ஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்!

விநாயகத்திற்கும் கமலத்திற்கும் உறவு முளைத்தபின் கமலத்தை கிராமவாசிகள் அனைவரும் விநாயகத்தின் பொருளாகப் பார்க்கின்றனர். ஆனால் அவள் நகரத்திற்கு இடம் பெயர்ந்த பின் அவள் பொதுப் பொருளாய் பார்க்கப்படுகிறாள்
ஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்!

கையில் காசிருந்தால், வாங்க மனமுமிருந்தால் நம்மால் எல்லாவிதமான புத்தகங்களையும் வாங்கி விட முடியும். ஆனால், வாங்கிய வேகத்தில் வாசித்து விட முடியுமா என்றால், அது தான் இல்லை. சில போது நம்மால் எத்தனை முயற்சித்தும் எளிதில் ஒரு புத்தகத்தை வாசித்து விட முடிவதே இல்லை. சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் வரை அவை நம் கையை விட்டுக் கீழிறங்குவதுமில்லை. உண்ணும் போதும், உறங்கும் போதும், சமலறையில் ஆக்கி இறக்கும் போதும் கூட புத்தகமும் கையுமாகத் திரிவது கூடப் புத்தகப் பிரியர்கள் பலருக்கு வாடிக்கையான செயல் தான். அந்த வரிசையில் எந்த ஒரு புத்தகத்தையுமே வாசித்த பிறகு அதை நண்பர்களோடு பகிர்வதும் கூட பலருக்கும் அரிதான செயலாகவே இருக்கக் கூடும். காரணம் வாசித்த திருப்தியாகவே கூட இருக்கலாம். 

சில நாவல்களுக்கு அதன் தலைப்பும், எழுத்தாளரின் பெயருமே வாசிக்கத் தூண்டக்கூடிய மிகப்பெரிய விளம்பரங்களாக அமைந்து விடுவதால் அதைத் தனியாக மெனக்கெட்டுப் பகிர்ந்து பரப்பத் தோன்றுவதில்லை. இதோ எழுத்தாளர் இமையத்தின் ‘எங்கதெ’ அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று. மிகச்சிறிய நாவல். ஆனால் உள்ளடக்கி இருப்பதோ ஆதாம், ஏவாள் காலம் தொட்டு மானுட ஜென்மங்களால் அறியப்பட முடியாத ரகசியமொன்றின் சிறு பொறியை. ஆணுக்கும், பெண்ணுக்குமான இனக்கவர்ச்சி, காதல், ஈர்ப்பு விசை இத்யாதி, இத்யாதிகளை இன்னும் புனிதமான வார்த்தைகள் எத்தனை இருக்கின்றனவோ அல்லது இன்னும் இழிவாக்கிக் கற்பிக்க எத்தனை எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனையையும் இட்டு நிரப்பிக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.

இந்த நாவலுக்கான விமர்சனம் எழுதலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் இணையத்தில் செந்தில்குமார் சந்திரசேகரன் என்பவர் எழுதிய விமர்சனம் காணக் கிடைத்தது.

அவரது விமர்சனம் நாவலைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்ததால் தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி பக்கத்தில் பகிரத் தோன்றியது. //எழுதியவருக்கு ஆட்சேபணை இருப்பின் அகற்றப்படும்// 

இமையத்தின் ‘எங்கதெ’ நாவலுக்கு செந்திகுமார் சந்திரசேகரன் எழுதிய விமர்சனப் பகிர்வு. 

