வீட்டிலேயே குளு குளு ஆப்பிள் ஃபேஷியல் செய்து கொள்வதெப்படி?!  

எளிமையாக வீட்டிலேயே முயன்று பார்க்கும் வகையில் 5 விதமான ஆப்பிள் ஃபேஷியல் செயல்முறைகளை எப்படிச் செய்து கொள்வதென்று இப்போது பார்க்கலாம். 
வீட்டிலேயே குளு குளு ஆப்பிள் ஃபேஷியல் செய்து கொள்வதெப்படி?!  

ஆப்பிள் பழத்தை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்? அப்படியே ராவாக கடித்துச் சாப்பிடலாம். ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். ஆப்பிள் ஜாம் செய்யலாம், கொஞ்சம் வித்யாசமாக ஆப்பிள் ஹல்வா செய்து சூடாகச் சாப்பிடலாம்.

இதைத் தவிர வேறு?


ஆப்பிள் நிறைய இருந்தால் அரைத்து முகத்திற்குப் பூசலாம். இதைத் தான் ’ஆப்பிள் ஃபேஷியல்’ என்கிறார்கள் அழகியல் வல்லுநர்கள். பார்லருக்குப் போய் இந்த வகை ஃபேஷியல் செய்து கொள்ள அதிகம் செலவாகும் என்று நினைப்பீர்களானால் எளிமையாக வீட்டிலேயே முயன்று பார்க்கும் வகையில் 5 விதமான ஆப்பிள் ஃபேஷியல் செயல்முறைகளை எப்படிச் செய்து கொள்வதென்று இப்போது பார்க்கலாம்.


ஆப்பிளில் அப்படி என்ன ஸ்பெஷல்?


ஆப்பிள் பழத்தில் இயல்பாகவே விட்டமின் A மற்றும் C நிறைய இருக்கிறது கூடுதலாக செம்புச் சத்தும் சேர்ந்தால் அதன் பலனைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பொதுவாக நம் முன்னோர்கள் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல்நலனுக்கு நல்லது என்பார்கள். அந்த வகையில் ஆப்பிளில் நமது உடல் நலனுக்கு குறிப்பாக சருமத்திற்கு நன்மை தரும் விஷயங்கள் நிறைய உண்டு.


ஆப்பிளை அரைத்து முகத்தில் பூசிக் கொண்டால்  முகத் தசைகளின் இறுக்கம் குறைந்து வறட்டுத் தன்மை நீங்கி மென்மையாகிறது. முகத்தசைகளின் எலாஸ்டிக் தன்மைக்கு ஆப்பிள் வலுவூட்டுகிறது. முகம் சுருக்கம் நீங்கி பொலிவுறவும் இப்பழம் ஊட்டமளிக்கிறது. இவற்றையெல்லாம் விட ஆப்பிளில் அமிலத்தன்மை குறைவென்பதால் சருமப் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.


வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கேற்ப இந்தியத் துணைக்கண்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் ஆனால் அனைவரும் இந்தியர்களே! அதனால் வெவ்வேறு விதமான   சருமத்திற்கு தகுந்தாற் போல அவற்றுக்கான பராமரிப்பு முறைகளும் மாறுகின்றன.  ஆப்பிள் ஃபேஷியல் செய்து கொள்வது என்று முடிவெடுத்த பின்  எந்த வகை சருமத்திற்கு எந்த வகை ஃபேஷியல் சரியானது என்பதையும் சரிபார்த்துக் கொண்டு அதற்கேற்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.


