ராயலசீமாவில் தொடரும் வைரவேட்டை!

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையை ஒட்டியும் சில பல உள்நாட்டுக் குழப்பங்களாலும் விஜயநகரப் பேரரசு சரிந்த போது ராயலசீமாப் பகுதியின் வைர வணிகம் அடியோடு ஒழிந்த
ராயலசீமாவில் தொடரும் வைரவேட்டை!

ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வைரவியாபாரம் செழித்தோங்கி நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. பொதுவாக ராயலசீமா பகுதியைச் சேர்ந்த கர்னூல், கடப்பா, அனந்தபூர் மாகாணங்களில் வைரச் சுரங்கங்கள் அமைந்திருந்ததாக இந்தியப் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனவே இப்போதும் கூட ராயலசீமா பகுதியில் வைரம் இருப்பதாக அப்பகுதி மக்களிடையே செவிவழி நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. தற்போது ஆந்திராவில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளும், வைர வேட்டையில் நம்பிக்கையுள்ள பொதுமக்களில் சிலரும் வைரங்களைக் கண்டடைவதற்காகக் கிளம்பியுள்ளனர். இவர்களுக்கு அங்கு கிடைப்பது வைரக் கற்கள் தானா என்பது குறித்து போதுமான விஷயஞானம் இல்லாவிட்டாலும் கூட அங்கே கிடைக்கக் கூடிய கற்களை வைரக் கற்கள் என்றே நம்பி எடுத்துச் செல்கின்றனர். ராயலசீமா பகுதி கனிமவளம் நிரம்பிய பகுதிகளில் ஒன்று. அங்கே கிடைக்கக் கூடிய கரியமிலக் கற்களுக்கு இடைத்தரகர்களிடையே மவுசு இருந்து வருவதால். இந்த மக்கள் தாங்கள் கண்டெடுக்கக் கூடிய கற்களை அவர்களிடம் விற்று சொற்ப லாபம் சம்பாதிக்கின்றனர்.

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையை ஒட்டியும் சில பல உள்நாட்டுக் குழப்பங்களாலும் விஜயநகரப் பேரரசு சரிந்த போது ராயலசீமாப் பகுதியின் வைர வணிகம் அடியோடு ஒழிந்ததாகவும். தேவராயர் காலத்தில் பாதுகாப்புக் கருதியும், பேராசை காரணமாகவும் அரச குடும்பத்தாரும், மதக்குருமார்களும், மந்திரி பிரதானிகளும் அளவில்லாத செல்வங்களை பூமிக்கடியில் ஒழிக்க நினைத்து திருப்பதி கோயில் உட்பட ஆந்திரா மற்றும் இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பூமிக்கடியில் விலை மதிப்பற்ற தங்க வைர பொக்கிஷங்களை மறைத்து வைத்ததாகவும் தற்போது கனமழை பெய்து வருவதால் பூமியின் அடியில் ஏற்படும் புவியியல் மாற்றங்களின் காரணமாக அவற்றிலிருந்து வைரங்கள் சில மேலெழுந்து வரவும் வாய்ப்பிருக்கிறது என்பதாகவும் மக்களில் ஒருசாரர் பேசிக் கொள்கின்றனர்.

உண்மையில் ராயலசீமாப் பகுதியில் பூமிக்கடியில் வைரச்சுரங்கம் இருந்து அங்கிருந்து தான் இத்தகையை கற்கள் உற்பத்தியாகி மேலெழும்புகின்றனவா? அல்லது இது மாமன்னர் காலத்துப் புதையல் கதையா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கிடைக்கும் கற்களை சேமித்து கரியமிலக் கற்களுக்காக காத்திருக்கும் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்வதற்காக அங்கிருக்கும் மக்கள் தொடர்ந்து வைர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com