தனி மனிதன் பாதுகாப்பானவன், கும்பல் மோசமானது – 'அடியாள்' நூல் குறித்து!

2007-ஆம் வருடம் என நினைக்கின்றேன். எனது வீட்டின் மிக அருகாமையில் இருக்கும்
தனி மனிதன் பாதுகாப்பானவன், கும்பல் மோசமானது – 'அடியாள்' நூல் குறித்து!

2007-ஆம் வருடம் என நினைக்கின்றேன். எனது வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் பாரதி விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் பாரதி விளையாட்டரங்கத்தில் இப்படி சுதரந்திர தின விழாவும், குடியரசு தின விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்தான். எனது ஊரில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல், நெய்வேலியை சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக அங்கு வந்து அன்றைய தின விழாக்களில் பங்கு கொள்வதை தமது தேசிய கடமையாக, தேசத்தின் மீதான தமது பற்றுறுதியை மெய்ப்பிக்கும் நிகழ்வாக கருதி வருகின்றனர்.

அன்றைய தினத்தில் நான் எனது நண்பர்களுடன் பாரதி விளையாட்டரங்கத்திற்கு சென்றிருந்தேன். பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருக்கும் அவ்விடத்தில் உடன் வந்தவர்களை மிக எளிதாக கூட்டத்தில் தவறு விடுவது வாடிக்கைதான். அதே போல, எதிர்பாராமல் வேறு பல நண்பர்களின் கரங்களை கூட்டத்தினூடாக பற்றிக் கொள்வதும் உண்டு. அப்படி அன்றைக்கு என்னுடன் வந்தவர்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகி, கோபால் என்ற நண்பன் ஒருவனை கண்டடைந்திருந்தேன்.

அவன் அதற்கு முந்தைய சில வருடங்களில் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தவன். வீடு மாற்றத்திற்குப் பிறகு ஓரிரு முறைதான் அவனை சந்தித்திருந்தேன். பார்த்ததும் வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, எனது கை பிடித்து இழுத்துக் கொண்டு வேகவேகமாக ஒரு திசையில் நடக்கத் துவங்கினான். அவனது அவசரத்துடன் என்னால் ஈடுகொடுக்க முடியாததால், அவனை நிறுத்தி ஏன் இந்த அவசரம் என்று கேட்டேன். அதற்கு மிக ரகசியமான குரலில் எனது முகத்தருகே குனிந்து, விழிகள் விரிய, ‘வர்மா அண்ணன (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பாக்கப் போறோம்’ என்று சொன்னான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

வர்மா இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா? அவர் சிறையில் அல்லவா இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன்? எனக்கு குழப்பமாக இருந்தது. அதனால் அவனிடமே கேட்டேன், ‘அவரு ஜெயில்ல இல்ல இருக்காரு? இங்க எப்படி?’ கோபால் மீண்டும் அதே ரகசிய குரலில் சொன்னான், ‘அவரு பெயில்ல வந்திருக்காரு… அதோ அங்கத்தான் இருக்காரு… வா…’ என்றான்.

தொடரந்து அவனுடன் செல்வதா அல்லது வேண்டாமா என பல குழப்பங்கள் எனக்குள் சூழ்ந்திருந்தன. மனதினுள் லேசாக பயம் உண்டாகியிருந்தது. வர்மா என்ற சொல்லை (அ) பெயரை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், நேரில் அவரை ஒருமுறை கூட அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இயல்பாகவே இவ்வாறாக தம்மை சுற்றிலும் உள்ள பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களிடம் நெருக்கம் உண்டாகிவிடும் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் பெயர்களையாவது அறிந்து வைத்திருப்பார்கள்.

