திருநங்கை மணமகளுக்கும் திருநம்பி மணமகனுக்கும் எளிமையாக நடந்த திருமணம்! 

சென்னையில் மார்ச் 8, மகளிர் தினத்தன்று, எந்த பரபரப்பும் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு திருமணம்
திருநங்கை மணமகளுக்கும் திருநம்பி மணமகனுக்கும் எளிமையாக நடந்த திருமணம்! 

சென்னையில் மார்ச் 8, மகளிர் தினத்தன்று, எந்த பரபரப்பும் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு திருமணம் சமூக ஆர்வலர்களின் கவனத்துக்கு வந்துள்ளது. காரணம் சாதி சடங்குகளை மறுத்த மணமக்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக் மூலம் பழகியவர்கள். இனிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 

திருநெல்வேலியில் உள்ள கல்யாணிபுரத்தில் ஆணாகப் பிறந்தவர், தன்னில் உணர்ந்த பெண்மையின் சாயலை பதின் வயதில் உணரத் தொடங்க, வீட்டிலிருந்து வெளியேறி கடும் போராட்டத்துக்குப் பின் ப்ரீத்திஷாவாக மாறினார். நாடகத் துறையில் ஆர்வமுள்ள இவர் தற்போது நடிப்பு பயிற்சியாளராக உள்ளார். அதற்கு முன்னால் புறநகர் ரயில்களில் கீ செயின் மற்றும் செல்பேசி கவர்கள் போன்றவற்றை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, தனது 17-வது வயதில் பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் அவரது வாழ்க்கை அவரது விருப்பமாக மாறியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக் மூலம் ப்ரீத்திஷாவுக்கு ஒரு நட்பு கிடைத்தது. ஈரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஆணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரேம் குமரன் என்பவர்தான் அவர். இருவரும் தங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்க, ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. சேர்ந்து வாழ முடிவு செய்தனர். தத்தமது குடும்பங்களில் தெரிவித்தால் நிச்சயம் எதிர்ப்பு எழும் என்பதால் தங்களுடைய நலம் விரும்பிகளின் உதவியுடன் திருமணம் முடித்தனர்.

வழக்கறிஞர் சுஜாதா வாயிலாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் அவர்கள் மணமுடித்துக் கொண்டனர். பாதியில் விட்ட பிரேமின் படிப்பைத் தொடர வைப்பேன் என்று கூறியிருக்கிறார் ப்ரித்திஷா. ப்ரீத்திஷாவைப் பொருத்தவரையில் பள்ளிப்படிப்பு ப்ளஸ் டூ பரீட்சையை ப்ரைவேட்டாக எழுதி தேர்வாகியிருக்கிறார். நடிப்புப் பயிற்சி, சிறு வியாபாரம் என அவர் தன்னால் முடிந்தளவு பொருளீட்டி தங்கள் குடும்பத்தை பாதுகாக்க முடிவெடுத்துள்ளார். இருவருமே தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி நினைக்க விரும்பாத நிலையில், நல்லுள்ளம் கொண்டோர்களின் வாழ்த்துகளால் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். 

நன்றி - பிபிசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com