ச.தமிழ்ச்செல்வனின் 'நான் பேச விரும்புகிறேன்' புத்தக விமரிசனம்!

நாம் நேசித்த மனிதர்கள் தொலைந்து போனால் வாழ்வில் சில காலமேனும் அவரின்மையால்
ச.தமிழ்ச்செல்வனின் 'நான் பேச விரும்புகிறேன்' புத்தக விமரிசனம்!

புத்தக அறிமுகம் :

'லிவ் உல்மன், இகான் செலீ, ஃபிரைடோ காலோ, காகின், இங்ரிட் பெர்க்மன் ஆகிய மேற்குலக கலை ஆளுமைகள் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியுமான அறிமுகங்களைத் தரும் நூல். ஆண் - பெண் உறவின் மேன்மைகளையும் கீழ்மைகளையும் சமூகப் பின்புலத்தோடு புரிந்துகொள்ளவும் நம் இறுகிய குடும்பங்களின் சாரத்தை இக் கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்துப் பேசி விவாதித்துக் கொள்ளவும், நம்மை நாமே மாற்றிக் கொள்ளவும் இக்கட்டுரைகள் உதவக்கூடும். கலையின் சாரம், லட்சியம் குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்துமான விவாதங்களைத் தூண்ட இவை உதவும்.'

***

நாம் நேசித்த மனிதர்கள் தொலைந்து போனால் வாழ்வில் சில காலமேனும் அவரின்மையால் வெறுமையாகவே இருக்கும். மனதின் அடி ஆழத்தில் நீர் பூத்த நெருப்பாய் அவர்களைப் பற்றிய நினைவுகள் தேங்கியிருக்கும். நேற்றிரவு வாசித்து முடித்த ‘நான் பேச விரும்புகிறேன்' பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த சில கலை ஆளுமைகளை கண் முன் நிறுத்தி என் மனதிற்கு நெருக்கமானவர்களாக்கி அதன்பின் அவர்களை பிரிய வைத்துவிட்டார் எழுத்தாளர். ஆனால் சொற்களால்தான் நெருங்கினார்கள் பிரிந்தார்கள். அவர்கள் எல்லோரும் நினைவுக்குள் பதுங்கு என்னுடன் என்றென்றும் ஜீவித்திருப்பார்கள். உண்மையில் ஏதோ இனம் தெரியாத மந்திரத்தன்மையால் கட்டுண்டு கிடந்தது போல் இப்புத்தகத்தை வாசித்து முடித்தபின் நீண்ட நேரம் யோசித்தபடி செயலற்று இருந்தேன்.

எந்த தேசத்தில் வாழ்ந்தாலென்ன, கருணையும், கடும் கோபமும், காதலும், காமமும் துரோகமும் எல்லா பேராசைகளும் மனித இனம் முழுவதற்கும் உண்டான குணமல்லவா? இதில் கலைஞன் என்பவன் தனித்தவன். தன் சுயத்தின் தேடலின் மூலம் தன்னையே கண்டுணர்ந்தவன். ஐந்து கலைஞர்களின் வாழ்வை 'நான் பேச விரும்புகிறேன்' எனும் புத்தகம் வாயிலாக எழுத்துக்களாக வரைந்துள்ளார் தமிழ்ச்செல்வன். இதில் மூவர் பெண்கள்.

நான் பேச விரும்புகிறேன்

'நான் பேச விரும்புகிறேன்' எனும் தலைப்புக் கட்டுரையின் நாயகி லிவ் உல்மன் என் மனதை கவர்ந்த ஆளுமைகளில் ஒருவர். உல்மன் நார்வே தேசத்தின் நாடகம், திரைப்படங்களில் நடிப்பதுடன் இயக்குனராகவும் பங்காற்றியவர். கலையின் ஏதோ ஒரு வடிவத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர்களின் முதல் இழப்பு தன் பிரியத்திற்குரிய குடும்பத்தினர்கள், இதில் அதிக பாதிப்படைபவர்கள் அவர்களின் குழந்தைகள். தங்கள் லட்சியங்களுக்கு நேரதிராக குடும்ப வாழ்க்கை இருக்கும்போது அக்கலைப் பெண்களால் இவை இரண்டையும் சமன் செய்ய இயலாத நிலையில் வெதும்பியே வாழ்கிறார்கள்.

