ஆப்பிள் கன்னம், ஆரஞ்சு உதடு, மொழு,மொழு வெள்ளரிப்பிஞ்சு மூக்குக்கு!

கைக்குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு எத்தனை அவசியமோ? அத்தியாவசியமோ அதைப் போலவே தான் நமது முகத்துக்கும் பார்லர் தாண்டிய தனிப்பட்ட இயற்கை சிகிச்சைகள் சில தேவைப்படுகின்றன.
ஆப்பிள் கன்னம், ஆரஞ்சு உதடு, மொழு,மொழு வெள்ளரிப்பிஞ்சு மூக்குக்கு!

நாம் அழகானவர்களாக இருக்கலாம். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டுமே! ஒரு வேளை சினிமாக்களில் காட்டப்படுவது போல டைட் குளோசப் அப்பில் நெருக்கமாகப் பார்க்கையில் நமக்கே நமது முகம் அத்தனை அழகில்லையோ, எல்லாம் மேக் அப்பில் தான் சமாளித்துக் கொண்டிருக்கிறோமோ என்று கொஞ்சம் குழப்பமாயிருந்தால் உடனே செய்ய வேண்டியது முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றாக வெளிச்சம் வரக்கூடிய இடமாக சென்று அமர்ந்து கொண்டு நிதானமாக முகத்தை ஆராயுங்கள். முகம் முழுக்க கன்னங்களிலும், நெற்றியிலும் பருக்கள் வந்து மறைந்த தடங்களும், உதட்டில் வெடிப்புகளும், கண்களைச் சுற்றி கருவளையங்களும், அழகான கூர்மையான நீள மூக்கில் பிளாக் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும் புள்ளிகளுமாக இருந்தால் அவற்றை நமது பியூட்டி பார்லர் மாயஜாலங்களால் ஒரு போதும் முற்றிலும் மறைக்க முடியாது. கைக்குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு எத்தனை அவசியமோ? அத்தியாவசியமோ அதைப் போலவே தான் நமது முகத்துக்கும் பார்லர் தாண்டிய தனிப்பட்ட இயற்கை சிகிச்சைகள் சில தேவைப்படுகின்றன.

தினமும் செய்து கொள்ள முடியாவிட்டாலும் கூட வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ கண்டிப்பாக எளிய முறையிலான இயற்கை அழகுக் குறிப்பு டிப்ஸ்கள் சிலவற்றை நாம் பின்பற்றலாம். 

பருக்களில்லா பள பள ஆப்பிள் கன்னங்களுக்கு:

டிப்ஸ் 1:

தேவையானவை:
லெமன் - 1
ஐஸ் கியூப்கள் - 2 

லெமன் ஒரு சர்வரோக நிவாரணி என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உடனடியாக முகப்பருக்களை ஒழிப்பதிலும் லெமன் தான் முன்ணணி வகிக்கிறது. இரண்டு ஸ்பூன் லெமன் சாறு எடுத்துக் கொண்டு அதை முகம் முழுவதும் மென்மையாக மசாஜ் முறையில் முகத்தின் கீழ்பாகத்திலிருந்து நெற்றி நோக்கி மேலாகத் தேய்க்கவும். தேய்த்த பின் நெற்றியிலிருந்து மூக்குப் பகுதி வரை ஒரு வட்டம், மூக்குக் கீழே தாடை வரைக்கும் ஒரு வட்டம் எனப் பிரித்துக் கொண்டு எட்டு வடிவத்தில் இரண்டு கைகளாலும் மசாஜ் செய்யுங்கள். பின்னர் அப்படியே தூங்கலாம். லெமன் கறை உண்டாக்கும் என நினைத்தால் தலையணை இல்லாமல் அல்லது பழைய பெட்ஷீட் விரித்து கூட தூங்கலாம். வசதியா  முக்கியம்! நமக்கு உடனடித் தேவை ஓரிரவில் பருக்களற்ற அழகான ஆப்பிள் கன்னம். அவ்வளவு தான் காலையில் எழுந்ததும் ஐஸ் கியூப்களைக் கொண்டு மறுபடியும் மசாஜ் செய்து முகத்தை துடைத்தெடுக்கலாம். இந்த இயற்கையான பியூட்டி டிப்ஸினால் நிச்சயமாக பின்விளைவுகள் எதுவும் இருக்கப் போவதில்லை என்பதோடு பருக்களை நீக்குவதிலும் அருமையாகச் செயல்படும். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். 