வர்மா என்கிறவர் எங்கள் ஊரில் அன்றைய தினத்தில் மிகப் பிரபலமான தாதா. சாதியை மையமாக கொண்ட கட்சி ஒன்றில் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவர், பல குற்ற செயல்களில் பங்கு கொண்டவர். அவர் குறித்தான கட்டுக் கதைகள் ஏராளமாக புழங்கி வந்தன. அவற்றில் எது நிஜம் எது புனையப்பட்டவை என்பதை அவரை தவிர எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை வாட்டர் டேங்க் எனும் பகுதியில், அவரது காரிலேயே வைத்து பட்டபகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஒன்றின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்படியாக நான் அறிந்து வைத்திருந்த தாதா வர்மாவை பார்க்க கோபால் என்னை இழுத்துக் கொண்டு சென்றான்.

எனது உடலில் உஷ்ணம் ஏறியிருந்தது. நாங்கள் மெல்ல வர்மாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். கோபால் என்னை இழுத்துச் சென்று நிறுத்திய இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் நின்றிருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் கட்சி கரை பதிக்கப்பட்ட வெள்ளுடை அணிந்திருந்தனர். பின்னால் ஒரு பெரிய அடியாள் பட்டாளமே நின்று கொண்டிருந்தது. அதன் மையத்தில் சிவப்பு நிற டீ- ஷர்ட் ஒன்றை அணிந்தபடி, முன்னந்தலையில் வழுக்கை ஏறியிருக்க, தொந்தி பெருத்த வர்மா நின்றிருந்தார். மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்துடன் அவர் அங்கிருப்பதாக எனக்கு தோன்றியது. கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்துகின்ற மிக சாதாரணமான தாதாவாக நான் அறிந்து வைத்திருந்த வர்மாவை ஒரு அரசியல் அடியாளாக உணர்ந்த தருணம் அது!

கோபாலை பார்த்ததும், ‘வாப்பா தம்பி’ என சிரித்த முகத்துடன் அவனை வரவேற்றார். கோபால் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றான். கொலைக்காரன் ஒருவனின் ரத்தம் படிந்த கரங்களை முதல்முறையாக தொட்டு தழுவினேன்.

சட்டென்று நான் அங்கிருந்து சிறிது தூரம் விலகி நின்று கொண்டேன். கோபால் அவரிடம் எவ்வித சங்கடங்களுமின்றி மிக சாவகாசமாக, சந்தோஷமாக பேசிவிட்டு வந்தான். அவ்விடத்திலிருந்து நகர்கையில் மீண்டுமொருமுறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தேன். வேறொரு இளைஞன் அவருக்கு சலாம் போட்டு அவரிடம் கை குலுக்கிக் கொண்டிருந்தான். அவர் செய்த கொலைக்காக அவரை பாராட்டுவதைப் போலிருந்தது அக்காட்சி.

சக மனிதனொருவனின் உயிர் அறுத்த கொலைக்காரன் சகல மரியாதையுடன் தேசியத்தின் சுதந்திர தின விழா நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்ததும், பல இளைஞர்கள் இவ்வாறான குற்றமிழைப்போரிடம் நெருக்கமான உறவு பேண விழைவதும், அவர்களை முன் மாதிரிகளாக கொண்டு தடம் மாறிப் போவதும் பெருகி வருகிறதேயன்றி குறைந்தபாடில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் சிலப்பல ஆண்டுகளுக்கு முன்னால், இதே போல பிரபல அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த ஜோதி நரசிம்மன், மனம் திருந்தி தனது அனுபவங்களை ‘அடியாள்’ எனும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். வெட்டுக்குத்து சம்பவம் ஒன்றின் பழிவாங்கல் நடவடிக்கையாக இவரது கோஷ்டியினர் விழுப்புரம் மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடும் தொடர் வன்முறை நிகழ்வுகளிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

மிகப்பெரிய வன்முறை நிகழ்வொன்றில் பங்கெடுத்துக் கொண்டதற்கு பிறகு எவ்வாறு அவர்கள் தலைமறைவாகின்றனர், யாரெல்லாம் அவர்களுக்கு ரகசியமாக உதவுகிறார்கள், சரணடையும் சடங்கு எவ்வாறு நிகழ்கிறது, காவல் நிலைய விசாரிப்புகள், பின்னர் மத்திய சிறையில் கைதானவர்களை நடத்துகின்ற விதம், மத்திய சிறையின் அமைப்புமுறை என இதுவரையிலும் நாம் வெறும் செய்திகளாக மட்டுமே கடந்து போன விஷயங்களை ஜோதி நரசிம்மன் தனது நூலில் விலாவரியாகவும் மிக நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார். சிறைச்சாலைக்குள் நுழைந்து திரும்பும் அசலான உணர்வை அவரது எழுத்து வாசிக்கையில் நமக்குக் கடத்துகிறது.

