‘வாட்ஸ்-அப்’பில் வந்த தகவல் உண்மையா? வங்கிகளுக்கு உண்மையிலேயே ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா?

நேற்று காலை என் செல்பேசிக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. அதில் ‘அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை.
‘வாட்ஸ்-அப்’பில் வந்த தகவல் உண்மையா? வங்கிகளுக்கு உண்மையிலேயே ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா?

நேற்று காலை என் அலைபேசிக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. அதில் ‘அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை. ஏடிஎம்கள் வழக்கம் போல இயங்கும். ஆனால் இரண்டே நாட்களில் பணம் காலியாகிவிடும். உங்களால் பணத்தை எடுக்க முடியாது. அப்படியே உங்களுக்கு பணத் தேவை இல்லாவிட்டாலும் மற்ற பணப் பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. காரணம் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏப்.2-ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு தங்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்’ என்ற செய்திதான் அது. 

இப்படி ஒரு செய்தி வந்ததும் கடமை தவறாமல் நல்ல வேளை முன்கூட்டியே இதைத் தெரியப்படுத்திய புண்ணியவான்களுக்கு நன்றி சொல்லிவிட்டு நம் சமூகக் கடமையான ஃபார்வேர்டுகளைச் செய்தேன். நிச்சயம் நான் அனுப்பியவர்களும் மற்றவர்களுக்கு இத்தகவலை பரப்புவார்கள் என்று தெரியும். ஆனால் வங்கியில் வேலை பார்க்கும் நண்பரிடம் வேறு ஒரு விஷயமாகப் பேசும் போது இதைக் கேட்டபோது, அவர் இதில் பாதி தான் உண்மை பாதி தவறான தகவல் என்று கூறினார். 

‘வாட்ஸ்-அப்’பில் வரும் இதுபோன்ற தகவல் பல சமயம் தவறானவைதான். வரும் 31-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அவர் தெரிவித்தார். தெளிவாக கூற வேண்டும் எனில், வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பது உண்மைதான். ஆனால், 31-ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழுநாள் செயல்படும். அன்றைய தினம் வழக்கம் போல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.

மேலும் இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை:-

’ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும், சில மாநிலங்களில் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை தினமும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென இந்திய வங்கிகள் நிர்வாகத் தரப்பிடம் (ஐபிஏ) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் கோரிக்கை குறித்து கலந்தாலோசனை செய்தது. இதைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டில் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு மாற்றுவதென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கும் மாற்றுத் தேதி (ஏப்ரல் 2) குறித்த தகவலை மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்துமாறு தனது பிராந்திய அலுவலகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.’

அடுத்தவர்களுக்கு நல்லது செய்கிறோம் பேர்வழி என்று அரைகுறை உண்மைகளை இனி அனுப்பக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். சரிதானே? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com