டிப்ஸ் 2:

தேவையானவை:
கடல் உப்பு: 2 சிட்டிகை
காட்டன் ரோல் - வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
தண்ணீர்: 2 டீஸ்பூன்

பருக்களை காலி செய்வதில் கடல் உப்பிற்கும் முக்கிய பங்கு இருக்கிறதாம். வட்டமாக நறுக்கி எடுத்துக் கொண்ட காட்டனை லேசாக தண்ணீரில் முக்கிப் பிழிந்து கொள்ளவும். கடல் உப்பு காட்டனில் ஒட்டுவதற்காகத் தான் காட்டனை தண்ணீரில் நனைக்கிறோம். எனவே ஈரம் போக நன்கு பிழிந்து விட்டு கடல் உப்பில் தோய்த்து முகத்தில் பரு இருக்கும் இடங்களில் காட்டனை 3 நிமிடங்களுக்கு மென்மையாக அழுத்தி வைத்துக் கொள்ளவும். மூன்று நிமிடங்களின் பின் எடுத்து விடலாம். இந்த முறை உடனடியாகவும், நிரந்தரமாகவும் பலன் தரக் கூடியது. மோசமான பின் விளைவுகள் எதுவும் நேராது.

கரும்புள்ளிகளற்ற அழகான கூர் மூக்கு:

தேவையானவை:

புதினா இலைகள்: 1 கைப்பிடி
தண்ணீர்: அரை கப்
ஸ்கின் ஸ்கிரப்பர்: 1

டிப்ஸ்: புதினா இலைகளை அளவாகத் தண்ணீர் விட்டு பேஸ்டு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து ஸ்கின் ஸ்கிரப்பர் வைத்து மூக்கைச் சுற்றி வட்டமாக ஸ்கிரப் செய்து கழுவவும். வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் மூக்கின் கரும்புள்ளிகளிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். ஏன் புதினா என்று யோசித்தீர்களானால், புதினா ஒரு  மிகச் சிறந்த கறை நீக்கி என்பது மெய்ப்பிக்கப் பட்ட உண்மை. அதோடு சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.


ஆரஞ்சுப் பழ உதடுகளுக்கு :

டிப்ஸ் 1:

தேவையானவை:
லெமன் - 1
ஹனி - 1/2 டீஸ்பூன்

லெமன் ஜுஸ் எல்லா வீடுகளிலும் எளிதாக தயாரிக்கலாம். ஒரு முழு லெமன் எடுத்து சாறு பிழிந்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும், நால் ஒன்றுக்கு 3 அல்லது 4 துளி லெமன் சாறு மட்டும் தான் நாம் பயன்படுத்தப் போகிறோம். ஆனால் காலையில்  ஆஃபீஸ் கிளம்பும் அவசரத்திலோ அல்லது மாலையில் அசந்து வீடு திரும்பும் அவகாசத்திலோ லெமனெல்லாம் எடுத்து பிழிந்து கொண்டிருக்க முடியாது என்று யோசிப்பீர்கள் எனில் இப்படி முழு பழத்தைப் பிழிந்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் நினைத்த மாத்திரத்தில் எடுத்து உதடுகளில் தடவிக் கொள்ள வசதியாக இருக்கும்.

இந்த முறை வெகு எளிமையானது. மூன்று அல்லது 4 துளிகள் லெமன் சாறு எடுத்து உதடுகளில் தடவி, உதட்டை விரித்தும், சுருகியும் சில முறை அசைத்து விட்டு விரலால் மென்மையாக உதடுகளில் மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து இப்படிச் செய்த பின் குளிர்ந்த நீரில் உதடுகளைக் கழுவலாம். உடனடியாக பலன் கிடைக்கும். ஐந்து நிமிடங்களில் உதடுகள் முன்பை விட மென்மையாகவும் பொலிவாகவும் மாறி இருப்பதை நம்மால் உணர முடியும். செய்து பாருங்களேன்!

டிப்ஸ் 2:

லெமன் ரொம்பப் புளிப்பு என்று நினைத்தீர்களானால் ஒரு முழு லெமன் பிழிந்து அதில் 1 டீஸ்பூன் ஹனி சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து உதடுகளில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இப்படிச் செய்வதும் எளிய இயற்கை முறை தான். இதிலும் உடனடிப் பலன் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com