எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' ஹேமா இல்லா விட்டால் கெளசலை இருந்திருப்பாள்!

கடன் சுமைகளை, நட்பின் வஞ்சனையை அவளால் தாங்கிக் கொள்ள முடிகிறது, தகப்பனின் இறப்பைத் தாண்டிச் செல்ல முடிகிறது, ஆனால் அவளால் கணவனைப் பங்கு போட்டுக் கொள்ள மட்டும் முடியவில்லை.
எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' ஹேமா இல்லா விட்டால் கெளசலை இருந்திருப்பாள்!

கௌசலையின் மீது இனம் காண முடியாததோர் பரிவு தோன்றும் அதே வேளையில் அடப் பைத்தியமே! என்ற பரிதாபமும் தோன்றி நீடிக்கிறது. இவள் தற்கொலை செய்து கொள்வதிருக்கட்டும் அந்தக்குழந்தை என்ன செய்தது? உலக சந்தோசங்களை எல்லாம் தன் மழலையில் முடிந்து வைத்துக் கொள்ளத் தகுதி அற்ற குழந்தையா ராஜி?!

ஹேமாவைப்பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை, அவளைப் பற்றிச் சொல்வதானால் இப்படியும் ஒரு பெண்ணா? இவளை ஏன் கண்ணன் புறக்கணித்திருக்கக் கூடாது என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. வயிற்றுப் பிள்ளைக்காரி கைக்குழந்தையோடு தன்னை மாய்த்துக் கொண்ட பின்னும் கூட இவளுக்கு கௌசலையின் கணவனோடு என்ன உறவு வேண்டிக்கிடக்கிறது?! ஆக மொத்தம் சுயநலமிக்கவளாகவே கருத முடிகிறது.

கௌசலையுடனான அவளது நட்பில் உண்மையில்லை. கண்ணனுக்காக அவள் கௌசலையிடம் நட்பாவது மூன்றாம் இடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கைப் பேச்சுக்கும் இழிந்த கற்பனைகளுக்கும் இடம் தந்து சில மணி நேரப் பொழுது போக்குக்கு உதவலாம். ஆனால் கௌசலையின் இடத்தில் இருந்து கண்டால் அவளது கண் மூடித் தனமான ஆத்திரத்தின் நியாயங்கள் புரியும்.

எது எப்படியோ கண்ணன், கௌசலைக்கு இழைத்த துரோகத்தை வேறு பெயரிட்டு அழைக்க இயலாது. 

கௌசலை இவனை அதிகமும் நம்பி விட்டாள், சொந்த வீடென ஆசுவாசப் பட்டது மழையில் இடிந்து விழுந்த பின், நம்பியிருந்த சொந்தத் தொழிலில் கடன் சுமை குரல்வளையை நெரித்துக் கொண்டு திணறச் செய்து ஏற ஏற... ஆதரவாய் இருந்த தந்தை திடீரென காலமான நிகழ்வு அவளுக்கான அடுத்தடுத்த அதிர்சிகளின் உச்சகட்டம்! அப்போதும் அவள் சகித்துக் கொண்டு மேலெழவே முயல்கிறாள் தன் கணவன் எனும் நம்பிக்கை விளக்கின் கதகதப்பான உரிமை உணர்வின் நிழலில் அவள் பாதுகாப்பாகவே உணர்கிறாள். 

தன் வாழ்வின் ஒளியென அவள் கண்ணனை நினையாதிருந்திருக்க வாய்ப்பில்லை. தன் கணவன் சாகசக்காரன், எத்தகைய தடங்கல்களையும் அவனோடு சேர்ந்து தன்னால் கடக்க முடியும் எனும் அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கு கண்ணனும் உறுதி சேர்ப்பவனாகவே இருந்தான் ஹேமா வரும் வரை! அவள் வந்தாளோ... வந்ததை கௌசலையும் கண்டாளோ! அந்த நொடியில் ஆரம்பித்தது இவன் வாழ்வின் அனர்த்தம். கடன் சுமைகளை, நட்பின் வஞ்சனையை அவளால் தாங்கிக் கொள்ள முடிகிறது, தகப்பனின் இறப்பைத் தாண்டிச் செல்ல முடிகிறது, ஆனால் அவளால் கணவனைப் பங்கு போட்டுக் கொள்ள மட்டும் முடியவில்லை .

