செம்புலப் பெயல் மழையென ஒரு சங்கீத அனுபவம் பெறச் செய்யும் ‘சந்தூர்’ இசைக்கருவி!

மின்னலே திரைப்படத்தில் வரும் வெண்மதி,வெண்மதியே நில்லு பாடலில் கூட சந்தூர் இசைக்கருவி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வாசித்திருப்பது சந்தூர் சீனு
செம்புலப் பெயல் மழையென ஒரு சங்கீத அனுபவம் பெறச் செய்யும் ‘சந்தூர்’ இசைக்கருவி!

‘செம்புலப் பெயல் மழை’ என்று சங்க இலக்கியங்களில் சொல்லக் கேள்வி, செம்மண் நிலத்தில் மழை பெய்தால் மண்ணும், மழைநீரும் ஒத்த இயைபோடு ஒருங்கே கலந்தால் அந்த மழைக்கு செம்புபபெயல் மழை எனப்பெயர். பொதுவாக இதை தலைவன், தலைவியின் ஒத்திசைந்த வாழ்க்கைக்கு உதாரணமாகக் குறுந்தொகைப்பாடலொன்றில் பாடி வைத்திருக்கிறார்கள். இதை வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஒத்திசைவான எல்லா விஷயங்களுக்குமே நாம் உதாரணமாகக் காட்டலாம் தான். அந்த வகையில் அப்படியோர் அருமழையை இசை வடிவாக ரசிக்க முடியுமா? எனில்; ஆம் முடியும், அதற்கு நீங்கள் சந்தூர் இசை கேட்க வேண்டும். சந்தூர் பெரும்பாலும் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பயன்படுத்தப் படுவதில்லை அது ஒரு இந்துஸ்தானி இசைக்கருவி. கேட்கக் கேட்க நாதவெள்ளம் செவிக்குள் பாய்ந்து நயம்படப் புகும் அழகையும், அனுபவத்தையும் நாம் செம்புலப்பெயல் மழையோடு தான் ஒப்பிட வேண்டியதாய் இருக்கிறது. வேண்டுமானால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

இந்தியாவின் புகழ்பெற்ற சந்தூர் இசைக்கலைஞர்களில் பண்டிட் சிவ்குமார் ஷர்மாவுக்குத்தான் என்றுமே முதலிடம். அவரது லயமான சந்தூர் இசையாடலைக் கேளுங்கள்;

சந்தூர் இந்தோ- பெர்ஷியன் வகை இசைக்கருவிகளில் ஒன்று. இதன் தோற்றம் காஷ்மீர் என்றாலும் இன்று இக்கருவியை தேசிய இசைக்கருவியாக அறிவித்திருப்பது ஈரான் தேசம். பொதுவாக வால்நட் அல்லது மேப்பிள் மரங்கள் மட்டுமே இவ்விசைக்கருவியை தயாரிக்க உகந்தவை. இந்தியாவின் சந்தூர் இசைக்கருவி, 72 நரம்புக் கம்பிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும் பண்டைய இந்தியாவில் இதை ‘சத தந்த்ரி வீணா’ என்ற பெயரில் ஜம்மு& காஷ்மீர் பகுதிகளில் பெருமளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். சதம் என்றால் 100 என்று பொருள். அவ்விதம் 100 வலிமையான நரம்புக் கம்பிகள் கொண்டு இக்கருவியில் இருந்து இசை எழுப்பப் பட்டதால் இதை அப்போது ‘சத தந்த்ரி வீணா’ என்று அழைத்திருக்கிறார்கள். இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்திய மூதாதையர்கள் என மெசபடோமியர்களும், பாபிலோனியர்களும் அடையாளம் காட்டப்பட்டாலும் அதற்கான உத்திரவாத சான்றுகள் எதுவும் கிட்டவில்லை என்கிறார்கள்.

