பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள்

பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள்

இங்கே தயாராகும் சரிகைக் கைத்தறிப் புடவையிலோ, வேஷ்டியிலோ செயற்கைச் சாயமேற்றப் படுவதில்லை. வெள்ளை நிற கோரா நூலில் சரிகை நூல் கலந்து அப்படியே நெய்கிறார்கள்.

இந்த வாரம் பாரம்பரிய கேரள கைத்தறி நெசவான பாலராமபுரம் புடவைகளைப் பற்றி அலசலாம். 

பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறுநகரம் பாலராமபுரம். 1700-களின்  தொடக்கத்தில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கு கசவு அல்லது பாரம்பரிய சரிகைச் சேலைகள் மற்றும் வேஷ்டிகள் நெசவு செய்வதற்காக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வள்ளியூரில் இருந்து 20 சாலியர் குலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கேரளாவிற்கு வரவழைக்கப் பட்டன. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்தவர் ராஜா பாலராமவர்மா, தமிழ்நாட்டு நெசவாளர்களை அழைத்து வந்து இவர் குடியேற்றம் செய்த கிராமம் பின்னாட்களில் ராஜாவின் நினைவாக 'பாலராமபுரம்' என்றானது. முதலில் சாலியர்களால் நடைபெற்ற நெசவுத் தொழில் பிறகு நாராயண குரு மற்றும் அய்யா வைகுண்டர் எழுச்சிக் காலத்தில் ஈழவ சமுதாயத்தினர் மற்றும் முஸ்லீம்கள் என அனைவராலும் நடத்தப்பட்டன. 

அப்படித்தான் கேரளாவின் பாரம்பரியம் மிக்க சந்தன நிற சரிகைக் கைத்தறிப் புடவைகள் இந்த பாலராமபுரத்திலிருந்து தயாராகி உலகம் முழுதும் விற்பனையாகத் தொடங்கின. கைத்தறிப் புடவைகளோடு வேஷ்டிகளும், முண்டும், செட் முண்டும் நேரியதும் கூட இங்கிருந்து தான் தயாராகிறது. மலையாளிகள் மட்டுமல்ல இப்போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கையால் நெய்யப்படும் இந்தக் கைத்தறிப் புடவைகளை விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பதால் இந்த புடவைக்கான மவுசும், ஊருக்கான மவுசும் அதிகம். இங்கே தயாராகும் சரிகைக் கைத்தறிப் புடவையிலோ, வேஷ்டியிலோ செயற்கைச் சாயமேற்றப்படுவதில்லை. வெள்ளை நிற கோரா நூலில் சரிகை நூல் கலந்து அப்படியே நெய்கிறார்கள். பழமை மாறா தெற்கு கேரளப் பகுதிகளில் திருமணமென்றால் ஆண்கள் சாயமேற்றப்படாத வெண்ணிற வேஷ்டியும், சட்டையும் அணிவது பாரம்பரிய உடை. பெண்கள் எனில் முண்டும், நேரியதும் அல்லது செட் முண்டு தான் திருமணப் பாரம்பரிய உடை. இந்த செட் முண்டு இப்போது ‘பாலராமபுரம் புடவைகள்’ என்று புது அவதாரம் எடுத்திருக்கிறது. 

பாலராமபுரம் நெசவின் சிறப்பு

பாலராமபுரம் நெசவு தனித்த அடையாளம் கொண்டது. இந்தவகை நெசவில் ஊடும், பாவும் தனித்தனியாக கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு புடவை நுனியில் தனித்தனி நூல் முடிச்சுகளாக முற்றுப்பெறும். எனவே புடவை முழுமைக்கும் எங்கும் பிசிறுகளே இன்றி ஒரே சீரான தன்மை காணப்படும். அதோடு புடவையில் பயன்படுத்தப்படும் அன்னப் பட்சி, மயில், கிளி, போன்ற ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக மோல்டுகளில் பதியப்பட்டு பின் தேர்ந்தெடுத்த சிறந்த நெசவாளார்கள் மூலம் தனித் தனியாக புடவைகளில் அச்சிடப்பட்டு நேர்த்தியாக நெய்யப்படுகின்றன. எனவே புடவையில் அவற்றைக் காணும் போது முன்புறம், பின்புறம் எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். அதாவது பொதுவாக புடவைகளில் சரிகை டிஸைன்கள் முன்புறம் பார்க்க அழகாகத் தோன்றினாலும் புடவையை மாற்றிப் போட்டால் ஒரிஜினல் டிஸைன் போலில்லாமல் அவுட்லைன் போலத் தோன்றும். ஆனால் பாலராமபுரம் நெசவில் சரிகை டிஸைன்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனி நெசவென்பதால் டிஸைன்கள் முன்புறம் பின்புறம் என வித்யாசமே காணமுடியாத அளவுக்கு கைத்தறி நெசவின் நுட்பம் அபாரமாக இருக்கும். இது தான் பாலராமபுரம் நெசவின் சிறப்பு.

