மாலன் சிறுகதைகள்! புத்தக விமரிசனம்

ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படியிருக்கும்?’ என்று கேட்பவருக்கு
மாலன் சிறுகதைகள்! புத்தக விமரிசனம்

‘ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படியிருக்கும்?’ என்று கேட்பவருக்கு ‘இதோ இப்படி இருக்கும்!’ என்று காட்டக்கூடிய தொகுப்பு என்று ‘மாலன் சிறுகதைகளை’ ஆனந்த விகடன் பாராட்டியிருக்கிறது. அது முற்றிலும் உண்மை என்பதை இத்தொகுப்பை வாசித்ததும் உணர்ந்தேன்.

மாலன் கதைகளை ஏற்கனவே ‘மாறுதல் வரும்’ மற்றும் ‘கல்லுக்குக் கீழும் பூக்கள்’ தொகுப்பில் வாசித்துள்ளேன். கிழக்கு பதிப்பகம் அழகான லேவுட்டுடன் புதிய பதிப்பினை வெளியிட்டதும் வாங்கி விட்டேன். சில புத்தகங்களை மறுபடியும் வாசிக்கையில்தான் முன்பு விடுபட்டவை நம் கண்ணுக்குத் தென்படும். மீள்வாசிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பதை நன்குணர்ந்தேன். சில கதைகள் நினைவில் என்றும் நிற்கும்படியாக ஆழமாக பதிந்துவிட்டது.

தொகுப்பில் மொத்தம் 53 கதைகள். கிட்டத்தட்ட எல்லாக் கதைகள் நேரடியானவை. எவ்வித பாசாங்குகளின்றி முகத்தில் அறைபவை. மொழி ஆசிரியருக்கு வெகு அழகாக வசப்பட்டாலும் எளிமையான மொழிநடையையே கையாளுகிறார். Pleasure of reading (வாசிப்பின் ருசி) என்பதையெல்லாம் மீறி அவர் வார்த்தையிலே சொல்வதானால் ‘யோசிக்க யோசிக்க எனக்குக் கேள்விகளே மிஞ்சுகின்றன, பதில்கள் அல்ல’ கதைகள் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டியும் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை, சமூகத்திலும் அரசியலிலும் பெரிதாக எவ்வித அதிசயத்தக்க மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லைதானே?  ‘இதெல்லாம் யாருடைய தப்பு? உயிரே..உயிரே, முகங்கள், ஈரம், வித்வான், ஆயுதம், இறகுகளும் பாறைகளும், கரப்பான் பூச்சிகள், பெண்மை வாழ்கவென்று, மாறுதல் வரும், கல்யாணம் என்றொரு ரசாயனம், அக்னி நட்சத்திரம், வழியில் சில போதை மரங்கள், பெண், காதலினால் அல்ல, கடவுள், கற்றதனால் ஆன பயன், எங்கள் வாழ்வும், யோசனை உள்ளிட்ட கதைகள் மிக முக்கியமாக  குறிப்பிடத்தக்கவை.

சில கதைகள் lecture மாதிரி எதோ ஒரு க்ளாஸ் ரூமிற்குள் அமர்ந்திருக்குபடியான பிரம்மையைக் கொடுத்த போதிலும் சொல்லிய விதம் தெளிவாகவும், diplomatic காக இருப்பதாலும் பதட்டப்படாமல் வாசிக்க முடிகிறது. இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பத்திரிகை சுதந்திரம், சுயம் சார்ந்த சிந்தனைகள், பெண்ணியம் என் எண்பதுகளில் இருந்த பிரச்னைகளை, அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை நிலையை அழுத்தமான பதிவு செய்திருப்பது இதன் சிறப்பு. கனவில் மிதந்து கொண்டிருக்காமல் கன்னத்தில் அறைந்து நிதர்சனத்தில் நிற்க வைக்கும் இக்கதைகள் யாவும் வாழ்வியல் பொக்கிஷம்.  

