வாக்கிங் அல்லது ஜாகிங் போவோமா ...

செருப்புக் காலோடு ஜாகிங் செய்வதைக் காட்டிலும் வளர்ப்பு நாயோடு பூங்காக்களில் உலாவப் போகலாம். வாக்கிங் ஜாகிங் இரண்டுக்கும் நடுவில் குறைந்தபட்சப் பலனாவது கிட்டும்.
வாக்கிங் அல்லது ஜாகிங் போவோமா ...

வாக்கிங் அல்லது ஜாகிங் போய் உடல் மற்றும் மனம் இரண்டையும் கட்டுக்கோப்பாக  வைத்துக் கொள்ள எல்லோருக்குமே ஆசை. ஆனால் என்ன தான் வாக்கிங், ஜாகிங் போனாலும் சில நாட்கள் தான் அதில் ஆர்வம், பிறகு அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறோம், அடடா என்ன தான் செய்வது  என்று வருந்துகிறீர்களா? இதைப் படியுங்கள் முதலில்...

வாக்கிங் போனாலும் சரி ஜாகிங் போனாலும் சரி முதலில் அந்தந்த முயற்சிகளுக்குரிய முன் தயாரிப்புகளாக பொருத்தமான  ஷூக்கள், உடைகள் என சில உண்டு அவற்றை நாம் மதித்தே ஆகவேண்டும். வாக்கிங் போகிறேன் என்று ஆரம்பித்து விட்டு தாத்தா காலத்து ரப்பர் செருப்போடு நடக்கக் கூடாது. சில நேரங்களில் செருப்பு உரசி கால் விரல் இடுக்குகள்  புண்ணாகி வாக்கிங் நிறுத்தப் பட வாய்ப்பு உண்டு. ஜாகிங் பற்றிச் சொல்லவே வேண்டாம். செருப்புக் காலோடு ஜாகிங் செய்வதைக் காட்டிலும் வளர்ப்பு நாயோடு பூங்காக்களில் உலாவப் போகலாம். வாக்கிங் ஜாகிங் இரண்டுக்கும் நடுவில் குறைந்தபட்சப் பலனாவது கிட்டும்.

வாக்கிங் போவதோ ஜாகிங் போவதோ அவரவர் விருப்பம். ஆனால் எப்படிப் போக வேண்டும் எப்படிப் போகக் கூடாது என்று மட்டும் இப்போது பார்க்கலாம்;

  • வாக்கிங் அல்லது ஜாகிங் எதுவானாலும் முயற்சியில் இறங்கும் முன் முதலாவதாக கை,கால்களை நீட்டி மடக்கி வார்ம் அப் பயிற்சிகள் சிலவற்றைச் செய்து தசைகளை இயக்க நிலையில் வைக்க வேண்டும். இல்லையேல் உடல் வளையாது.

  • நீங்கள் தொடர்ந்து வாக்கிங் அல்லது ஜாகிங் செல்பவராகவோ அல்லது இப்போது தான் புதிதாக இம்மாதிரி முயற்சிகளை தொடங்கியவராகவோ இருக்கலாம், இருசாராருக்குமே பொதுவான விஷயம் ஒன்றே அவை  உங்களது ஷூக்கள்!  உங்களுக்குப் பொருத்தமானதாக சரியான அளவுடையதாக இருக்க வேண்டும். வாக்கிங் அல்லது ஜாகிங் செல்வதெற்கென்றே இப்போது பிரத்யேக ஷூக்கள் வந்து விட்டன. அவற்றில் உங்களுக்குப் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுங்கள், உங்களது கால்களை இம்சிக்காத ஷூக்கள் ஜாகிங் நேரத்தில் நண்பர்களை விட நல்ல துணைவனாக இருக்கும்.