கண்ணன், கௌசலை, ஹேமா மூன்று கதாபாத்திரங்களில் இவளது தற்கொலைக்கு கண்ணனையும், ஹேமாவையும் காரணமாக்குகின்றன கதை நிகழ்வுகள். ஆனால் கௌசலையின் குண விசேஷத்தின் படி அவள் வாழ்க்கை ஹேமாவால் இடையூறு செய்யப்படாமல் இருந்திருக்க வாய்த்திருப்பின் கண்ணன் மிகச் சிறந்த உழைப்பாளியாக நீடித்திருப்பான், அவர்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறந்திருக்கும், இடிந்த வீட்டைக் கட்டிக் கொண்டோ, புது வீடு வாங்கிக் கொண்டோ எப்படியேனும் அவர்கள் தங்கள் சுமைகளில் இருந்து தாங்களே மேடேறி இருப்பார்கள்.

ஹேமா இல்லா விட்டால் கௌசலை இருந்திருப்பாள். கண்ணன் வாழ்ந்திருப்பான். ஹேமாவுடன் தொடருமென கதை முடிவில் விரியும் கண்ணனின் அடுத்த கட்ட வாழ்க்கையை கௌசலையுடனான அவனது பூரணமான வாழ்வோடு ஒப்பிட முடியாது. 

எல்லோரையும் விட ஏற்றுக் கொள்ள முடியாத உறுத்தல் குழந்தை ராஜியின் மரணம்.

அவளை எதை நம்பி கண்ணனிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருக்க முடியும் கௌசலையால்?!

ஆகவே கௌசலையோடு குழந்தையின் தற்கொலைக்கும் நியாயம் கற்பிக்கப் பட்டதாகவே கருதிக் கொள்ளலாம். 

வாசித்த வரையில் ஹேமாவின் மீது வெறுப்பும் அசூயையும் வரத் தவறவில்லை. 

கௌசலை சாவதற்கு முன்பு வரை அவள் பேரிலிருந்து வந்த ஒரு பெருமித உணர்வு அவள் இறந்த பின் பரிதாப உணர்வாக மாறி அடி பெண்ணே! உனக்கேன் இந்த நிலை?! என்பதாக மாறிப் போகிறது. 

கண்ணனைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

கதையில் கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் மிகப் பிடித்துப் போன மற்றொரு பாத்திரம் கௌசலையின் தகப்பனார் 'பத்மநாப ஐயர்'

பாவம் அந்த மனிதர் சாகும் போது நினைத்திருக்க மாட்டார்... தான் மிக நம்பிக்கையோடும் ஆசையோடும் வேண்டி விரும்பித் தன் மகளை திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளை அவளை இப்படி தற்கொலை செய்து கொள்ளும்படி விட்டு விட்டு நிர்தாட்சண்யமாய் பிறிதொரு பெண்ணை நாடிப் போவான் என்று. 

தொழிலாளர் பிரச்சினைகள், அரசு எந்திரத்தின் மந்த நிலை, முதலாளி தொழிலாளி தந்திர மயக்கப் பேச்சின் மாய மந்திரங்கள் எல்லாமும் கடந்து கதையில் எஞ்சி நிற்பது கண்ணன் கௌசலைக்கு இழைத்து விட்ட துரோகம் தான். இது துரோகமா? இல்லையா? என்பது அவரவர் புரிதலைப் பொறுத்தது. 

கௌசலையின் குழந்தை ராஜியின் மரணத்தைப் பொறுத்த வரை கண்ணன் மன்னிக்கப்படக் கூடியவன் அல்ல. ஹேமாவும் தான். ஏற்றுக் கொள்ள கடினமான மற்றொரு விஷயம். இந்த மரணங்களுக்காக கண்ணன் 'இப்படி குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாளே!?' என்று கௌசலை மீது தான் வருத்தம் கொள்கிறானே தவிர, தான் செய்தது தவறு என்று கடைசி வரை அவன் எண்ணக் காணோம்.

வாசிக்கும் எவருக்கும் அவரவர் புரிதலுக்கேற்ப சரி, தவறுகள் மாறுபடலாம் .

குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழும் சமூகம், தொழில் சார்ந்த புறச்சிக்கல்களோடு அவனது மனைவி மற்றும் அவளது சிநேகிதியான ஒரு பெண்ணால் அவனுக்கும் அவர்களுக்கும் நேரும் அகச் சிக்கல்களையும் ஓரளவுக்கு தெளிவாக உணர்த்திய நல்லதொரு பாடம் இந்த நாவல்.

புத்தகம்- வேள்வித் தீ 
ஆசிரியர்-எம்.வி.வெங்கட் ராம் 
வெளியீடு -காலச்சுவடு 
விலை - ரூ 125 /-

Image Courtesy: nadappu.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com