சந்தூர் இசைக்கருவியை வாசிக்க உகந்த முறை அர்த்தபத்மாசன முறை. ஒருவர் சந்தூர் இசைக்கருவியை வாசிக்க வேண்டுமெனில் அர்த்தபத்மாசனமிட்டு அமர்ந்து தொடையில் சந்தூரை ஒரு குழந்தையாகப் பாவித்து அமர வைத்தே வாசிக்க முடியும். அப்படி வாசிக்கையில் சந்தூரின் அகலாமான பகுதி இசைக்கலைஞரின் இடுப்பை ஒட்டியும், குறுகிய பகுதி வெளிப்புறமாகவும் அமையும். வீணை போன்ற பிற நரம்பிசைக்கருவிகளைப் போல இதை விரல்களால் வாசிக்க முடியாது. இதற்கென மரத்தாலான சின்னஞ்சிறு சுத்தியல் போன்றதொரு கருவி இசைக்கருவியோடு சேர்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு தான் இவ்விசைக்கருவியில் இருந்து இசை பிரவகித்துப் பொங்கியெழுந்து கேட்பவர் செவியெங்கும் இன்னிசை மழையால் நிறையச் செய்கிறது. அடிப்படையில் சந்தூர் இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்வது மிகக்கடினமானதென்றே கருதப்படுகிறது. ஏனெனில் மிக மெல்லிய ஸ்ட்ரோக்குகள் மற்றும் இசையின் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் சாத்தியமாகச் செய்யும் சந்தூரில் பாண்டித்யம் தப்பினால் பெரும்பிழையும் எளிதில் நிகழச் சாத்தியமுண்டு. ஆகவே இதைக் கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் ஆட்கள் வெகு குறைவே!

இந்தியாவின் புகழ்மிக்க சந்தூர் இசைக்கலைஞர்கள்... 

  • சிவ்குமார் ஷர்மா
  • பஜன் சோபொரி
  • தருண் பட்டாச்சார்யா
  • ஆர்.விஸ்வேஸ்வரன்
  • ராகுல் ஷர்மா
  • உல்லாஸ் பபட்

- உள்ளிட்டோர் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சந்தூர் இசைக்கலைஞர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்தியத் திரைப்படங்களில் சந்தூர் இசை...

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சந்தூர் இசைக்கோவையைக் கேளுங்கள்...

இது மட்டுமல்ல, இன்னும் பல பாலிவுட் திரைப்படங்களில் சந்தூர் இசைக்கோவை மிக அருமையான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு சிறந்த உதாரணம் அமிதாப், ஜெயபாதுரி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு  வெளியான சில்சிலா இந்தித் திரைப்படத்தின் தீம் இசை. ஏனெனில் இதை வாசித்தவர் சாட்ஷாத் பண்டிட் சிவ்குமார் ஷர்மாவே தான்.

இந்தியாவில் சந்தூர் கற்றுக் கொண்டு வாசிக்க ஆண்களே தயங்கிய நிலையில், சந்தூர் இசையைக் கற்றுக் கொண்டு அற்புதமாக மேடைக்கச்சேரிகளும் செய்து வரும் முதல் இந்தியப் பெண் ஸ்ருதி அதிகாரி, அவரது இசைத்திறனைக் கேளுங்கள்;

இத்தனை அருமையான சந்தூர் இசையை வாசிக்க தமிழில் கலைஞர்கள் இல்லையா என்கிறீர்களா? ஏன் இல்லை... இதோ சந்தூர் சீனு என்று ஒரு இசைக்கலைஞர் இருக்கிறார். தமிழில் அவர் வாசிக்காத இசையமைப்பாளர்கள் இல்லை. வாசிக்காத இசைக்கருவிகள் இல்லை. எல்லாக் கருவிகளை விடவும் சந்தூர் இவரது ஸ்பெஷல் என்கிறார்கள். இதோ அவரது கைத்திறனில் சந்தூர் இசை கேளுங்கள்;

மின்னலே திரைப்படத்தில் வரும் வெண்மதி,வெண்மதியே நில்லு பாடலில் கூட சந்தூர் இசைக்கருவி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வாசித்திருப்பது சந்தூர் சீனு என அவரது நேர்காணலொன்றில் அவரே கூறியிருக்கிறார். அந்தப் பாடலைக் கேட்டால் பிற வாத்தியங்களுடன் சந்தூர் இசை தனித்து ஒலிப்பதை நீங்களே அடையாளம் காணலாம்.

சந்தூர் பற்றி சீனு என்ன சொல்கிறார் எனில், சந்தூரில் மட்டும் 10 வெரைட்டிகள் இருக்கின்றனவாம். காஷ்மீர் சந்தூர், பெர்ஷியன் சந்தூர், ஐரோப்பிய நாடுகளின் டல்சிமர் எல்லாமும் சந்தூரின் வெவ்வேறு வடிவங்களே தவிர, அவற்றிலிருந்து வெளிவரும் இசையும், நாதமும் ஒன்றே என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com