கடலூர் மத்திய சிறைச்சலையில் ஒவ்வொரு நாளையும் அவர் கழிக்கின்ற விதம், அவரது மனப் போராட்டங்கள், சகல சந்தோஷங்களுடனும் வெளியில் அலைந்து திரிந்துவிட்டு ஒரு இறுக்கமான சூழலுக்குள் சிக்குண்டு அல்லல்படுவது என புத்தகம் நெடுக சிறை வாழ்வின் ரணங்களை நாம் உணர முடிகிறது.

ஏதேனுமொரு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை வருவோர் அனுபவிக்கும் தண்டனைகள் நியாயமானதுதான் என்றாலும், சிறையறையே சில ஆரம்ப நிலை குற்றவாளிகளை மிகக் கொடூரமான குற்றவாளிகளாக மாற்றிவிடுவதையும் ஜோதி நரசிம்மன் குறிப்பிடுகிறார். சந்தேக வழக்குகளில் கைதாகி முதல் முறையாக காவல் நிலையம் கொண்டு வரப்படும் சாதாரண மனிதனை குற்றவாளியாக மாற்றிவிடும் பண்பு காவலதிகாரிகளிடம் இருக்கவே செய்கின்றன.

ஜோதி நரசிம்மன் தனது புத்தகத்தில் குறிப்பிடும் மத்திய சிறையின் அமைப்புமுறை எனக்கு முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது. அங்கு கைதிகளை மூன்று அடுக்குகளாக பிரித்து அடைப்பார்களாம். முதலாவதாக அரசியல் கைதிகள். அடுத்ததாக உணர்சிவசப்பட்டு சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவோர், மூன்றாவதாக பாலியல் வன்கொடுமை, தொடர் கொலைகள் போன்ற மோசமான செயல்களை செய்கின்றவர்கள். இவர்களிடம் முதல் இரண்டு அடுக்கை சேர்ந்தவர்கள் எவ்வித உறவினை வைத்துக் கொள்ள மாட்டார்களாம்.

குற்றமும், அதன் பிறகான வாழ்க்கையுமாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு மீண்டு வந்த மனிதனொருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பொதுவாகவே, சிறை சென்று திரும்பியவர்களை இந்தச் சமூகம் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அத்தகைய பார்வையை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், சிறை செல்லும் அனைவரும் திட்டமிட்டு குற்றங்களில் ஈடுபடுவர்கள் இல்லை, சந்தர்ப்பமும் சூழலுமே சில குற்றங்களுக்கான காரணங்களாக இருக்கின்றன என்பதை ஜோதி நரசிம்மன் ஒரு கோரிக்கையாகவே இந்த புத்தகத்தின் மூலமாக முன் வைக்கின்றார். போலவே, வன்முறை பாதையை கையில் எடுப்பதன் மூலமாக, ஒருவர் அடையும் கிளர்ச்சி என்பது மிகக் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கக் கூடியது. வாழ்க்கைக்கான பாதை அதுவல்ல என்பதையும் மிக அழுத்தமாக இந்தப் புத்தகம் பேசுகிறது.

ஜோதி நரசிம்மனின் ‘அடியாள்’ புத்தகத்தை படிக்க நேரும் ஒருவர் குற்ற உலகினை மிக நேரடியாக சந்திக்கவும், சிறைச்சாலையின் இருண்ட பக்கத்தை உணரவும், வன்முறை பாதையை கைவிட்டு வாழ்க்கையை சீராகவும், நிம்மதியாகவும் அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற அக்கறையையும் புரிந்து கொள்ள முடியும்.

