சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய விருது பெற்ற கிருங்கை சேதுபதி நூல் இதுதான்!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய விருது கிருங்கை சேதுபதிக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய விருது பெற்ற கிருங்கை சேதுபதி நூல் இதுதான்!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய விருது கிருங்கை சேதுபதிக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை கம்பன் கழகம் உருவாக்கிய நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான கிருங்கை சேதுபதி பங்குபெறாத தமிழ் இலக்கிய விழாக்கள் எதுவும் இருக்க வழியில்லை. குன்றக்குடி ஆதீனத்தின் செல்லப் பிள்ளையான கிருங்கை சேதுபதி, பள்ளிப் பருவத்திலிருந்தே சிறுவர் இலக்கியப் படைப்பாக்கத் துறையில் ஈடுபட்டு வருபவர். தனது 16ஆவது வயதில் 'பூந்தளிர்' இதழில் வாண்டு மாமா மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, 'தினமணி'யின் சிறுவர் மணி மற்றும் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது "சிறகு முளைத்த யானை' கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய விருது கிடைத்துள்ளது.

நான் பொறாமையும் ஆச்சரியமும் படும் படைப்பாளிகளில் கிருங்கை சேதுபதியும் ஒருவர். மாதம் தவறினாலும் தவறுமே தவிர இவரது கவிதைத் தொகுப்போ, கட்டுரைத் தொகுப்போ, இலக்கிய ஆய்வோ புத்தகமாக வெளிவருவது தவறுவதில்லை. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, பல்வேறு இலக்கிய மேடைகளிலும் தவறாமல் பங்கேற்று, தொடர்ந்து புத்தகங்களையும் இவரால் எப்படித்தான் ஓய்வு ஒழிவு இல்லாமல் எழுத முடிகிறதோ என்கிற மலைப்புதான் இவர் மீதான பொறாமைக்கும் வியப்புக்கும் காரணம்.
 
எனக்கு எப்போதோ கிருங்கை சேதுபதி தந்த, 'நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார்' என்கிற அவரது புத்தகம் இப்போது நினைவுக்கு வந்தது. படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருந்து படிக்காமலேயே மேஜையில் பல மாதங்களாக, கிருங்கை சேதுபதிக்கு பால சாகித்ய விருது கிடைப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். நேற்று, ராம்ராஜ் நிறுவன அதிபர் நண்பர் நாகராஜனின் மகள் திருமண வரவேற்புக்கு கோவைக்குப் பயணமானபோது, வழித்துணையாகப் படிப்பதற்கு அந்தப் புத்தகத்தை மறக்காமல் எடுத்துச் சென்றேன்.

சமகால தமிழக வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளில் நம்மாழ்வாரும் ஒருவர். இந்திய இயற்கை வேளாண் விஞ்ஞானிகளான ரிச்சாரியா, தபோல்கர், வந்தனா சிவா ஆகியோருடன் இணைந்து செயலாற்றியவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மண்ணைக் காக்க, மரங்களைக் காக்க, வற்றாத வளம்பெறும் ஆறுகளைக் காக்க, நுண்ணுயிர் செயல்பாடு காக்க, பாரம்பரியப் பயிர்களைக் காக்க தனது இறுதி மூச்சுவரை உழைத்த வேளாண் மக்களின் தொழுகைக்குரிய தொண்டர் அவர்.

சேதுபதியின் 'நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார்' என்கிற புத்தகம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. முதலாவது பகுதி, நம்மாழ்வார் குறித்த சேதுபதியின் பதிவு. இரண்டாவது பகுதி நம்மாழ்வார் குறித்து அவரை நன்கு அறிந்த - குறிப்பிடத்தக்க ஆளுமைகள் சிலருடைய பதிவுகள். மூன்றாவது பகுதி நம்மாழ்வாரின் நேர்காணல், சொற்பொழிவு, கட்டுரை, சேதுபதிக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

'என் வாழ்க்கையை மாற்றின புஸ்தகம்னா மசானபு ஃபுகோகாவின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி'தான். ஆனா, ஒரே ஒரு புஸ்தகம்தான் வச்சிக்கணும்னு சொன்னீங்கன்னா, மகாத்மா காந்தியோட "சத்திய சோதனை'யைத்தான் வச்சிக்குவேன். ஏன்னா, எல்லா காலத்துக்குமான புஸ்தகம் அது'' என்பது நம்மாழ்வாரின் கூற்று.

நம்மாழ்வாரின் வரவுக்குப் பிறகுதான் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது. எல்லாமே ரசாயன நச்சாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ்ச் சமுதாயத்தின் பிடரியில் அறைந்து, இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பி, தமிழனின் மரபணு நச்சுப்படாமல் இருக்க முனைப்புக் காட்டியவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

தமிழகத்து நெற்களஞ்சியமான தஞ்சையில் 'இளங்காடு' எனும் ஊரில் பிறந்த நம்மாழ்வார், வேளாண் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இயற்கை வழி விவசாயத்திற்காகத் தம் பணியைத் துறந்தவர். ஐரோப்பிய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள வேளாண்மை குறித்து நேரில் கண்டறிந்தவர். நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையைப் பெற சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி, வென்றவர். தமிழ்ச் சமுதாயம் இவருடைய பங்களிப்பை முழுமையாக உணர்ந்து இவரைப் போற்றவில்லை என்கிற குறைபாடு இருக்கிறது.

'நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார்' என்கிற சேதுபதியின் இந்தப் புத்தகம், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் தியாகத்தை மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.
 
நன்றி - கலாரசிகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com