வைக்கம் முகமது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ 

புத்தகம் - பாத்துமாவின் ஆடுஆசிரியர் - பஷீர்வெளியீடு - காலச்சுவடுவிலை - ரூ.80
வைக்கம் முகமது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ 

'மதிலுகள்' கடந்தே இன்னும் வர முடியவில்லையாம்! இங்கே என்னடாவென்றால் இந்த பாத்துமாவோட ஆடு பாஷீரின் ‘பால்யகாலசகி’ யையும் ‘உலகப் புகழ் பெற்ற மூக்கை’யும் ஒரே நேரத்தில் தின்று செரித்து விட்டதாம். ஏனென்றால் அது பாத்துமாவோட ஆடாச்சே!' என்ன ஒரு நையாண்டி! குடும்பத்தின் மூத்த மகள்களுக்கென்றே இருக்கும் சில பிரத்யேக உரிமைகளை இதை விட யாரும் நையாண்டி செய்து விட முடியாது.

பெரியதொரு கூட்டுக் குடும்பத்தின் மூத்தமகனாக இருப்பதின் சங்கடங்கள். அதிலும் பஷீர் போல காடாறு வருடம் வீடாறு மாதம் என இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க விழைந்த ஊர் சுற்றிகளுக்கு ரொம்பக் கஷ்டம் தான். மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள், தம்பிமார் மனைவிகள், தங்கைமார் கணவர்கள் அவர் தம் பெற்றெடுத்த சந்தான செல்வங்கள் இத்தனை பேருக்கும் சமர்த்தாக நடந்து கொண்டாக வேண்டிய உறவுச் சிடுக்காட்டமான குடும்ப நிலை.

இத்தனூண்டு ஒலைக்குடிசையினுள் உறவுகளோடும், உம்மா வளர்க்கும் கோழிகளோடும், தங்கைகள் வளர்க்கும் ஆடுகளோடும், தங்களை வேண்டி விரும்பி உறவாட வந்த பூனைகளோடும் பஷீரின் வாழ்வில் சில காலங்கள் கழிகின்றன. அன்றைய நாட்களை அப்படியே நமக்குக் காணத் தருகிறார் பஷீர்.

பஷீரைப் படிக்கும் போதெல்லாம் என்னவோ ஒரு வேதனையை அடக்கிக் கொண்டு வாசிப்பதான உணர்வு மேலெழும்.

காசு காசென்று பிய்த்தெடுக்கும் உம்மாவும் தம்பிமார்களும், தங்கைமார்களும்.

பஷீர் காடாறு வருஷம் போகையில் எல்லாம் வீட்டைக் கவனிப்பவன் தான் தானே என்று அசந்தால் அண்ணனாகி விடும் மூத்த தம்பி அப்துல்காதர்.

கொடுத்த காசுக்கு கணக்குக் கேட்கும் போதெல்லாம் ‘நான் பட்டாளத்திற்கே போகிறேன் என்று சவடால் அடிக்கும் இளைய தம்பி ஹனீபா’

வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் ஆடு கோழிகளுக்கும் பூனைகளுக்கும் கூட அதட்டல் உருட்டல் மிரட்டல் தான் எப்போதும் செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டு எந்நேரமும் கம்பெடுத்துக் கொண்டு அதட்டிக் கொண்டு திரியும் கடைக்குட்டி அத்துலு. அவனிடம் அறுபது ஜோடி செருப்புகள் உண்டாம்.

பிறந்த வீட்டில் தனக்கு மட்டுமல்ல தன் ஆட்டுக்கும் ஏகபோக உரிமை கேட்கும் பாத்துமா.

இவர்களது வாரிசுகள் கதீஜா, ஆரிபா, செய்து முகம்மது, லைலா, அபி மற்றும் சிலர்.

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் பிரசவிக்கும் பாத்துமாவின் ஆடு.

பிரசவத்தை பின் மத்யானப் பேன் பார்த்தல் போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பஷீர் குடும்பத்துப் பெண்ணரசிகள்.

ஆனால் பஷீர் அவர்களைப் போல அல்லவே! பஷீருக்கு பிரசவித்த ஆட்டுக்கு பக்குவம் பார்க்காமல் அப்படியே விட்டு விட்ட தன் வீட்டுப் பெண்கள் மீது பெரும் மனத்தாங்கல் ஏற்படுகிறது, ஆனாலும் ஒன்றும் கேட்டு விட முடியாது, ஏதாவது கேட்டு வைத்தால், பஷீர் இல்லாத நேரமாகப் பார்த்து கேலி பேசிச் சிரிப்பார்கள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தினம் தெரு வழியே பஷீரைப் பார்த்துக் கொண்டே போகும் பள்ளி மாணவிகள்... அத்தனை ஆசை கொண்டு பார்த்துச் சென்றது தன்னை அல்ல தன் வீட்டு சாம்ப மரத்தின் சாம்பக் காய்களைத் தான் என்ற உண்மை தெரியுமிடத்து பஷீரின் தற்பெருமை ‘டமால்’ என்று உடைபடுகிறது. அதற்காக அவர் அந்தப் பெண்கள் மறுபடி சாம்பக்காய்கள் வாங்க வரும் போது நோஞ்சான் காய்களாக கொஞ்சம் பறித்துக் கொடுத்து காசு வாங்கிக் கொண்டு பழி தீர்த்துக் கொள்வது ஏக தமாஷ்!

அதே சமயம் பஷீரின் பெருமை உணர்ந்து வீட்டுக்கு அவரைத் தேடி வந்து ஆட்டோகிராப் வாங்கும் தொழிலாளியின் மகள் சுஹாசினிக்கு பஷீர் பார்த்துப் பார்த்து சிவந்த பழங்களாக நிறையப் பறித்து பொட்டலம் கட்டிக் கொடுத்து அனுப்பும் இடம் ரசனை.

உலகமகா மூத்த எழுத்தாளரே உமக்கு எமது வந்தனங்கள்!

சப்பைக்காலன் அப்துல் காதர் சாகித்ய வித்வப் புகழ் பஷீரைப் பார்த்து ‘இலக்கணம் படித்துக் கொண்டு அப்புறம் நீ இலக்கியம் படைக்கலாம் காக்கா’  (அண்ணன்) எனச் சொல்லுமிடத்து பஷீரின் ஆற்றாமை வெகுண்டெழுகிறது.

உம்மா பஷீரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்.

பாத்துமாவுக்கோ பஷீர் அவள் மகள் கதீஜாவுக்கு ஒரு ஜோடி தங்கக் கம்மல் செய்து தர வேண்டுமென பேராவல்.

பஷீரிடம் இருந்த காசெல்லாம் கரைந்து இனி தம்பிடிக் காசில்லை .

என்ன செய்தார் பஷீர்?!

புத்தகம் வாங்கிப் படித்து அப்புறம் தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகம் - பாத்துமாவின் ஆடு

ஆசிரியர் - பஷீர்

வெளியீடு - காலச்சுவடு

விலை - ரூ.80

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com