ஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’

என் தோழி ராஜி மூலமாகக் படிக்கக் கிடைத்த புத்தகம் உடல் பொருள் ஆனந்தி. 80-களில்
ஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’

என் தோழி ராஜி மூலமாகக் படிக்கக் கிடைத்த புத்தகம் உடல் பொருள் ஆனந்தி. 80-களில் குமுதம் இதழில் தொடராக வந்த நினைவு. பின் தூர்தர்ஷனில் தொடர் நாடகமாகவும் ஒளிபரப்பாகியது. இரண்டையுமே நான் தவறவிட்டுவிட்டேன். நீண்ட வருடங்களுக்குப் பின் தலைப்பின் வசீகரம் என்னைப் படி என்னைப் படி என்று அழைத்தது போல் இருந்தது.

திகில் கதைகள் எழுதுவதில் முன்னோடி என ஜாவர் சீதாராமன் அவர்களை சந்தேகமில்லாமல் கூறலாம். இந்தக் கதை 60-களின் துவக்கத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இன்றும் படிப்பவருக்கு சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் தன்னைத் தருகிறது.

கதை தொடங்கும் போதே இடி மின்னல் புயல்காற்று இருட்டுடன் தான் தொடங்குகிறது. கதை களத்தையும் சூழலையும் வர்ணிக்கும் போது நமக்கு, நாவல் படிக்கிறோம் என்ற உணர்வை விட திரைக்கதை பார்க்கிறோம் என்ற உணர்வையே தோற்றுவித்துவிடுகிறார் ஆசிரியர். நம் கற்பனையில் ஒவ்வொரு காட்சியும் தாமாகவே உருவாகி நம்மை கதையின் போக்கிலேயே இட்டுச் சென்றுவிடுகின்றன.

கதையின் ஆரம்பமே புதிர் நிறைந்த ஒரு முடிச்சில் தொடங்குகிறது. பின் அது ஏகப்பட்ட பின்னல்களுடன் பயணித்து அடுத்து இதுதான் அடுத்து இதுதான் எனும் நமது ஊகத்தை தகர்த்தெறிந்து அதன் பாணியில் விறுவிறுப்பைக் ஏற்றிச் சென்று கொண்டே இருக்கிறது. இடி மழை புயல் காற்றுடனான இரவொன்றில் ராமநாதன் ஆஸ்பத்திரியில் இருக்கும் திலீபனைக் கொல்ல துப்பாக்கியுடன் கிளம்புகிறான். அடுத்த அறையில் திலீபனை உயிராக நேசிக்கும் காதலியும், சிறு வயது முதலே தன்னோடு வளர்ந்து பாசப் பிணைப்பில் கட்டுண்டவளுமான சீதாவையும், கீழே தியாகத்தின் உருவான திலீபனின் தாய் மீனாக்‌ஷி அம்மாளையும் கடந்து செல்லும் போது அவனுக்கு குற்ற உணர்வு மேலோங்குகிறது.

அதே சமயம் அவனால் கொல்லப்பட இருக்கும் திலீபன் அங்கே ஆஸ்பத்திரியில் டாக்டருடன் தன்னை விடுவிக்கும் படி கெஞ்சிப் போராடிக் கொண்டிருக்கிறான். திலீபன் என்பவன் சாக வேண்டியவன் தானா? ராமநாதனின் பாத்திரத்தை விவரித்திருக்கும் பாங்கைப் பார்த்தால் இத்தனை மென்மையானவன் மேன்மை குணம் பொருந்தியவன் திலீபனைக் கொல்வானா? ஏன் அவன் திலீபனை கொன்றே ஆகவேண்டும் என்ற முடிவில் அத்தனை தீவிரமாக இருக்கிறான். அவன் செல்வதற்குள் திலீபன் தப்பித்து நேராக இங்கு வந்து சீதாவிற்கு கெடுதலை விளைவித்து விடுவானா என ஏகப்பட்ட கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இத்தனையும் முதல் பத்து பதினைந்து பக்கங்களிலேயே தோன்றுவது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