மாலனின் கதைகளின் தனிச்சிறப்பு அதன் நம்பகத்தன்மை மற்றும் மிகவும் வெளிப்படையான மொழி. எவ்வித க்ராமருக்கும் சிக்காமல் சிறுகதை வடிவம் பற்றியெல்லாம் மெனக்கிடாமல் கதைகள் தன்போக்கில் வழுக்கிக் கொண்டு போகிறது. அதன் பயணத்தையும் அளவையும் அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது. அவரின் சொற்சிக்கனம் வியக்க வைக்கும்படியான ஒன்று. மொழித்திறன் இருந்தும் அதை தேவையில்லாமல் எங்குமே திணிக்கவில்லை அவர். மொத்த புத்தகமே அடிக்கோடிடப்பட வேண்டியதான கட்டாயத்தில் இருந்தபோதும் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.

‘பிம்பங்களை உடைத்துப் போட்டுவிடாத பாவனைகள். தனக்கு ஏற்றாற்போல் கவர்ச்சியாக, வசீகரமாக நிறுத்தும் முகங்கள். பார்த்துப் பார்த்து சுயக்கிறக்கம் கொள்ளச் செய்யும் முகங்கள்’

‘வேண்டியிருக்கிறது எல்லாருக்கும் ஏதோ போதை.’

‘வசந்தம் தப்பிப் பூத்த வாசல்மரம் போல காலன் தாழ்ந்து வாழ்க்கை இனித்தது.’

‘நிலவு மட்டும் விழித்திருந்த நிசிப் பொழுதில் ஆசை கிளர்தெழ அவளை அணைத்து திமிறிய அவளைத் தழுவி இறுக்கி முத்தமிட்டான்’

‘ஏன் தன்னால் இன்னும், தன் arroganceஐ உதற முடியவில்லை? ஈகோவை வழித்தெறிந்துவிட்டு ஒரு முறுவலுடன் எதனுடனும் கை குலுக்க முடிவதில்லை’?

‘பிரச்சனை மரணமல்ல, வலிகள்’

‘எந்தச் சுருதியிலும் சேராது காற்றில் நனைந்து வரும் வண்டியோட்டியின் பழைய சினிமாச்சங்கீதம். இவையேதுமில்லாவிட்டால் ஈரக் காற்றில் காய்ந்து கொண்டு தேடுகிற தனக்குப் பிரியமான நட்சத்திரங்கள்’

‘உனக்கு காதல் வேண்டாம் ஜெகன், உனக்கு மட்டுமில்லை நம்ப தேசத்து ஏழை இளைஞர்களுக்குக் காதல், அரசியல், இலக்கியம், ரசிகர் மன்றம் எல்லாம் அதிகம்’

‘கல்யாணம் – தீரமான ஆண்பிள்ளைகளைக் கோழையாக்குகிறது. மென்மையான பெண்களைக் கல்லாக இறுக்கிறது’

‘நான் கவிதை எழுதற பொம்பளை. அலையிலே அப்படியே மிதந்துகிட்டு இருக்கிற கப்பல். அடி மணல்லே ஊணி நிற்கிற நங்கூரம், பலசாலியா பிராக்டிகலா வாழ்க்கையைச் சந்திக்கிறவனா இருந்தாத்தானே நல்லது?’

‘ஓர் இளம் பெண்ணின் சிரிப்புக்குள் எத்தனையோ எழுதப்படாத கவிதைகள் இருப்பதாகத் தோன்றிற்று.’