பெண்கள் படும்பாடு உலகின் எந்த மூலையிலும் ஒன்றேதான். தாய்மை அது எம்மை எதைவிட்டு வேண்டுமானாலும் விலகச் சொல்லும். ஆனால் அதைக் கூட அளந்து கொடுக்க வேண்டிய நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக அப்பெண்கள் தவிக்கும் தவிப்பைச் சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. கலை வாழ்க்கையில் பயணப்படும்போது சிதறிப் போயிருக்கும் குடும்ப வாழ்க்கையை சீர் செய்ய இயலாத நிலையிலே மனமுடைந்து பல கலைஞர்கள் தன் இன்னுயிரை விட்டிருக்கிறார்கள். நாம் மிகவும் விரும்பிய நடிகர்களின் சிலர் வாழ்க்கை இன்னும் கூட அப்படித்தானே தொடர்கிறது?

லிவ் உல்மனின் வாழ்க்கையின் சிலச் சம்பவங்களை கடந்த காலம், நிகழ், மற்றும் அவரின் நினைவுக் குறிப்புகளாக நமக்குப் விவரிக்கப்படுகிறது. புகழின் உச்சியில் நிற்கும் லிவ் சிறுமியாக இருந்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் துறந்து மனம் விரும்பும் நடிப்புத் துறைக்குச் சென்றது, ஐந்து வருடமே நிலைத்திருந்த டாக்டர் ஜாப்பேவிடனுடான மணமுறிவு. மற்றொரு திருமணம், மனக் கசப்பு, அதுவும் முறிந்த நிலை. அதன்பின் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இங்மர்பெர்க்மனை மணந்தது - மகள் லின் பிறந்து வரை கட்டுரை நெடுகிலும் லிவ் உல்மனின் மனச் சித்தரிப்புகள், உளைச்சல்கள், எழுத்தாக்கம் பெற்றிருக்கின்றன.

'எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ – சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்’

-லிவ் உல்மன்

தன்னையும் பெர்க்மனையும் இவ்வாறு குறிப்பிடுகிறார் லிவ் உல்மன் ‘ஒரே கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணே அவருடைய கனவில் இருந்தாள். ஆனால் நானோ அவர் கவனமற்று இருந்தால் சிறு தூசியிலும் துகளிலும் கூட மோதி உடைந்து நொறுங்கிப் போகிறவளாயிருக்கிறேன்'.

பெர்க்மனுடைய பொறாமையுணர்வு அவளது சுதந்திரத்தின் எல்லைகளை நிர்ணயித்தபோது பெர்க்மெனையும் பிரிகிறார் லிவ்.

லிவ் உல்மன் கேட்கும் கேள்விகள் காலகாலமாக பெண்கள் கேட்கும் கேள்விகள்:

‘ஒரு பெண் தன் தேவைகளுக்கே வேலைக்கு போனால் குழந்தையை அடுத்தவர்களிடம் விட்டுச் செல்கிற குற்றத்துக்கு – குற்றவுணர்விற்கு ஆளாக நேர்கிறது. ஆனால் ஒரு ஆணுக்கு – அவர் ஆணாய் பிறந்துவிட்டதாலேயே வேலைக்குப் போவதற்கு உரிமை பெற்றவராகி விடுகிறார். சகஜமாக எவ்வித குற்றவுணர்விற்கும் உள்ளாகாமல்.’

