அழகுக் குறிப்பு, கிச்சன் வேலை, ஹெல்த் கான்சியஸ் - ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்: மதர்ஸ் கிஃப்ட்!

சிலருக்கு என்ன தான் மாய்ஸ்சரைஸர்கள் தேய்த்தாலும் கை முட்டிகள் வறண்டு போய் அசிங்கமாகத் தோற்றமளிக்கும். இப்படி நெய் அல்லது பாலாடைக் கட்டி கிடைத்தால்
அழகுக் குறிப்பு, கிச்சன் வேலை, ஹெல்த் கான்சியஸ் - ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்: மதர்ஸ் கிஃப்ட்!

தமது தோற்றப் பொலிவின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? காஃபீ, டீ எல்லாம் அருந்துவதற்குப் பதிலாக அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து அதை ஒரு கப் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கலந்து அருந்தலாம். இது தான் கிச்சன் பியூட்டி டிப்ஸின் முதல் படி. இதிலிருந்து தொடங்கி தனியாக அழகு படுத்திக் கொள்வதற்கென நேரம் ஒதுக்காமல் நமது வேலைகளினூடே நாம் செய்து கொள்ளக் கூடிய ஆயிரத்தெட்டு விதமான பியூட்டி டிப்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் இதற்கென நேரமில்லையே என அலுத்துக் கொள்ளத் தேவையே இல்லை.

பெடி கியூர், மெனி கியூர்...

சரி எலுமிச்சை வெந்நீர் அருந்தி முடித்ததும் காலை இளஞ்சூரியனின் இதமான பொன்னொளிக் கிரணங்கள் நம் மேனியில் படுமாறு மொட்டைமாடியிலோ, அல்லது பால்கனியிலோ 15 நிமிடங்களேனும் வெயிலில் நில்லுங்கள். அப்படி நிற்கும் நேரத்தில் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது, கை, கால் விரல் நகங்களை நறுக்குவது போன்ற பெடிகியூர், மெனிகியூர் சமச்சாரங்களைச் செய்து கொள்வது அவரவர் சாமர்த்தியம். அப்போது அவற்றை செய்து கொள்ள முடியாவிட்டாலும் கூட சும்மாவேனும் வெயிலில் நில்லுங்கள் தோலுக்கு விட்டமின் டி வேண்டுமில்லையா பின்னே! 

நேச்சுரல் ஃபேஸ் பேக்...

அப்புறம் வந்து ஃபேனைப் போட்டுக் கொண்டு சமையலுக்கு காய்கறிகளைக் கழுவி நறுக்கத் தொடங்கலாம். காய்கறிகளை நறுக்கும் போது நிச்சயம் ஏதாவது ஒன்று மிஞ்சத் தான் செய்யும் அல்லது கழிவாகவாவது வீணாகும். அவற்றில் நமது அழகுப் பராமரிப்புக்கு உதவக் கூடியது என்று நீங்கள் நினைப்பவற்றை ஒரு கிண்ணத்தில் தனியாகச் சேகரித்து விடுங்கள். உதாரணத்திற்கு கேரட் துண்டுகள், பழச்சாறு தயாரித்து வடிகட்டும் போது மிஞ்சும் பழச்சக்கை, எலுமிச்சைத் தோல், ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்தோல்கள் இத்யாதிகளை குப்பையில் எறியாமல் எடுத்து வைத்துக் கொண்டால் ஹோம் மேட் ஃபேஷியல் செய்து கொள்ள அவை உதவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக முதலில் ஆப்பிள் அல்லது கேரட் ஜூஸ் தயாரிக்கிறீர்கள் என்றால் அவற்றை தயாரித்து முடித்ததும் அதிலிருந்து கிடைக்கும் கலவையான சக்கையுடன் 1 டீஸ்பூன் தயிரும், ஒரு டீஸ்பூன் கடலை மாவும் சேர்த்து கண் சிமிட்டும் நேரத்தில் இயற்கை பியூட்டி பேக் தயார் செய்து விடலாம். ஒன்றுமில்லை அதை அப்படியே கண்ணாடியெல்லாம் பார்த்துக் கொண்டிராமல் முகத்தில் பேக் போட்டுக் கொண்டு அதே நேரத்தில் சமையலுக்கு காய்கறிகளை நறுக்கி முடித்து விடலாம். 

முழுச் சமையல் முடிய முக்கால் மணி நேரமாகலாம்... முகத்தில் போட்டுக் கொண்ட இயற்கை பழ பேக்கையும் அத்தனை நேரம் ஊற விட்டு சமையலை முடித்து விட்டு சுத்தமான குளிர் நீரில் கழுவித் துடைத்தோமென்றால் முகம் பளிச்சிடும். சமையலும் முடிந்தது, அழகுப் பராமரிப்புக்கான நேரமும் கிடைத்தது. இதெப்படி இருக்கு?! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாயிற்றா?! சரி இதோடு முடிந்து விட்டதா என்ன? இன்னுமிருக்கிறது.

ஸ்கின் கேர்...

சமையலில் நெய் சேர்ப்பவர்கள் எனில் அதில் கொஞ்சம் எடுத்து கை முட்டிகளில் தேய்த்து ஊற விடலாம், சிலருக்கு என்ன தான் மாய்ஸ்சரைஸர்கள் தேய்த்தாலும் கை முட்டிகள் வறண்டு போய் அசிங்கமாகத் தோற்றமளிக்கும். இப்படி நெய் அல்லது பாலாடைக் கட்டி கிடைத்தால் பாலாடைக் கட்டியை கொஞமாக முட்டிகளில் தேய்த்துக் கொண்டு ஊற வைத்துப் பிறகு குளிக்கும் போது தேய்த்து கழுவி விடலாம்.