புடவை ஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறி நெசவா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

  • தனித் தனி நெசவென்பதால் புடவை டிஸைன்கள் முதன்மையாக பளிச்சென்று தோற்றமளிக்கும். முன் புற பின்புற வித்யாசம் இருந்தால் அது ஒரிஜினல் இல்லை.
  • புடவையில் எந்த இடத்திலும் பிசிறுகளே இல்லாது மிக நேர்த்தியாக நெசவு செய்யப்பட்டிருக்கும். நெசவில் நேர்த்தி இல்லாவிட்டால் அது ஒரிஜினலாக இருக்காது.
  • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் எனவே புடவை சாயம் போகாது சாயம் போனால் அது ஒரிஜினல் இல்லை. 
  • பிற காட்டன் புடவைகளை விட பாலராமபுரம் கைத்தறிப் புடவைகளில் நூல் அடர்த்தி அதிகமிருக்கும். அதை வைத்தும் ஒரிஜினலை அடையாளம் காணலாம்.
  • புடவைகளில் ஸ்டார்ச் குறைவாகவே பயன்படுத்துவார்கள் என்பதால் பிற காட்டன் புடவைகளை விட  இந்தப் புடவைகளைத் தொட்டுப் பார்க்கும் போது  மிருதுத் தன்மை அதிகமிருக்கும். இப்படியும் ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம்.

பராமரிப்பு

கைத்தறிப் புடவைகளை எப்போதுமே பட்டுப் புடவைகள் போலத்தான் தனியாக நறுவிசாகப் பராமரிக்க வேண்டும். உடுத்தும் ஒவ்வொரு முறையும் துவைக்க வேண்டும் என்பதில்லை, இந்தப் புடவைகளை உடுத்திக் கொண்டு யாரும் நாற்று நடப் போவதில்லை. விழாக்களுக்கும், அலுவலகங்களுக்கும், உடுத்திக் கொண்டு விட்டு வீடு திரும்பியதும் உடனே புடவையை நீவி மடித்து காற்றாட உலர்த்தி மடித்து எடுத்து வைக்கலாம். மீண்டும் மறுமுறை உடுத்திய பின் புடவையை தரமான நபர்களிடம் உலர் சலவைக்குத் தரலாம். கைத்தறிப் புடவைகளை அதிக நேரம் வெயிலில் காய வைக்கக் கூடாது. வெயிலில் லேசாகக் காய்ந்ததும் நிழலில் உலர்த்தலாம். உலர்ந்த புடவைகளை உடனடியாக சுருக்கங்கள் இன்றி மடித்து அயர்ன் செய்து வைத்து விடுவது கைத்தறிப் புடவைகளின் ஆயுளுக்கு உகந்தது. 

ஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள் எங்கே கிடைக்கும்?

தமிழ்நாட்டில் சென்னை நந்தனம் அண்ணாசாலையில் இருக்கும் CCIC காட்டேஜ் எம்போரியம், கோவையில் PSR சில்க், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் பாலராமபுரம் புடவைகள் கிடைக்கும் என்று 'இண்டியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாலராமபுரத்தில் கைத்தறிப் புடவைகள் எப்படி நெசவு செய்கிறார்கள் என்று கீழே உள்ள இணைப்பை அழுத்தி விடியோவைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். 

https://www.youtube.com/watch?v=dkcSkSMDzFw 

அவ்வளவு தானா?! இன்னுமிருக்கிறது...

அடுத்த வாரம் 'மங்களகிரி’ கைத்தறிப் புடவைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com