‘பெண்ணை ஒரு ஆணின் பிற்சேர்க்கையாக – பின் இணைப்பாக மட்டுமே பார்க்க முடிகிற எந்த விழாவுக்கும் நிகழ்ச்சிக்கும் போவதை நான் நிறுத்திவிட்டேன்’

‘பெண்கள் நேசத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். எத்தனையோ பெண்கள் வீடுகளைவிட்டு வெளியேறினால் நிச்சயமாக இப்போது இருப்பதைப்பார்க்கிலும் சந்தோஷமாக வாழமுடியும். என்றாலும் அவர்கள் வெளியேறுவதில்லை. தங்கள் இருப்பைவிடவும் மற்றவர்களுக்கான தங்களீன் அன்பும் காதலும் முக்கியமென்று கருதுகிறார்கள்’

இந்தக் கவிதையில் தன் விருப்பத்தை இவ்வாறு பட்டியலிடுகிறார் லிவ்.

‘நான் பேசவிரும்புகிறேன்
தனிமையைப் பற்றி
இந்த வாழ்வைப் பற்றி
ஒரு பெண்ணாக வாழ்வது
என்றால் என்ன
என்பது பற்றி....‘

என் மனதிற்குள் புகுந்துவிட்ட லிவ் உல்மன் வெளியேற மறுக்கிறார். ‘லிவ் நீ என் மனதுள் வாழ்கிறாய்’ என்றேன். புன்னகைக்கிறாள்.

2. அவன் தன்னை வரையவில்லை

இகான் செலீ –ஆஸ்திரிய நாட்டு ஓவியர்.

இளம் வயதிலேயே மரபு சார்ந்த ஓவியத்திலிருந்து விடுபட்டு சுயரூப ஓவியங்கள் செலீயின் விருப்பமாக இருந்தது. தேடலுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அக்கலைஞனின் பயணம் பரந்துபட்டது. எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது. ‘என் ஓவியங்கள் கிழிந்த சுயத்தின் நவீன உணர்தலாகும்’ என்று கூறும் செலீயின் படைப்பாற்றல் அபரிதமானது. அசந்தர்ப்பமான ஒரு சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறைக்குள் இருந்தபடியே தனது நிர்வாண ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். ‘நான் தண்டிக்கப்படவில்லை, புனிதமாகிக் கொண்டிருக்கிறேன்’ என்றே சொன்னார்.

அலைகழிக்கப்பட்ட கலைஞனான செலீயின் மரணம் போரினால் ஏற்பட்ட விஷக்காய்ச்சலில் மனைவி எடித் மடிந்த மூன்றாவது நாளில் நிகழ்ந்தது.  இகான் செலீ எழுதிய கவிதையொன்று:

எல்லாவற்றுக்கும் மேலாக
அவன் ஒரு கலைஞன்
மகத்தான ஆன்ம பலம் உடையவன்
வெளிப்படுத்துகிறவன்
உடன் உணர்கிறவன்
நடுக்கும் ஒளி. கதகதப்பு.
மனிதரில் எல்லாம் கூடுதலான
கருணை மிக்கவன்.
தேடிக் கொண்டே இருப்பவன்
அவனது எதிர்துருவத்தில் இருப்பவன்
பழகிய தடத்திலேயே நடந்து தேயும்
இந்தத் தினசரி மனிதன்.

3. கலைந்த கனவும் கலையாத காதலும்

ஃபிரிடா காலோ – மெக்ஸிகோவின் செல்ல மகள். மிகவும் புகழ் வாய்ந்த ஓவியர். இவரின் துயர் மிகுந்த ஓவியங்களா; கலை உலகம் முழுவதுமையும் ஆழ்ந்த அதிர்வுகளுக்குள்ளாக்கியவர். இவரின் வாழ்வை முன்வைத்து ஃபிரிடா’ என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.

டியுகோ ரிவேரா எனும் உலகப் புகழ்பெற்ற ஓவியரின் காதல் மனைவியாக வாழ்ந்தவள் ப்ரைடோ. பல இன்னல்களையும் நோய்மைகளையும் கடந்து அவள் வாழ்க்கை ஓவியத்தால் உயிர்ப்பாயிருந்தது. ஃபிரிடா காலோவின் ஓவியங்களின் பெரும்பாலனவை தன்னைத்தானே வரைந்து கொண்ட சுயரூப ஓவியங்களாகும். காதல் கணவனுடன் ஏற்பட்ட பிரிவால் கலங்கிப் போன ஃபிரிடா வெகுவாக மனம் பாதிக்கப்பட்டாள், இருவரும் பிரிந்து வெவ்வேறு மணம் செய்து கொண்டாலும் மீண்டும் இணைந்தார்கள். சில வருடங்கள் கழித்து உடல் நலம் குன்றி ஏழு முறை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தபட்டு மனரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளானாள்.

