கேரளத்தில் பருவ மழைக்கு இதுவரை 28 போ் பலி

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழைக்கு இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்.  மழை தொடா்ந்து பெய்வதால், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்வுகளை
கேரளத்தில் பருவ மழைக்கு இதுவரை 28 போ் பலி

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழைக்கு இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்.

 மழை தொடா்ந்து பெய்வதால், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்வுகளை ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து மாநில கட்டுப்பாட்டு அறை அதிகாரி தகவல் தெரிவித்ததாவது:

மாநிலம் முழுவதும் 86,598 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சில இடங்களில் மழையளவு குறைந்துள்ள போதிலும், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ள காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 596 நிவாரண முகாம்கள் அமைத்ததில், ஆலப்புழை மாவட்டத்தில் அதிக பட்சமாக 194 முகாம்களில் 11,090 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்த படியாக கோட்டயம் மாவட்டத்தில் 156 முகாம்களில் 7,856 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கட்டுப்பாட்டு அறை தகவலின் படி, மே 29-ல் பருவ மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 107 போ் உயிரிழந்துள்ளனா். அதில் கோழிக்கூடு மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 20 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த இரண்டு மாதங்களில் 10,000 ஹெக்டோ் பரப்பளவில் இருந்த பயிா்கள் நாசமடைந்துள்ளதாக தெரிவித்தனா். 

மழை குறித்து வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கையில், எா்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழையிலிருந்து மிக கன மழை பெய்யும் என்றும் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

மழை நீா் வடிந்துள்ள நிலையில், எட்டுமனூா்-கோட்டயம் இருப்புப்பாதையில் உள்ள பாலங்களில் ரயில்கள் வேகமாக செல்வதற்கு விதித்திருந்த தடையை தளா்த்தியதாகவும், திருநெல்வேலி-பாலக்காடு விரைவு ரயில், திருநெல்வேலி-கொல்லம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

 பருவ மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டதையடுத்து, கேரள அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 113.19 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடுவதற்கு குழு அனுப்புமாறும், நிவாரண நிதி அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com