‘பாரதியாரை தகப்பன் போல் நேசிக்கிற சந்தோஷம்’

‘அரசுக்கு எதிராக ராணுவம் கிளர்ச்சி செய்ய வேண்டும். நாடு உருப்பட வேண்டும் என்றால் அரசியல் கலாசார, ஆன்மீக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறீர்கள், எப்போதேனும் சாதாரண மனிதனை நினைத்துப் பார்த்ததுண்டா’

‘எல்லோருடைய சுதந்திரத்திற்கும் ஒரு விலை உண்டு. சோறு, துணி, பணம், பதவி, பத்திரிகை விளம்ப்ரம் இப்படி ஏதோ ஒரு விலை. இந்த விலை கொடுக்க முடிந்த அவரவர் சக்திக்கேற்ப அவரவர் சுதந்திரம். அவரவர்க்களுடைய அடி வயிற்றைத் தாக்காதவரை, அடுத்தவர்களுடைய சுதந்திரம் பற்றி இவர்கள் மேடையில் பேசவும், எழுதவும் கூடும்’

‘நான் தோற்றுக் கூட போகலாம். ஆனாலும் அப்போதும் நான் முயற்சித்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்’.

‘வெகுஜனப் பத்திரிகைகள் மாதிரியே ஒரே ரொமாண்டிக் குப்பையா இருக்கு’

‘பத்திரிகை விக்கணும்னா சினிமாக்காரனைப் பத்தி எழுதித்தான் ஆகணும். காதலைப் பற்றி எழுதணும். செக்ஸ் பற்றி எழுதணும்’


‘சமூகத்தின் அடிப்படைகளைத் தருவதற்காக உழைப்பவன் இந்த அமைப்பில் மிகக் குறைவாகவே அவற்றைப் பெறுகிறான்’

‘மிடில் க்ளாஸின் ஓட்டுக்கள் ஒரு அரசாங்கத்தை உருவாக்காது. ஆனால் வெகுஜனங்களின் விரோதம் சாம்ராஜ்யங்களைச் சாய்த்துவிடும்’

‘உங்களோடு ஓடுவதில் நாங்கள் பலவீனர்களாக இருக்கலாம். அது உடம்பின் அமைப்பு: ஆனால் படிப்பதில் அல்ல. எந்த ஆணையும் எங்களால் அறிவில் ஜெயிக்க முடியும். பத்தாம் வகுப்பு ரிசல்ட்களைப் பார். முதல் இடம் எல்லாம் பெண்கள்!’

நாமெல்லாம் இப்போது ஓரளவிற்கு sophisticated life வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சக மனிதர்களின் நலன் பற்றியோ, சமூக அறவுணர்வுகள் இன்றியும் வாழ பழகிக் கொண்டோம். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் தங்களின் அடுத்த தலைமுறையைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். எழுதியிருகிறார்கள். போராடியிருக்கிறார்கள். இங்கிருந்த முற்களை கூடியவரை எடுத்து தெளிவான பாதையொன்றை அமைத்து தந்திருக்கிறார்கள், நன்றி மறந்த தலைமுறையாய் நாம் ஆகிப்போய்விடக்கூடாது என்று அச்சமாக இருக்கிறது.

எழுதுவது வாசிப்பது என்பதில் எதை தேர்ந்தெடுப்பது என குழம்பும் போதெல்லாம் வாசிப்பதையே பெரிதும் விரும்புவேன். தேவதச்சன் சொல்வது போல ‘புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில் வலப்பக்கமும் இடப்பக்கமும் எல்லாமும் பார்த்துக் கொண்டு எதிலும் கலக்காமல் நிற்கும் ஒல்லிப் பனைகள் வரிசையில்’ நின்று கொண்டிருக்கப் பிடிக்கும். ஒருவருடைய படைப்பாற்றலினால் வாழ்வின் உன்னதங்களை அவரால் கண்டடையமுடியும்.

நல்ல எழுத்தாளனால் வாசிப்பரையும் மேல்நிலைக்கு அழைத்து செல்லமுடியும். மாலன் கதைகள் அதைச் செய்கிறது.

மாலன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
கிழக்குப் பதிப்பகம்
33/15, Eldams Road
Alwarpet, Chennai – 600 018
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com