ஒரு நள்ளிரவில் தூக்கத்திலேயே அவள் உயிர் பிரிந்தது. ரிவேரா பெரிதும் பாதிக்கப்பட்டார். அடுத்த இரண்டாவது ஆண்டு தம் சொத்துக்களை தேசத்துக்கு அர்ப்பணம் செய்துவிட்டு ரிவேராவும் மறைந்தார்.

‘தூரத்தில் கடல் என்னை அழைக்கிறது
விடை பெறுகிறேன் என் அன்பே
என்றென்றுமாக விடை பெறுகிறேன்
இனி எப்போதும்
நீ என்னைப் பார்க்க முடியாது
என் பாடல்களைக் கேட்க முடியாது
ஆனால்
கடல்கள் என் கண்ணீரால்
நிரம்பி நுரை பொங்கித் ததும்பி
உனைத்தேடி
கரை நோக்கி ஓடி வரும்.
அன்பே விடை கொடு’

- ஃபிரிடா காலோ.

4. வானவில் ஏறித் தப்பிச் சென்றவன் 

காகின் – அவருடைய பால்ய காலம் தொட்டே நிழல் போலக் கூட வந்த ஓர் உள்ளுணர்வு ‘தப்பி ஓடி விடு’ என்கிற உந்துதலை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.

இயற்கையை
அதிகம் நகல் செய்யாதே
கலை ஒரு கற்பனை.
இயற்கையின் முன்நின்று கனவுநிலையாகி
அதைக் கொண்டு வரவேண்டும்
கடைசியில் கையில் கிடைக்கப்போகும்
படைப்பு முக்கியமல்ல
படைப்பதே முக்கியம்
கடவுளை அடைய
ஒரே ஒரு வழிதான் உண்டு
அது – அவர் செய்வதையே
நாமும் செய்வது – படைப்பது.

பெரும் அலைக்கழிப்பிற்குள்ளான காகினின் வாழ்வு முடிவற்ற தேடலாக அவருக்கு அமைந்திருந்தது. ஐரோப்பிய நாகரிக வாழ்வை அறவே வெறுத்த அவர், தனது மனத்துக்குள்ளிருந்த ஆதி மனிதனின் அழைப்பை ஏற்று நடந்தார். முடிவற்ற தேடலை முடிக்கும்விதமாக கடல் கடந்து பாபீட் எனும் தன் கற்பனை பழங்குடிக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் அவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. நாகரிக வாழ்வின் சாயல் அங்கும் அரும்பியிருந்தது. பின் அங்கிருந்து தப்பி அவர் சென்றடைந்த இடமான தகித் அவருக்கு பிடித்த இடமாகிவிட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் அந்த தொல் குடியினர், ‘கடை’கள் விரிக்காமல் இயற்கையை மட்டுமே நம்பி வாழ்ந்த ஆதிவாசிகளான அம்மக்களைக் கண்டதும் அவர் மனம் துள்ளிக் குதித்தது. அங்கேயே தங்கி சில நாளில் அவ்வினப் பெண்களுள் ஒருத்தியான டெகுராவை மணந்து அவர்களின் கூட்டத்தில் ஐக்கியமானர் காகின்; அக்காலகட்டத்தில் பலவிதமான ஓவியங்களை வரைந்து தீர்த்தார். இதற்கிடையில் காகின் தம்பதியருக்கு குழந்தைகள் பிறந்தன.

