தமிழ் அறிஞர் ம.லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார்!

தமிழ் அறிஞரும் பேராசிரியருமான ம.லெனின் தங்கப்பா (84) இன்று (31 மே, 2018) அதிகாலை தம் காலமானார்
தமிழ் அறிஞர் ம.லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார்!

தமிழ் அறிஞரும் பேராசிரியருமான ம.லெனின் தங்கப்பா (84) இன்று (31 மே, 2018) அதிகாலை தம் காலமானார். இவர் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தார். அவர் தமிழ் தொண்டாற்றி தமிழுக்கு பல அரிய பணிகள் ஆற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார். 

நெல்லை மாவட்டம், தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934-ம் ஆண்டு பிறந்தவர் ம.லெனின் தங்கப்பா. பெற்றோர் புலவர் ஆ. மதன பாண்டியன், ரத்தினமணி அம்மையார். இளங்கலைப் பொருளியல் மற்றும் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இளம் வயதிலேயே தமிழ் மீது கொண்ட பற்றினால் பல அரிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். தமிழில் இலக்கியச் செறிவுடன் பாக்கள் இயற்றி இருமொழியிலும் புலமை பெற்றிருந்தார். சில காலம் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்த பின்னர் புதுச்சேரியில் குடிபெயர்ந்து புதுச்சேரி அரசுக்குரிய கல்லூரிகளில் பணிபுரிந்தார். புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி தந்துவிட்டர் அவர். புதுச்சேரி தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் சீறிய பங்கினை ஆற்றியவர் அவர்.

சாகித்ய அகாதெமி விருது (இரண்டு முறை) உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் தன்னுடைய திறமைக்காக பெற்றவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் அவர். தெளிதமிழ் என்ற இலக்கிய இதழ் ஒன்றினை நடத்தி வந்தார். சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் நேர்க்கோட்டில் பயணித்த தங்கப்பாபல்வேறு தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக பலவகை களப் பணிகளையும் ஆற்றியவர். அவர் தலைமையேற்றி நிறைவேற்றீய பணிகள் தமிழுலகில் என்ரென்றும் மறக்க முடியாதவை. அவர் எழுதிய கவிதை ஒன்று,

தமிழ் மானம் காப்பீர்!

குள்ள மனத் தில்லியர் நம் குடி கெடுத்தார்.

கொலை வெறியர் சிங்களர் நம் இனம் அழித்தார்.

கள்ளமிலா மீனவரைச் சாகடித்தார்.

கண்மூடிக் கிடக்குதடா தில்லிக்கும்பல்.

முள்வேலிக் குள்கொடுமை நிகழ்த்துகின்றார்;

மூத்தகுடி வாழ்நிலத்தைப் பறித்துக் கொள்வார்.

உள்ளுக்குள் குமைகின்றோம்; குமுறுகின்றோம்

உலகறிய நம் எதிர்ப்பை விடுத்தோமில்லை.


நம் குரல்கள் நமக்குள்ளே அடங்கல் நன்றோ?

நம் எதிர்ப்பிங்கு ஒன்றுமிலை என்றே அன்றோ

சிங்களனுக் கிந்நாட்டில் படைப்பயிற்சி

சிரித்துக் கொண் டளிக்கின்றான் தில்லிக்காரன்.

பொங்கி எழுந் திதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.

புரிந்திடுமா தமிழரசு? நடித்தல் செய்யும்.

இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்

எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.

 
தமிழை நேசிக்கும் யாரும் மறக்க முடியாத ஒரு மாணிக்கமாக திகழ்ந்த ம.லெனின் தங்கப்பா, இன்று அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் தமிழறிஞர்களுக்கு கடும் துயரத்தை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com