இக்கதையில் வரும் விநாயகம் தனக்கு 33 வயதாகும் வரையிலும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை.  ஒரு பெண் பின்னாடியும் சுற்றித் திரிந்ததில்லை. அப்படிப்பட்டவன் வாழ்க்கையில், 28 வயதில் கணவனை இழந்த கைம்பெண்ணும் இரு பெண்குழந்தைகளுக்குத் தாயுமான கமலத்தின்மீது மட்டும் இனம்புரியாத மோகம் பீரிட்டுக் கொண்டுவந்துவிடுகிறது. அதன்பிறகு தன்வாழ்க்கை என்ற நிலையிலிருந்து விநாயகம் வெளியேறிவிடுகிறான்.  தன் ஊர் மறந்துவிடுகிறது. ஊரில் நடக்கும் திருவிழா, காப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் ஏன் ஈமக் கிரியைகள் கூட மறந்து விடுகிறது. தன் சொந்த பந்தங்களெல்லாம் மறந்து விடுகிறது.  ஒரே பெண் கமலம், ஒரே வீடு அவள் வீடு, ஒரே வேலை அவள் சொல்லும் வேலைகளை செய்வது என்று திரிய ஆரம்பித்துவிடுகிறான் விநாயகம்.  வெளியே அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த பெயர் வைக்கப்படாத உறவும் அதனால் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மிக ஆழமாக அலசுகிறது இந்நாவல்.
            
விநாயகத்திற்கும் கமலத்திற்கும் உறவு முளைத்தபின் கமலத்தை கிராமவாசிகள் அனைவரும் விநாயகத்தின் பொருளாகப் பார்க்கின்றனர். ஆனால் அவள் நகரத்திற்கு இடம் பெயர்ந்த பின் அவள் பொதுப் பொருளாய் பார்க்கப்படுகிறாள். இதில்கூட கிராமமும் நகரமும் எதிரெதிர் திசையில் இருப்பதையும் அவர்களின் இந்த பெயர் சொல்லப்படாத உறவை எதிர்நோக்கும் பார்வை வேறுபாட்டையும் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறார் இமயம். 
            
பணம் சம்பாதிக்கிறதுக்காக எத வேணுமின்னாலும் செய்யற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு.  ஒருத்தனுக்கு சாராயம்.  ஒருத்தனுக்குப் பீடி, சிகரட்டு, எம்.எல்.ஏ ஆவணும். எம்.பி., மந்திரி ஆவணுங்கிற பைத்தியம்.  சினிமாவுல நடக்கிறதுதான் வாழ்க்க லட்சியம்ன்னு திரியுறவன், நல்ல சினிமா எடுக்கப் போறான்னு சோத்துக்கு இல்லாம அலயுறவன்.  சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லைன்னு தீச்சட்டிய ஏந்திக்காட்டுற ஆளும் இருக்கு.  இப்பிடி ஒலகத்திலே இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பைத்தியம்.  ஒலகமே பைத்தியமாத்தான் இருக்கு.  எனக்குக் கமலா பைத்தியம்னு சொல்ற விநாயகத்தின் உறவை அவரது தங்கைகள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.  கமலாவின் வீட்டிற்குச் சென்று சீர்செய்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வந்து உறவு கொண்டாடுகிறார்கள் அவர்தம் தமக்கைகள்.
            
இந்நாவலில் கதையை விவரிக்கும் விநாயகத்திற்கு முன்னோடியாய் அவனுக்கு முந்தைய தலைமுறையில் அவ்வூரில் வாழ்ந்தவர் பாவாடை. விநாயகமும் அடுத்த தலைமுறையின் பாவாடையாக மாறப் போகும் அபாயத்தைச் சுட்டிக் காட்ட முயல்கிறார் இமயம் அவர்கள். சென்ற தலைமுறையில் ஒரு பாவாடை, இத்தலைமுறையில் ஒரு விநாயகம் என்றால் அடுத்த தலைமுறை யாரோ ஒருவரைக் குறிவைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது ?  அது செல்வமா, சுப்பிரமணியா, கருப்பனா சுப்பனா ? என நம்முள் வினா எழுப்பியிருக்கிறது இந்நாவல்.
            
