வாழ்த்துக்கள் நமது எல்லா ஆசிரியர்களுக்கும்!

மாணவர்களுக்கு  தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பாடங்கள் எடுக்க வேண்டுமென்று சின்ன ஆசை. ஆசை நிறைவேறுமா இல்லையோ மாணவர்கள் எண்ணிக்கை போதாது என்றெண்னி பள்ளி அதுவரை மூடப்படாமல் இருந்தால் தன்யவாதி ஆவேன்.
வாழ்த்துக்கள் நமது எல்லா ஆசிரியர்களுக்கும்!

ஒன்றாம் வகுப்பில் அடிக்கடி வகுப்புக்கு மட்டம் போட்டால் வயிற்றைப் பிடித்துக் கிள்ளும் கண்ணாடி அணிந்த  கனகவல்லி டீச்சர், இரண்டாம் வகுப்பை விட்டு மூன்றாம் வகுப்புக்கு  மாறுகையில்  'நாங்க  இவங்கள  விட்டுப் போக மாட்டோம்' அவங்க தான் எங்க 3 ஆம் கிளாஸ் டீச்சரா வரணும் என்று பல மாணவ மாணவிகளை உரிமைக்குரல் எழுப்ப வைத்த சின்சியர் பாஞ்சாலி டீச்சர், முன்றாம் வகுப்பில் வேலை நிமித்தம் அம்மாவுக்கு இடமாறுதல் ஆனதால் பாட்டி ஊரில் படிக்க வேண்டிய நிர்பந்தம் அங்கும் கூட ஆசிரியர்கள் மீதான அபிமானத்திற்கு குறைவில்லை. 

முங்கு நீச்சல் சொல்லித் தந்து கூடவே நுங்கு வெட்டி சாப்பிடத் தரும் பாசக்கார சுந்தர் சிங் வாத்தியார், நான்காம் வகுப்பில் பள்ளியின் இலவச மதிய உணவுக்கு முடியும் போதெல்லாம்  தன் வீட்டில் செய்த சாம்பார் ,ரசம், பொரியலை ஏழ்மைப்பட்ட மாணவர்களுக்கு கொடுத்து விடும் பெரிய வாத்தியார் சந்திர பால், குப்தர்களின் பொற்காலத்தை இன்று கேட்டாலும் பத்து மார்க் குறைவின்றி பெறும் அளவுக்கு மனதில் பதிய வைத்து  வரலாற்றுப் பாடம் நடத்திய ஐந்தாம் வகுப்பின் சரோஜினி டீச்சர். 

மாதிரி சட்ட சபை தேர்தல் எல்லாம் நடத்தி குடிமையியலை குற்றமின்றி புரிந்து கொள்ள வைத்த ஆறாம் வகுப்பின் ராமு வாத்தியார், சிரிக்கச் சிரிக்கப் பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பின் ராமசாமி வாத்தியார், இலக்கணம் பற்றிய அறிமுகமே தராமல் வருடம் முழுக்க ஆங்கிலம் என்பது வெறும் வாசித்தல் மட்டுமே என்ற அளவுக்கு  ஆங்கிலத்தையும் தமிழில் நடத்தி அறிவுக்கு கண்களை திறக்க வைத்த சீனிவாச வாத்தியார். 

அதற்கு முற்றிலும் நேர்மாறாக ஒன்பதாம் வகுப்பில் காலை 7.30 மணி ஸ்பெஷல் கிளாசில் ஒழுங்காக கிராமர் கற்றுக் கொள்ளாவிட்டால் கை நீட்டச் சொல்லி விரல் முட்டிகளை கம்பால் பதம் பார்த்த புத்தி சிகாமணி வாத்தியார், பத்தாம் வகுப்பில் கணக்கு பாடம்பிடிக்காதவர்களையும் பெருங்காதலுடன் கணிதம் பயில வைத்த அனுராதா டீச்சர், தூங்கி கொண்டே பாடம்ப நடத்தினாலும் பொதுத்தேர்வில் 98 மார்க் வாங்க வைத்த தமிழ் வாத்தியார் சுப்பிரமணி அய்யா. 

பதினோராம் வகுப்பின் கெமிஸ்ட்ரி டீச்சர் கலாமணி, பனிரெண்டாம் வகுப்பில் 'நான்வெஜ் கிடைச்சா விடாதீங்க பிள்ளைங்களா! பப்ளிக் பரீச்சைக்கு நல்லா சாப்பிடுங்க நல்லா படிங்க' என்று விலங்கியல் பாடம் நடத்திப் புரிய வைத்த சுப்புலக்ஷ்மி டீச்சர்.

இவர்களோடு டியூஷன் டீச்சர்களையும் மறந்து விடக்கூடாது தொடக்கப்பள்ளி முதல் பள்ளி இறுதி வரை என்றென்றைக்குமாய் மறக்க விரும்பாத கல்பனா அக்கா, ஆனந்த் சார், பிஸிக்ஸ் குபேந்திரன் சார், மேத்ஸ் பாண்டியன் சார், ரெஜினா டீச்சர் எல்லோரது ஞாபகமும் இன்று வந்து போகிறது.

இவர்கள் மட்டுமல்ல  கல்லூரிக் காலத்தில் உடனிருந்த தோழமைகளாய் வழிகாட்டிய ஸ்ரீலதா மேம், ஜெயசித்ரா மேம், தமிழ் துறை சிதம்பரம் சார், சிங்கார வேலன் சார், சங்கீதா மேம், அருளமுதம் மேம் இன்னும் யாரையாவது மறந்திருப்பேனோ தெரியவில்லை. அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். 

என் சொந்த கிராமத்தில் நான் படித்த அரசு நடுநிலைப் பள்ளிக்குப் போய்  வருடம் ஒருமுறை முழு நாளும் அங்கிருக்கும் மாணவர்களுக்கு  தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பாடங்கள் எடுக்க வேண்டுமென்று சின்ன ஆசை. ஆசை நிறைவேறுமா இல்லையோ மாணவர்கள் எண்ணிக்கை போதாது என்றெண்னி பள்ளி அதுவரை மூடப்படாமல் இருந்தால் தன்யவாதி ஆவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com