  • ஜாகிங் செய்யும் போது எப்போதுமே உடை விஷயத்தில் கவனம் தேவை. நமது உடைகள் நம்மை இயல்பாக உணரச் செய்ய வேண்டும், கனமான புடவைகளை உடுத்திக் கொண்டோ இறுக்கமான சுரிதார் அணிந்து கொண்டோ, லுங்கி  அல்லது ஜீன்ஸ் அணிந்து கொண்டோ வாக்கிங், ஜாகிங் செல்வதைக் காட்டிலும் செல்லாமலிருப்பது நலம். எப்போதும் வாக்கிங், ஜாகிங்குக்கு மிகவும் உகந்தது தளர்வான மென்மையான காட்டன் உடைகளே. வியர்வையை உறிஞ்சும் வகையில் உடைகள் இருந்தால் சருமத்துக்கும் நலம்.

  • வாக்கிங் அல்லது ஜாகிங் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள். வியர்வை மூலம் உடலில் நீர் வற்றிப்  போவதைத் தடுக்க இது உதவும். போதுமான தண்ணீர் அருந்தாமல் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டால் உடற்பயிற்சிகளால் எந்தப் பயனும் இல்லை.

  • வாக்கிங், ஜாகிங் எதுவானாலும் முதலில் குறைந்த அளவு தூரத்தை முடிவு செய்து கொண்டு மெதுவாகத் தொடங்கி சீரான வேகத்தில் நீடிக்கச் செய்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம். தொடங்கும் போதே அதி விரைவாகத் தொடங்கினால் சிறிது நேரத்தில் கால்கள் வலிக்கத் தொடங்கி பிறகு சில வாரங்களில் இந்தப் பயிற்சிகளுக்கு முற்றும் போட வேண்டி வரலாம். ஆகவே நமது உடல் வலிமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு நிதானமாகத் தொடங்கி தினமும் ஒரே சீராக இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதே நல்லது.

  • கால்களில் சுளுக்கு அல்லது சின்னங்சிறு காயங்கள் இருக்கும் போது வாக்கிங் அல்லது ஜாகிங்கை ஒத்திப் போடுங்கள். காயங்கள் சரியான பின் பயிற்சிகளைத் தொடர்வதே நல்லது.சின்னக் காயம், லேசான சுளுக்கு தானே என்று கவனமின்றி இருந்தால் வாக்கிங் அல்லது ஜாகிங்கின் போது அவை பெரிதாகி துன்பம் தர வாய்ப்பிருக்கிறது.

  • வாக்கிங், ஜாகிங் செல்ல காற்றோட்டமான பூங்காக்கள்,  கல்லூரிகளின் பெரிய விளையாட்டு மைதானங்கள், அதிகமாக  வாகனங்கள் புழங்காத குடியிருப்புச் சாலைகள்,  அடுக்குமாடி குடியிருப்புகளின் நீண்ட விரிவான மேல்தளங்கள் போன்றவை உகந்த இடங்கள், பாதுகாப்பாக  இருக்காது என்பதால் யாருமற்ற தனிமையான  இடங்களில் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

  • மேற்சொன்ன காரணங்கள் மட்டுமல்ல வாக்கிங் அல்லது  ஜாகிங் செல்லும் போது காதில் ஹெட் ஃபோன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டோ அல்லது உறவினர்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டோ பயிற்சியில் ஈடுபடுவதும் முற்றிலும் தவறு. எந்த வேலையைச் செய்கிறோமோ அதில் முழு ஈடுபாடு வேண்டும். ஜாகிங் செய்யும் போது சுற்றுப் புறத்தில் கவனம் இருக்க வேண்டும், காதில் ஹெட் ஃபோன் அணிந்து கொண்டால் கவனம் சிதறும் நம்மைச் சுற்றி  நடக்கும் விஷயங்கள் சீக்கிரமாக கவனத்தில் பதியாது. இதனால் விபத்துக்கள்  நிகழ நாமே வாய்ப்புத் தர வேண்டியதில்லை.

இந்தக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களது வாக்கிங் மற்றும் ஜாகிங் நேரங்களை சுவாரஸ்யமானதாகவும் இனிமையானதாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com