ஆணுக்கும் பெண்ணுக்குமான இச்சிக்கலான உறவில் எப்போது நுழைவோம் என்று காத்திருந்தது போல சந்தேகம் இடம் பெற்று இவ்வுறவை மேலும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது.  பெரும்பாலும் இத்தகைய உறவுகளின் முடிவாக செய்தித்தாளில் நாம் தினசரி வாசிக்கும் சம்பவங்களைப்போல இக்கதையும் அதே முடிவை நோக்கி பயணிப்பதாகத் தெரிந்தாலும், விநாயகம் இதிலிருந்து வெளியே வருவாதாய் முடித்திருப்பது மிகவும் சுபம்.
            
இந்நாவலில் இமயம் கையாண்டிருக்கும் மொழி இதுவரை அவர் எழுதிய நாவல்களிலிருந்து மிகவும் தனிப்பட்டு நின்றாலும், கமலத்தைத் தொட்டுவிட்டு விடமுடியாமல் தவிக்கும் இந்நாயகனைப்போலவே, இந்நாவலைத் தொட்டுவிட்ட யாரையும் முழுதும் வாசித்து முடிக்காமல் கீழே வைக்கவிடாத அளவுக்கு  நமக்கு நெருக்கமான ஒரு உணர்வைத் தரும் மொழியாகவே இருக்கிறது. வட்டார மொழிநடையில் இத்துணை உவமைகளைக் கையாள முடியுமா ?  கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்திய உவமைகள் எத்துணை வித்தியாசமானதோ அத்துணை வித்தயாசமானது இந்நடையில் இவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகள்.  அந்த உவமைகள் அனைத்தின் பட்டியலையும் இதில் தருவதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தாலும், இதின் வாசகர்களாகிய என்நண்பர்களின் நலன் கருதி  அதில் சிலவற்றறை மட்டும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.

“சூறக்காத்துல மாட்டுன மூங்கில் மரம் மாதிரி”
“கருவாட்டுக் குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாய் மாதிரி”
“கிளி ஜோசியக்காரன் கையில மாட்டுன கிளியாட்டம்”
“கிணத்துல குதிச்சா தப்பிக்கலாம்.  கடல்ல குதிச்சா தப்பிக்க முடியுமா ?”
“இருட்டுல இருக்கிற செடி வெளிச்சத்தப் பாத்து தாவத்தான செய்யும் ?”
“காஞ்சி கெடந்த மாட்டுக்குப் பச்சப் புல்லுக் கட்டு கெடச்சாப்லதான்”
“விரியன் பாம்புகிட்ட இருக்கிற விசத்துக்கு அதுவா பொறுப்பு ?”
“கதவக் கண்டுபிடிச்சதே ஊட்டச் சாத்தி வைக்கறதுக்குத்தான்கிற ரகம்”
“மண்புழுவால நெளியத்தான முடியும் ? சீற முடியாதுல்ல ?”
“தவளைக்கி வாழ்க்க வளையிலதான”
“நாரை இரை தேடுறப்ப தூறல் போட்டாப்ல”
“வெசம் தடவுன வெல்லக் கட்டிய திங்க ஓடுற எலி மாதிரி”
“கோழி எங்க மேஞ்சா என்ன, எப்படி மேஞ்சா என்ன ?  என்னிக்காயிருந்தாலும் அது கறியா சட்டியில வெந்துதானே ஆகனும்.”
            
இந்த கைம்பெண்ணின் சிக்கலான நிலை குறித்து இந்நாவல் விரிந்தாலும் இது நம் சமுதாய பண்பாட்டுக் கூறுகள் நமக்கு நன்மை தருவனவா? அல்ல எதிர்வினையாற்ற வல்லவையா? என்ற நம்பமுடியாத ஒரு பரிமாணத்தை நம்முன்னால் தோற்றுவிப்பதை தவிர்க்கமுடியாததாக ஆக்கியிருக்கிறது. 

நாவல் - எங்கதெ
ஆசிரியர் - இமையம்
வெளியீடு - க்ரியா
விலை ரூ - 125

Image courtesy: ஆம்னி பஸ் இணையப் பக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com