காகின் மனைவியின் மீது சந்தேகித்து மன உளைச்சல் தாங்கவியலாமல் வேறு வழியின்றி தமது ஊருக்குத் திரும்பினார். கிட்டத்தட்ட காட்டுவாசியாகிவிட்ட அவரால் நகரில் ஒட்டமுடியவில்லை. வெறுப்புகளாலும், பல சோதனைகள் மற்றும் அலைக்கழிப்புகளின் பின்னர் மீண்டும் தகித்திற்கே திரும்பினார். ஓவியத்தை மட்டும் நிறுத்தாமல் வரைந்து கொண்டேயிருந்தார் இறுதி மூச்சுவரையிலும்.

தனது கடைசி உயில் போல ‘நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் என்னவாக இருக்கிறோம் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் மிகப் பெரிய கித்தான் ஒன்றில் ஓவியம் வரைந்து அந்த ஓவியத்தின் மை உலரும் முன்பே விஷம் குடித்து மலைப்பாதைகளின் நடுவே செத்து மடிந்தார்....எல்லாவற்றையும்விட அதிகமாக நேசித்த மரணத்துடன் இரண்டறக் கலந்தார் காகின் எனும் கலைஞன். 

5. ஒப்பனையற்று ஒளிர்ந்தவள்

இங்ரிட் பெர்க்மென் இரண்டு வயதிலேயே தாயை இழந்தவர். தந்தையால் கண்ணின் இமையாக போற்றி வளர்க்கப்பட்டு அத்தந்தையும் அவரின் பதின்ம வயதில் இறந்துவிடுகிறார். அதன்பின் மாமாவின் கட்டுப்பாட்டில் வளர்கிறாள். வாழ்வின் பெருந்துயரை மிகச் சிறிய வயதில் தாங்கி, அதைக் கடந்து வந்தவர் இங்ரிட். தன் மனதிற்கு பிடித்தவற்றை எவ்வித ஆர்ப்பாட்டங்களின்றி செயல்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தவர். தன் உயிருக்கு நிகரான ஒரே விஷயம் நடிப்பு என்பதை சிறு வயதிலேயே உணர்ந்து அதன் நூல் பிடித்து அயராது போராடி வென்றவர். அந்தக் காலகட்டத்து ரசிகர்களை பித்தேற வைத்த அற்புதமான நடிகை. வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது அகவுணர்வுகளாலும் இங்ரிட் இனிமையானவர். மிகவும் இயல்பானவர், தன்மானத்தை எந்த நிலையிலும் அடகு வைக்காதவர்.

என்னைக் கவர்ந்த அவரின் வரிகள், எல்லாப் பெண்களுக்குமானது.

'ஆண்கள், அப்பாக்கள், கணவன்மார்கள், பெண்களுக்காக தாங்களே எல்லா வேலைகளையும் செய்து, எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்து என பெண்களை ஒன்றுக்கும் லாயக்கற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். சார்ந்து வாழும் பிராணிகளாகப் பெண்களை வளர்த்தெடுக்கவே ஆண்கள் பெரிதும் விரும்புவார்கள். காலப்போக்கில் பெண்ணும் அவ்வண்ணமே ஆகி விடுகிறாள். அடைக்கலமாகி சரணடையத்தக்க பரந்த ஆண் மார்பைத் தேடுகிறவளாக ஆக்கப்பட்டுவிடுகிறாள்.’

ஒரு நடிகையாக மிகப் பெரிய வெற்றியையும், உலகப் புகழும், விருதுகளும் அள்ளிக் குவித்த இங்ரிட்டின் தனிப்பட்ட வாழ்வு பல மேடு பள்ளங்களை உடையதாகவே இருந்தது. முதல் கணவன் பீட்டர் மற்றும் மகள் பியா இருவரையும் பிரிய நேரிட்டது இங்கிரிட்டை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. பிரிவுக்குக் காரணம் திருமண உறவை மீறிய ஒரு காதலினால் என்பதால் பெரும் குற்றவுணர்விற்குள்ளானார் இங்ரிட். பீட்டர் இங்ரிட்டை பொம்மை மனைவியாகவே பாவித்து வந்தார். தன் கட்டுக்குள் அவரை அடக்கி வைக்க முயன்றவரின் கையை மீறி காட்டாற்று வெள்ளமாக பரவியது அந்த ஜீவநதி.

