குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம்!

குழந்தைகள் மகத்தானவர்கள் நம்மையும் நமது மனநிலைகளையும் நொடியில் மாற்றி எந்தச் சூழலின் மீது வண்ணம் பூசி மனதை மென்மையாக மாற்றி விடுவதில் கில்லாடிகள்...
குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம்!

பேருந்தில் ஒருநாள் ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் பார்த்தேன் அதன் அம்மாவோடு... எனக்கு இடது பக்கம் ஒரு சீட் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள், அதன் அம்மா ’பூப் பூவாய் பூத்திருக்கு’ படத்தின் அமலாவைப் போல நிறைஅழகு, ஒற்றைக்கல் சிவப்பு மூக்குத்தியில் அவளது வெற்றுப் பார்வையில் கூட வாத்சல்யம் ததும்பி வழிந்தது. பாப்பாவுக்கு நாவற்பழ நிறத்து சின்ட்ரெல்லா கவுன் அதில் சந்தன நிறத்துப் பிரில் வொர்க் பிரி பிரியாய் ஜன்னலில் கசிந்த காற்றுக்கு அவளது சுருட்டை முடிக் கொண்டையோடு சேர்ந்து அசைந்தது அந்த நேரத்தில் ரொம்பத் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துப் போகும் அப்படி ஒரு துறு துறுப்பு. குட்டிக்குட்டிப் பிஞ்சுக் கைகளில் மெகந்தி இட்டிருந்தாள் அதை தூக்கி அதன் அம்மாவின் முகத்துக்கு நேர நீட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள், அதன் அம்மா குழந்தையின் விரல்களைப் பற்றி வலிக்காது மடக்கி 1 ,2 ,3 ...சொல்லிக் கொடுப்பது என் இருக்கையில் இருந்து பார்க்க அபூர்வமான ஓவிய அழகு!

செம்பஞ்சாய் சிவந்து பவளமாய் மின்னிய பாப்பாவின் குண்டு குண்டு விரல்களையும் பக்கவாட்டில் மாம்பழம் போல பளபளத்த பளிங்குக் கன்னத்தையும் பார்க்கப்பார்க்க அதன் அம்மாவிடம் ’எக்ஸ்கியூஸ் மீ’ கேட்டு அவளைத் தூக்கி என் நிறுத்தம் வரும் வரை மடியில் வைத்துக் கொண்டால் என்ன என்று ஆசை ஆசையாய் இருந்தது. அதற்குள் எனது நிறுத்தம் வந்து விட்டதால்; இறங்கி கீழே நின்று கொண்டு பேருந்து என்னைக் கடக்கும் வரை அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

ஒருநாள் இப்படி என்றால் மற்றொரு நாள் இன்னொரு குழந்தை; இந்தக் கைக்குழந்தைகளின் அராஜகம் இருக்கிறதே சொல்லி மாளாது அதன் மகாத்மியம்! காலையில் பேருந்தில் ஐ.சி.எப் நிறுத்தத்தில் ஒரு கைக்குழந்தையும் அதன் அம்மாவும் ஏறினார்கள் கூடவே அதன் பாட்டியும்... இந்தக் குழந்தை இருக்கிறதே குழந்தை! அது ’இடம் கொடுங்கள்’ என்று யாரிடமும் கேட்கவே இல்லை, கேட்கும் முன்பே இளஞ்சிவப்பு நிற பஞ்சுத் துவாலையில் சுற்றப் பட்ட அதன் தோற்றத்தை உத்தேசித்து எனக்கு பின்னிருக்கையில் இருந்த அம்மாள் டக்கென எழுந்து அதற்குரிய மரியாதை செலுத்துவதாக எண்ணிக் கொண்டு இடம் கொடுத்தாள். சரி சத்தமில்லாமல் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ள வேண்டியது தானே! வயதானவள் என்ற உரிமையில் அந்தக் குழந்தையின் பாட்டியம்மாள் அதை பூப்போல மடியிலேந்திக் கொண்டு உட்காரப் போக, உடனே ஒரு சிணுங்கல் மெல்ல ஆரம்பித்து அந்தம்மாள் எழுந்து கொண்டு குழந்தையின் அம்மாவை உட்கார வைக்கும் அவகாசத்தில் பெருத்த கத்தலாகப் போய் விட்டது. யாருக்கு வசதிக் குறைச்சலாகப் போனாலும் இந்தக் கைக்குழந்தைகள் மட்டும் அதன் விருப்பங்களை எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொள்கின்றன பாருங்கள்!

எரிச்சலாக கடக்கும் காலை நேரப்பேருந்துப் பயணம் இன்று இந்த கைக்குழந்தையின் செல்ல அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததில் எனது நிறுத்தம் வந்ததே தெரியவில்லை. அந்தக் குழந்தையின் முகம் இன்னமும் கண்ணுக்குள். யார் குழந்தையாய் இருந்தால் என்ன?! குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்! குழந்தைகள் மகத்தானவர்கள் நம்மையும் நமது மனநிலைகளையும் நொடியில் மாற்றி எந்தச் சூழலின் மீது வண்ணம் பூசி மனதை மென்மையாக மாற்றி விடுவதில் கில்லாடிகள்.பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து வரும் போது தோன்றியது "குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம் "

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com