச எண் என்றும் லண்டனிலிருந்து அந்த அழைப்பு வந்திருக்கலாம் என்றும் நினைத்தார் சத்யபிரகாஷ். முதலில் அதை யாரோ தன்னை எரிச்சல்படுத்த இப்படி செய்கிறார்கள் என்று அலட்சியப்படுத்திவிட்டாராம். ஆனால் மறுபடியும் இரவு 7.05 அவர் கோவிலில் இருக்கும் போது அதே நம்பரிலிருந்து அழைப்பு வரவே பதற்றமடைந்துள்ளார்.

மறுமுனையில் இந்தியில் அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டி, இரண்டு கோடியை மறுநாளுக்குள் ஏற்பாடு செய்து தருமாறு அதட்டியுள்ளான். சத்யபிரகாஷ் மிகவும் குழப்படைந்துள்ளார். மேலும் அந்த மிரட்டல் நபர் தன்னுடைய ஆட்கள் அவரை தொடர்ந்து வருவதாகவும், போலீஸில் இது பற்றி புகார் செய்தாலோ, பணம் தராமல் ஏமாற்ற நினைத்தாலோ அவனது ஆட்கள் கொலை செய்யத் தயங்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளான்.

சத்யபிரகாஷ் அவனிடம் தாம் கோவிலில் இருப்பதாகவும், பிறகு பேசுகிறேன் என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். மறுபடியும் நள்ளிரவு 12.47 மணிக்கு அதே அழைப்பு வரவே, சத்யபிரகாஷ் அதனை எடுக்கவில்லை. இந்த முறை +60 என்று தொடங்கும் மலேஷிய நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. அதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 20-ம் தேதி காலை 11.50 அவருடைய நண்பரின் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் இருக்கும் போது அதே அழைப்பு மீண்டும் வந்துள்ளது. இம்முறையும் சத்யபிரகாஷ் எடுக்கவில்லை. அவருடைய நண்பர் எடுத்து பேசினார். அந்த மர்ம நபர் இந்தியில் வசை மொழியில் திட்டியுள்ளான். நண்பருக்கு இந்தி சரிவர தெரியாததால் அவர் ஆங்கிலத்தில் பதில் கூற, எதிரில் பேசியவன் தொடர்ந்து இந்தியில் திட்டியுள்ளான். இந்த விபரங்களை சத்யபிரகாஷ் தன்னுடைய புகாரில் விபரமாக கொடுத்துள்ளார்.

பெங்களூர் சதாஷிவ நகர் காவலர்கள் விரைவில் இந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பதாக சத்யபிரகாஷிடம் கூறியுள்ளனர். மேலும் அந்த நபர் பெங்களூரிலிருந்தே இண்டர்நெட் மூலம் சர்வதேச நம்பரில் பேசுவது போலப் பேசியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com