'நம் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை அவரவர் நம்பிக்கையின்படிதான் வாழ முடியும். அதை வேறு எதற்காகவும் அர்ப்பணிக்க முடியாது. அது மரணத்தைவிடக் கொடுமையானது.’ இங்ரிட் தன் முடிவில் உறுதியாக இருந்து பீட்டரைப் பிரிந்தார் இங்ரிட்.

காதல் அவளுள் நிரம்பித் ததும்பியது. தன்னுடன் நடிக்கும் சக படைப்பாளிகளை அவர் அப்படப்பிடிப்பு முடியும் வரையிலும் மனதாரவே நேசித்தார். அவர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஆண்களாக பீட்டர், காபா, ரொபார்டோ ரொஸாலினி இவர்கள்தான். இதில் காபாவை அவர் மணக்கவில்லை. ஆனால் மிகவும் நேசித்தார். முதல் கணவர் பீட்டரைப் பிரிந்து தான் நேசித்த ரோபர்கோவை மணந்தார் இங்ரிட். மூன்று குழந்தைகள் பிறந்தபின் அவரையும் கூடப் பிரியும் சூழல் அவர் வாழ்வில் ஏற்பட்டது. கலங்கிப் போனாலும் ஓய்ந்து விடவில்லை இங்ரிட். நான்கு குழந்தைகள் பெற்றும் ஒரு குழந்தையுடனும் சேர்ந்து வாழ வாய்க்காத தன் வாழ்க்கை குறித்து இங்ரிட் வேதனை அடைந்தாள். பெரும் அலைக்கழிப்புக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகினாலும் ஃபீனிக்ஸ் பறவையாக எல்லாவற்றிலிருந்தும் மீண்டெழுந்தாள்.

அவள் கனவுப் பாத்திரமான ஃபிரான்சின் பிரிய மகள் 'ஜோனாக நடிக்க பெரும் விருப்பத்துடன் இருந்தாள். பல மேடை நாடகங்களில் தன் பேச்சால், நடிப்பால் வசீகரத்தால் ரசிகர்களை மெய் மறக்கச் செய்த தாரகை இங்ரிட் பெர்க்மென். அவர் ஆசைப்பட்ட ஜோன் வேடத்தில் நடித்ததும் அவளின் சந்தோஷத்திற்கு அளவேயில்லாமல் போனது. 'ஜோன் ஆஃப் ஆர்க்' பெரிய வெற்றிப் படமாக அமையாவிட்டாலும், ரசிகர்களால் விரும்பப்பட்ட திரைக்காவியமாக காலத்தை வென்று நின்றது. மூன்று முறை ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்த இங்ரிட் பெர்க்மென் மார்புகப் புற்றுநோயால் எட்டு ஆண்டுகள் துன்புற்றார். ஆனால் இறுதிவரை தான் பெரிதும் நேசித்த கலையான நடிப்பை கைவிடாது காற்றில் கரைந்தார்....

அடிக்கடி டைரியில் ‘அன்புள்ள புத்தகமே’ என விளித்து தன் மனவோட்டத்தைப் பதிவு செய்யும் வழக்கத்தினவளான இங்ரிட்டின் கடைசிப் பதிவு:

'அன்புள்ள புத்தகமே..

மேடையில் நடிக்கும் காலம் ஒருநாள் முடிவுக்கு வரலாம். அப்போதும் என்னால் நடிக்காமல் இருக்க முடியாது. கிறுஸ்துமஸ் போன்ற விழாக்களில் தெருக்களில் வேடமிட்டுச் செல்லும் ஒரு சூனியக் கிழவியாகவாவது நான் நடித்துக்கொண்டுதான் இருப்பேன்’

நான் பேச விரும்புகிறேன்    
ஆசிரியர் :    ச.தமிழ்ச்செல்வன்
பதிப்பகம் :    வம்சி புக்ஸ்
தொலைபேசி : 914175238826    
விலை :    ரூ.150    
பக்கங்கள் :    152    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com