வெவ்வேறு வகையான ஆப்பிள் ஃபேஷியல் முறைகள்:


வறண்ட சருமத்திற்கு கிளிசரின் கலந்த ஆப்பிள் ஃபேஷியல்
எண்ணெய்ப்பசை சருமத்திற்கு தயிர் மற்றும் லெமன் கலந்த ஆப்பிள் ஃபேஷியல்
எளிதில் பாதிப்படையும் சருமத்திற்கு வாழைப்பழம் மற்றும் கிரீம் கலந்த ஆப்பிள் ஃபேஷியல்
சாதாரண சருமத்திற்கு தேன் கலந்த ஆப்பிள் ஃபேஷியல் 

வறண்ட சருமம்:


  
ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொண்டு தோல் விதை நீக்கவும். பின்பு   துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து எடுத்துக் கொண்டு அதனோடு சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலவையை பேஸ்ட் போலாக்கவும். ஆப்பிளும் கிளிசரினும் நன்கு கலந்ததும் முகத்தில் மாஸ்க் போல தேய்த்து ஆற விடவும். ஆப்பிள் கிளிசரின் கலவை நன்கு காய்ந்து முகம் ஆப்பிள் கலவையில் ஈரத்தை முழுவதுமாக உறிஞ்சிய பின் 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவி மென்மையான துவாலையால் ஈரத்தை துடைக்கவும். இந்த ஃபேஷியல் செய்வதால் முகத்தின் வறட்டுத் தன்மை நீங்கி மென்மையாகும்.
எண்ணெய்ப்பசை சருமம்:


  
ஆப்பிள் பழத்தை தோல் விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி நைஸாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும், இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் லெமன் சாறு கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் தேய்த்து ஊற வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவித் துடைக்கவும். தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் முகச் சருமத்தின்  ஈரப்பதம் குறையாமல் காத்து முகப் பொலிவைக் கூட்ட உதவுகிறது. மேலும் லெமன் முகத்தில் உள்ள அதிகப்படியான  எண்ணெய்ப்பசையை நீக்கவும் உதவுவதால் இந்த வகை ஃபேஷியல் எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று சொல்லலாம்.

எளிதில்  பாதிப்படையும்  சருமம்:


  
சிலருக்கு வெயில், மழை, குளிர் என்று ஒவ்வொரு சீதோஷ்ண  மாற்றத்துக்கும் ஏற்றவாறு முகச்சருமம் வறண்டும், சுருக்கங்களுடனும் மாறி மாறி பாதிப்படைந்து கொண்டே வரும். அத்தகையோருக்கு எளிதில் பாதிப்படையும் சருமம் என்பதால் அவர்களுக்குப் பொருத்தமான வகையில் ஃபேஷியல் செய்ய ஆப்பிள் பழத்துடன் வாழைப்பழத்தையும், கிரீமையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் ஆப்பிள் பழத்தை தோலோடு ஆவியில் வேக வைத்து  எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வெந்த ஆப்பிள் பழம்  மசிக்க  எளிதாக இருக்கும். பழத்தை மசித்து அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழம் ஒரு துண்டு மற்றும் ஒரு டீ ஸ்பூன் கிரீம் சேர்த்து நன்றாகக் கலக்கி பேஸ்ட் பதம் வந்ததும் முகத்தில் தேய்த்து ஆற விடவும். 15 நிமிடங்களுக்குப் பின் வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவித் துடைத்தால் முகம் பளிச்சென்று இருப்பதோடு வாழைப்பழம் மற்றும் கிரீம் மாயத்தால் மிருதுவாகவும் இருக்கும். 

சாதாரண சருமம்:
 


சாதாரண சருமம் கொண்டவர்களுக்கு ஆப்பிள் பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து  முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவித் துடைத்தால் போதும் முகம் பள பளவென்று மினுங்கும். இந்த வகை சருமம் அதிகம் பாதிப்படையாது என்பதால் இந்த வகை ஃபேஷியலை குறிப்பிட்ட இடைவெளிகளில் மாதம் இரு முறை செய்து வந்தால் போதும். ஆப்பிளும் தேனும் எல்லா விதமான சருமத்திற்கும் உகந்தவை என்பதால் பெரும்பாலான முக அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பில் மூலப் பொருளாக சேர்க்கப் படுகின்றன என்பது உபரி தகவல். 

மேலே சொல்லப்பட்ட நான்கு விதமான ஆப்பிள் ஃ பேஷியல்களையும் அவரவர் சருமத்திற்கேற்ப ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com