ஹேர் கேர்...

தினமும் முட்டை சாப்பிடும் வீடுகள் உண்டு, வாரத்தில் இரு நாட்கள் முட்டையே தொடாத வீடுகளும் உண்டு. வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் முட்டை சாப்பிடாதோர் அந்த நாட்களில் முட்டையை உடைத்து அதிலிருக்கும் வெள்ளைகருவை மட்டும் தனியே பிரித்தெடுத்து தலைக்கு தேய்த்து ஊற வைக்கலாம். முட்டை அருமையான இயற்கை கண்டீஷனர். வேலையோடு வேலையாக அல்புமினை தலையில் தேய்த்துக் கொண்டு கிச்சன் வேலைகளை முடித்து விட்டீர்கள் என்றால் பேப்பர் படிக்கத் தொடங்கலாம். நடுவில் குழந்தைகள் எழுந்து பள்ளி செல்லத் தயாராக வேண்டும் என்று வந்தால்; முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தச் செய்து அவர்களுக்கும் இதைக் கொஞ்சம் தேய்த்து விட்டு காலை இளம் வெயிலில் நிறுத்தி சின்னச் சின்னதாக ஏதாவது உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி கற்றுத் தரலாம். பிறகு அவர்களைக் குளிக்க வைத்து நாமும் குளித்து வெளியேறி மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.

அடுத்து என்ன? காலைச் சாப்பாடு தானே?!

எதை அருந்தினால் அது அழகுப் பராமரிப்புக்கும் உகந்ததாக இருக்கக் கூடுமென முதல் நாளிரவே யோசித்து வைத்துக் கொண்டீர்கள் எனில் மிக எளிமையாக முடிந்து விடும் காலைச் சாப்பாட்டு நேரம்.

சாப்பாட்டில்  பியூட்டி கான்சியஸ்... 

ப்ரேக்பாஸ்ட்...

குழந்தைகளுக்கு அரிசி அல்லது கோதுமையைக் குறைத்து வீட்டில் தயார் செய்த கோதுமை பிரட் இருந்தால் அவற்றுடன் காய்கறிக் கலவை வைத்தோ அல்லது முட்டை அல்லது கீரை வகைகள் எதையாவது  வைத்தோ சாப்பிடத் தரலாம், அதோடு ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, கொய்யா, வாழை இப்படி பழங்களில் ஏதாவது ஒன்று நிச்சயம் சாப்பிடத் தர  வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் பழச்சாறுகள் அருந்தலாம். அது சாதாரண லெமன் ஜூஸகவோ அல்லது தக்காளி ஜூஸாகவோ கூட இருக்கலாம். அருந்த வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். ஏனெனில் தினமும் பழச்சாறுகள் அருந்தினால் நாளடைவில் முகம் ஃப்ரெஷ் ஆன பழங்களைப் போலவே தக தகவென பொலிவோடு மின்னத் தொடங்கி விடும் என்பது அம்மாக்களின் வாக்கு.

லஞ்ச்...

மதிய உணவாக நிறையக் காய்கறிகளும் கொஞ்சமே கொஞ்சம் அரிசிச் சாதமும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றோடு கண்டிப்பாக காய்கறி சாலட் அல்லது பழ சாலட்டுகள் சாப்பிடுவது வழக்கமாக வேண்டும்.

மாலைச் சிற்றுண்டியாக முளைகட்டிய பயறு வகைகள் எதையாவது கொஞ்சம் கொறிக்கலாம். அதோடு சூடாகக் கொஞ்சம் கிரீன் டீ அல்லது பிளாக் டீ போதும். மிஞ்சும் டீத்தூளை கீழே கொட்டாமல் வெயில் கருத்துப் போன சருமத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட தழும்புகள் மாறிவிடும் என்கிறது சித்த மருத்துவம். 

டின்னர்...

இரவுக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என எது சாப்பிடுவதானாலும் 3 அல்லது 4 க்கு மேல் வேண்டாம்.  அதையும் 6 மணிக்கு முன்னதாக சாப்பிட்டு விட்டு 8 மணிக்குள் கொஞ்சம் வெது வெதுப்பான பாதாம் பால் அருந்தி விட்டு பற்களைத் தேய்த்து குளித்து விட்டு தூங்கச் செல்லலாம். இரவில் எப்போதும் மிதமான சூட்டிலுள்ள வெந்நீர் தான் குளிப்பதற்கு உகந்தது. குளிக்கும் போது மறக்காமல் 10 நிமிடங்கள் வாளித் தண்ணீரில் பாதங்களை ஊற வைக்க மறக்க வேண்டாம். காலை முதல் செய்த வேலைகளின் அலுப்பெல்லாம் காணாமல் போக இந்தப் பயிற்சியை தினமும் செய்வது நல்லது.

கடைசியாக படுக்கைக்குச் சென்றதும் ஆலிவ் ஆயில் இருந்தால் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடாக்கி பாதங்களில் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்து விட்டுப் படுக்கலாம். நன்றாகத் தூக்கம் வரும். பாதங்களும் பித்த வெடிப்புகள் மறைந்து அழகாகும்.

அப்புறமென்ன அழகுக் குறிப்புகள், கிச்சன் வேலைகள், உடல் நலப்பராமரிப்பு என எந்தக் கவலைகளும் இன்றி நன்றாகத் தூங்கி விடுவோம். அவ்வளவே தான். ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!

குட்நைட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com