தட்டுங்கள், கொடுக்கப்படும்!

லக்ஷ்மி தீபாவைப் பார்த்தால் கல்லூரிக்குச் செல்கின்ற பெண் போன்று இருக்கிறார்.
தட்டுங்கள், கொடுக்கப்படும்!

லக்ஷ்மி தீபாவைப் பார்த்தால் கல்லூரிக்குச் செல்கின்ற பெண் போன்று இருக்கிறார். ஆனால் டிஜிடல் பணப் பரிமாற்றம் எனப்படும் டிஜிடல் வேலட் துறையில், இருபத்தொன்பது வயதே ஆன லக்ஷ்மிதீபா இன்று ஒரே பெண் தொழிலதிபராகியுள்ளார்.  அது என்ன டிஜிடல் பணப் பரிமாற்றம்?  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போல லக்ஷ்மிதீபாவின் 'யெல்டி' நிறுவனம் ஒரு நிதி அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது. தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.  டிக்கட் வாங்குவதற்கு பதில் இந்தப் பண அட்டையை வாங்கி, நுழைவு வாயிலில் உள்ள தடுப்பில் இருக்கும் நீண்ட சதுர ஒளியில் காண்பித்தால், அது டிக்கட்டுக்கான தொகையைக் குறைத்துக்கொண்டு, கார்டில் மீதி எவ்வளவு இருக்கிறது என்று சொல்லிவிடும்.

இப்போதுதான் சென்னையிலும் மெட்ரோ வந்துவிட்டதே  யெல்டியின் folks கார்டை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இதில் இன்னொரு கூடுதல் பயனும் இருக்கிறது.  இதை நீங்கள் கடைகளில் பொருள்கள் வாங்கும்போதும் கிரெடிட் கார்டு போலப் பயன்படுத்தலாம்.  நீங்கள் கார்டை வாங்கும்போது உங்களுக்கு ஒரு பின் நம்பர் தருவார்கள்.  கடையில் அவர்கள் வைத்திருக்கும் பண பரிவர்த்தனைக் கருவியில் - யெல்டி அவ்ரா கருவியில் - கார்டைத் தேய்க்க வேண்டாம்.  கார்டால் தட்ட வேண்டும். பின்னர் உங்கள் ரகசிய பின் எண்ணை அந்தக் கருவியில் அழுத்தினால் போதும். பணம் கணக்கு வைக்கப்பட்டுவிடும்.  இதை நியர் பீல்ட் கம்யூனிகேஷன் அதாவது என்.எப்.சி. டெக்னாலஜி என்கிறார் லக்ஷ்மிதீபா.  

'இதில் வழக்கமான சிப் இல்லை.  கோடுகள் இல்லை. எண்கள் இல்லை. அதனால் இதை மற்ற கார்டுகள் மாதிரி பிரதி (க்ளோன் செய்து) எடுத்துவிட முடியாது.  மொபைல் சிம் வாங்குகிற போது செய்யும் ஆவணப் பதிவுகள் எதுவும் கிடையாது.  பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் இவை தெரிவித்தால் போதும்.  நூறு ரூபாயிலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரை ஒரு மாதத்தில் இதில் தேக்கி வைத்துக் கொள்ளலாம்;  இதுதான் டிஜிடல் பண பரிவர்த்தனை.  காசிலிருந்து காசு இல்லாத கணக்கு. காசு பணத்தைக் கண்ணில் காட்டவே வேண்டாம்' - என்று சொல்லும் ஒரே இந்திய நிறுவனம் இது. 35 சதவிகிதம் வரை சேமிப்பும் கிடைக்குமாம். ஆக, வணிகர் - வாடிக்கையாளர் - யெல்டி சமூகம் ஒன்று உருவாகி வருகிறது.  ஒவ்வொரு நாளும் 100 வணிகர்கள் இதில் இணைந்து கொள்கிறார்களாம்.  இப்போதைக்கு 14,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் யெல்டிக்கு.  இந்தியாவில் பேடிஎம் கார்டுக்கு இது தோழன்.  ஈ -வேலட்டுடன் முதல் தடவையாகக் கைகோர்த்துக் கொண்டிருக்கிறதாம். பாரிஸில் ஒரு கூகுள் மொபைல் நிகழ்ச்சியின்போது, 'எங்கள் என்.எப்.சி. போனுக்கு அடுத்ததாக உங்கள் யெல்டி போன்தான்'' என்று பாராட்டியிருக்கிறார்கள். 

இதை தில்லி மெட்ரோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  வேறு சில அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் கூட அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, ஏர் இந்தியா கான்டீனில்.  4000 பேர் வந்து டீ குடித்தால், 8000, 12,000 பேர் டீ குடித்தது போல் கணக்கு வந்து கொண்டிருந்தது.  ஒரே நபரே நான்கு இடங்களில் டீ குடித்துவிட்டு, அல்லது நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.  இந்த கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 4000 டீ குடித்தால், 4000 தான் கணக்கு வந்தது.  

யெல்டி கார்டு இப்போது, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், போரூர் முதலிய இடங்களில் புழக்கத்தில் இருக்கிறது.  கொத்துக் கொத்தாகக் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் இவர்கள் கவனம் செலுத்தி வந்ததுதான் காரணம். இன்றைக்கு லக்ஷ்மிதீபா தன் நிறுவனத்தில் பிஸினஸ் டெவலப்மென்ட், பிராடக்ட் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், அட்வர்டைசிங் மற்றும் மனிதவளத் துறை இவற்றைக் கவனித்துக் கொள்கிறார்.  

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
'அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு பிறகு இங்கிலாந்திலுள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் அட்வான்ஸ்ட் போட்டானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையில் பட்ட மேற்படிப்பு படித்தேன்.  அது என் துறைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இங்கிலாந்தில் இருந்தபோது, ஒரு பன்னாட்டு டெலிகாம் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.  என் அப்பா ரா. அர்ஜுனமூர்த்தி (இப்போது இவர்தான் கம்பெனி நிறுவனர் மற்றும் எம்.டி.) உலக அளவில் பயன்படுத்தும் ஒரு பொருளை நாம் சென்னையில் தயாரிக்க வேண்டும் என்றார். நானும் அப்பாவும் வெகு தீவிரமாக ஆராய்ந்தோம்.  உலகம் முழுக்க கோடிக் கணக்கான மக்களைச் சென்றடையும் ஒரு பொருளைத் தயாரிக்க முடிவு செய்தோம்.  2012-இல் நான் இந்தியா திரும்பியதும், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிலுள்ள லைசென்ஸ் பெற்ற பிறகு சென்னையில் யெல்டி சாஃப்ட்காம் நிறுவனத்தைத் தொடங்கினோம். அதற்கு முன், ஆஸ்ட்ரியா, ஜெர்மனி, சீனா, கொரியா, பிரான்ஸ் என்று ஆராய்ச்சிப் பயணம் செய்தோம். நிறையத் தெரிந்து கொண்டோம். இப்போது சென்னையிலும் புதுச்சேரியிலும் இதை அறிமுகம் செய்திருக்கிறோம்.

படிப்படியாகத் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்திவிட்டு, தென்னிந்தியா முழுக்க யெல்டியை எடுத்துச் செல்வோம்' என்றார். 
- சாருகேசி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com