இத்தனைக்குமான காரணங்களை ராமநாதனின் நினைவோடையின் மூலமும், நிகழ்காலத்தின் அவன் சொல்லும் விளக்கங்கள் மூலமும் வாசகருக்கு குழப்பம் இல்லாமல் கடத்துவது மிகப் பெரிய சவால் தான். சில இடங்களில் லாஜிக் உதைத்தாலும், இப்படியும் நடக்குமா இது சாத்தியமா என்ற கேள்வி ஆரம்பித்து அதை ஆராய்வதற்குள் கதாசிரியர் அடுத்த மேஜிக்கை நடத்தி கதையோடு நம்மை ஓட வைத்து விடுகிறார். ஹிப்னாடிஸம், ஒத்த அலைவரிசை, வசியப்படுத்துதல், இறந்தவரின் ஆன்மா, கூடு விட்டு கூடு பாய்வது என நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகாத ஒரு விஷயத்தை சாதாரண வாசகனுக்கும் புரியும் படி எளிய நடையில் கூறி  பிரமிப்பை ஏற்படுத்திவிடுவதில், லாஜிக்கை விட கதையின் விறுவிறுப்பு மிக முக்கியம் என்பதை தெரியப்படுத்திவிடுகிறார் ஜாவர்.

நாவலின் உச்சகட்ட வெற்றியே அதன் மர்ம முடிச்சுகள்தான். ஒன்று அவிழ்ந்தது என நினைக்கும் போதே அது தானாகவே அடுத்த முடிச்சை தொடர்ந்து போட்டுக் கொண்டே போகிறது. அட! ஏன் இப்படி திலீபன் கேரக்டர் இரட்டைத் தன்மையுடன் இருக்கிறது என்று நினைக்கும் போதே அதற்கான காரண விளக்கங்களை படிக்கும் போது ஓ! இது தானா? இது தோணவே இல்லையே நமக்கு என ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கதையை ராமநாதனின் பார்வையில் நகர்த்துவது ஒரு நல்ல யுக்தி. அவன் தான் கதையின் நாயகனோ என நினைக்கும் போது நடுவில் சத்தமில்லாமல் நுழையும் திலீபன் கதாபாத்திரம், தான் தான் கதையின் நாயகன் என்பதை சொல்லாமல் சொல்லித் தொடர்கிறது. கடைசிவரை திலீபனும் ஆனந்தியும் புதிராகவே நாவலின் தொடர்கிறார்கள். எப்போதோ நடுநடுவே வந்த கதாபாத்திரம் எல்லாம் முக்கியமான பாத்திரங்களாக ஒரு சமயத்தில் மாறும் போது, ஒரு தேர்ந்த கதை சொல்லியாக ஜாவர் நம் மனதில் சட்டம் போட்டு அமர்ந்துவிடுகிறார்.

அடிக்கடி கதையில் வரும் ‘என் உடல் பொருள் ஆவி’ என்பதும் கதையில் தலைப்பு ஏன் ‘உடல் பொருள் ஆனந்தி’ என்பதும் கடைசி பக்கங்களில் தான் விளங்குகிறது. மிகச் சரியான கவனத்துடன் கடைசி சில பக்கங்களைப் படிக்காவிட்டால், கதையை தொடக்கத்திலிருந்து மீண்டும் ஒரு தரம் வாசிக்க நேரும். நம்மை திகிலூட்டுவதை விட அடுத்து என்ன அடுத்து என்ன என்று முடிவுகளை யூகிக்க முடியா வண்ணம் பரபரப்பாக பக்கங்களை புரட்ட வைப்பதே கதையின் நோக்கமாக இருக்கிறது. சில விஷயங்களை நாம் அனுமானித்தாலும் நம் எண்ணத்தின் போக்கை தொடர விடாமல் முற்றிலும் வேறு திசையில் கதையின் போக்கை மாற்றி விடுகிறார் கதாசிரியர். இந்த யுத்தியே நாவலின் வெற்றிக்கும் வழி வகுக்கிறது.

இப்போது எத்தனையோ தொழில்நுட்பங்களும் முப்பரிமாணக் காட்சிகளும், சிறப்புச் சப்தங்களும் வந்துவிட்டன. திகில் தொடர்களும் சினிமாக்களும் தொழில்நுட்ப உதவியால் அதிர வைக்கும் காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வந்துவிடுகின்றன. இந்நாவல் மூலம் அத்தனை மாயத்தையும் எழுத்துக்களாலேயே நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டியதில் ஜாவர் சீதாராமனுக்கு இணை அவர் மட்டுமேதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com