மிக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ ஒன்று நினைவுக்கு வருகிறது. விஜி என்ற இளைஞனை பகல் பொழுதிலேயே நடு வீதியில் வைத்து சில இளைஞர்கள் வெட்டி கொலை செய்த காணொளி அது. காவல்துறையினர் விஜியை மிகப் பிரபலமான ரவுடி என்று சொல்கிறார்கள். பல வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும், வழக்கு ஒன்றின் விசாரணை முடித்து திரும்புகையில் தான் அவரை சிலர் கொலை செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அவரை கொலை செய்தவர்களும் 20 - 25 வயதுடைய இளைஞர்களே!

அடியாள் புத்தகம் எனக்கு இதுவரையிலும் அறிமுகமாகியிருக்கும் பல இளம் குற்றவாளிகளை நினைவு படுத்தியது. பாக்கியராஜ் அண்ணன், ‘காட்டு’ ராஜா, ரெட் பிரபு, பிரகாஷ், ராஜா மாணிக்கம், ராதா கிருஷ்ணன் என மிக நீண்ட பட்டியல் அது. இவர்களில் சிலருக்கு தற்போது மன மாற்றமேற்பட்டு சீரான வாழ்க்கை அமைந்திருக்க, சிலரை பற்றிய தகவலே இல்லாமல் இருக்கிறது! வர்மாவே கூட பலமான வெட்டுக்காயங்களுடன் புதுச்சேரியில் மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.

வாழ்க்கை பக்குவப்படாத நிலையில் இருக்கும் இளைஞர்கள் எளிதாக குற்ற செயல்களின்பால் ஈர்க்கப்படுகின்றார்கள். வறுமை என்பதுதான் வன்முறையை தேர்வாக இருக்கிறது என்பதை எல்லோரிடத்திலும் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை. பலருக்கும், ஒரு தாதாவாக, ரவுடியாக, அடியாளாக இருப்பதன் மூலமாக கிடைக்கின்ற மரியாதையும், மக்களிடத்தில் அவர்களின் மீது உண்டாகின்ற அச்சமும், பெரிதாக உடலுழைப்பை செலவிடாமல் கையில் புரளும் பெரும் பணமுமே வன்முறை பாதைக்கான பிரதான தேர்வாக இருக்கின்றன. அரசியல் கட்சிகள் இவர்களை தங்களது அடிப்பொடிகளாக பயன்படுத்திக் கொண்டு, பின்னர் தேவையில்லாதபோது கழற்றி எறிந்து விடுகின்றனர்.

அதே போல, காவல்துறையினரும் கைதிகளாக சிறைக்குள் நுழைகின்றவர்களை அதிக கவனத்துடனும், அவர்களின் மன மாற்றத்திற்கு வழிகோலும் வகையிலும் தமது நடவடிக்கைகளை பிரயோகிக்க வேண்டுமே தவிர, மேலும் மேலும் அவர்கள் குற்றம் செய்வதற்கான பயிலரங்காக, பயிற்சிக் கூடமாக சிறைச்சாலை செயல்படக்கூடாது!

வர்மா போன்ற வன்முறையின் மீது பெருமிதம் கொள்கின்ற மனிதர்கள் பிறிதொரு நாளில் தாமும் அதேப்போல வேறொரு மனிதரால் கொலை செய்யப்படலாம் அல்லது வெட்டுப்பட்டு உடல் உறுப்புகள் சிதைக்கப்படலாம் என்பதை உணர்ந்து, நேர்மையாக வாழ்வதன் அவசியத்தையும், மன நிம்மதியையும் உணர வேண்டும் என்பதை மிக அழுத்தமாக உரக்க சொல்கிறது ‘அடியாள்’ புத்தகம்!

புத்தகம் - அடியாள்

ஆசிரியர் - ஜோதி நரசிம்மன்

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்

விலை - ரூ.170/-    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com