‘ஒரு ஆணுக்காக என் சுதந்திரத்தை நான் இழக்கனுமா?’ சிந்திக்க வைத்த ஒரு ஏமாற்றப்பட்ட பெண்ணின் கேள்வி!

ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணிற்கு வாழ்க்கையைப் பற்றி இப்படியொரு புரிதலா என்கிற கேள்வி எனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுத் தந்தது.
‘ஒரு ஆணுக்காக என் சுதந்திரத்தை நான் இழக்கனுமா?’ சிந்திக்க வைத்த ஒரு ஏமாற்றப்பட்ட பெண்ணின் கேள்வி!

தினமும் காலை சரியாக 8 மணிக்கு என் வீட்டு காலிங் பெல் அடிக்கும். கதவைத் திறந்தால் சரியான உயரம், அழகான முக அமைப்பு, எப்போதும் அவளது ஒரு பக்க கண்ணத்தை தொட்டுக் கொண்டே இருக்கும் சுருட்டை முடி எனக் கண்ணுக்கு லட்சணமான பெண் ஒருத்தி என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பாள். அவளது பெயர் சந்திரிகா, என் வீட்டில் வேலை செய்யும் பெண்.

இதுவரை அவள் நேரம் தவறியதோ இல்லை தாமதமாக வந்து அதற்கு உப்பு சப்பு இல்லாத காரணங்களை சொன்னதோ கிடையது. அப்படி ஒரு தொழில் பக்தி அவளுக்கு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் முழு சுறு சுறுப்புடன் அனைத்து வேலைகளையும் துரிதமாக செய்ய ஆரம்பிப்பாள். அவள் செய்யும் வேலைகளில் இதுவரை என் கண்ணுக்கு எந்தவொரு குறையும் தென்பட்டது கிடையாது. அதிலும் சந்திரிகாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் எல்லா வேலைகளையும் முடித்த பின் சில நிமிடங்கள் என்னுடன் அமர்ந்து அவளைச் சுற்றி அவள் உலகத்தில் நடக்கும் எல்லாக் கதைகளையும் சொல்வாள். இது என்னுடன் வாழும் பிற மனிதர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி நான் தெரிந்து கொள்ள அதுவும் குறிப்பாக என்னைப் போன்ற பிற பெண்களை பற்றி நான் அறிந்துகொள்ள உதவும்.

சந்திரிகாவிற்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான், இவளது கணவன் இவர்கள் இருவரையும் அனாதையாகத் தவிக்க விட்டு வேறொரு பெண்ணுடன் (சந்திரிக்காவின் தோழி) ஓடிய பிறகும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னந்தனியே அந்த மகனை வளர்த்து வருகிறாள். ஒரு நாள் எப்போதும் போல அவள் பேசிக்கொண்டிருக்கும் போது தனது மகனை எப்படியாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற அவளது ஆசையைக் கூறினாள்.

அப்போது தயக்கத்துடன் “உன் கணவன் மட்டும் உன்னுடன் வாழ்ந்து இருந்தால் இதில் உனக்கு அவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது! உன் சினேகிதியுடனேயே உன் கணவன் கள்ளத்தொடர்பு வைத்து உன்னை ஏமாற்றியது உனக்குக் கவலையாக இல்லையா?” என்ற ஒரு முட்டாள் தனமான கேள்வியைக் கேட்டேன். எப்படியும் அது அவளது வாழ்க்கையில் மிகப்பெரிய இடியாகத்தான் விழுந்திருக்கும், அதற்கான பதிலை தெரிந்து கொண்டே அப்படியொரு கேள்வியை தயக்கத்துடன் அவள் முன் வைத்தேன். ஆனால் அதற்கு அவள் சொன்ன பதில் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. 

“இதுவரை என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக நான் இருந்ததே இல்லை. எனக்கு 14-வயது இருக்கும் போதே இவரை எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது எனக்கு இவன் இப்படிப் பட்ட ஒரு ஊதாரி என்பது தெரியாது. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் காசையெல்லாம் தண்ணி போல் செலவு செய்வான். இதுவரை எனக்காகவும் என் மகனுக்காகவும் அவன் எதுவுமே செய்தது கிடையாது. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் அவன் என் தோழியுடன் செல்லும் போது என்னிடம் சொல்லிட்டே போயிருக்கலாம், நானே சந்தோஷமா அனுப்பியிருப்பேன்” என்று அவள் சொன்னதை கேட்டு நான் சற்று அதிர்ந்து தான் போனேன், ஆனால் அதே சமயம் பள்ளி செல்லும் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் நுழைந்த ஒரு பெண்ணின் சொற்களில் இப்படியொரு தெளிவா என வியந்தும் போனேன்.

“மீதம் இருக்கும் உன் வாழ்விற்காக வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ யோசிக்கவில்லையா?” என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினேன், அதற்கு அவள் “ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக இப்போதிருக்கும் என்னுடைய சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும் நான் ஏன் இழக்க வேண்டும்?” என்று சர்வ சாதரணமாக சொல்லிவிட்டு நேரமாகி விட்டது மத்ததை நாளைப் பேசலாம் என்று கூறி சென்றாள்.

அவளிடமிருந்து இப்படியொரு பதிலை சற்றும் எதிர்பாராத நான் அவள் போன பிறகும் சில நிமிடங்கள் மீண்டும் மீண்டும் அவளது சொற்களில் இருந்த உண்மையை ஆராய்ந்து கொண்டே இருந்தேன். பெரிய பெரிய படிப்பு படித்து பட்டம் பெறாத, அறியாத வயதில் தெரியாத ஒரு ஆணைத் திருமணம் செய்து ஒரு மகனுக்குத் தாயும் ஆன பிறகு அவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணிற்கு வாழ்க்கையைப் பற்றி இப்படியொரு புரிதலா என்கிற கேள்வி எனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுத் தந்தது. ‘சந்தோஷமான வாழ்க்கை என்பது நம்முடன் இருக்கும் மனிதர்களைப் பொறுத்ததல்ல, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் வாழ்விற்கான சந்தோஷம் நம்மிடமே தான் இருக்கும், குறிப்பாக இந்தச் சமூகம் சொல்லும் நெறிகளில் அது இல்லை!’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com