நீங்கள் ஒரு பக்கா மேக் அப் பிரியரா? அப்படியானால் இது உங்களுக்கான டிப்ஸ்!

அதென்ன? எப்போது பார்த்தாலும் மேக் அப் டிப்ஸ் என்றால் அதை பெண்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டுமா? ஆண்களும் தான் இப்போது பெண்களுக்குப் போட்டியாக தாராளமாக மேக் அப் செய்து கொள்கிறார்களே...
நீங்கள் ஒரு பக்கா மேக் அப் பிரியரா? அப்படியானால் இது உங்களுக்கான டிப்ஸ்!

அதென்ன? எப்போது பார்த்தாலும் மேக் அப் டிப்ஸ் என்றால் அதை பெண்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டுமா? ஆண்களும் தான் இப்போது பெண்களுக்குப் போட்டியாக தாராளமாக மேக் அப் செய்து கொள்கிறார்களே... திருமணம் போன்ற வாழ்க்கையின் முக்கியமான கொண்டாட்ட நேரத்தில் மட்டுமல்ல இப்போது ஆண்கள் தினசரி அலுவலகம் செல்லும் போதும் மேக் அப் செய்து கொள்கிறார்கள்! இதை அவர்களால் மறுக்க முடியுமா என்ன?

சூர்யா பரிந்துரைத்த ஃபேர் & லவ்லி ஃபார் மென் சிவப்பழகு கிரீம் தொடங்கி ஆக்ஸ் பாடி ஸ்ப்ரே, தலைமுடிக்கு ஹேர் ஜெல், வறண்ட உதடுகளுக்கு வாசலின், (சினிமா ஹீரோக்கள் இந்த விஷயத்தில் ஹீரோயின்களோடு பாரபட்சமே இன்றி பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கூட நடிக்கிறார்கள்..

அது மட்டுமா? எம்ஜிஆர் தொட்டு இன்றைக்கு வடிவேலு வரை கண்மையால் மீசையும், புருவங்களும் வரைந்து கொள்ளாத நடிகர்கள் யார்?!)

இவையெல்லாமும் காஸ்மெடிக்ஸ் இல்லாமல் வேறென்ன? அவற்றைப் பயன்படுத்தினால் அதற்குப் பெயர் மேக் அப் இல்லாமல் வேறென்ன? சில ஆண்களுக்கு குட்டிக்குரா பவுடர் போட்டுக் கொள்ளாவிட்டால் கை ஒடிந்தாற் போலெல்லாம் ஃபீல் செய்வார்கள் என்று நண்பர்கள் வட்டாரத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். குட்டிக்குரா, பார்க் அவென்யூ, கோகுல் சாண்டல் பவுடர்களெல்லாம் மேக் அப் சாதனங்கள் லிஸ்ட்டில் வரக்கூடியவை தான். அத்தனை எதற்கு? அந்தக் காலம் போல ஆண்கள் பீர்க்கை நாரையோ அல்லது பயத்த மாவையோ கொண்டு உடம்பு தேய்த்துக் குளிக்காமல் இன்றைய நவ நாகரீக நவீன வாசனை சோப் போட்டுக் குளித்தாலே அது கூட மேக் அப் அப்பீல் தான் என்கிறேன். சரி தானே?! பிறகென்ன எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு மட்டுமே மேக் அப் டிப்ஸ் சொல்லிக் கொண்டிருப்பது?! ஸோ... இந்த டிப்ஸுகள் இப்போது ஆண்களுக்கானவையும் தான்.

ஆண்களை மட்டும் சொல்வானேன்?! சமீபத்தில் ஏதேனும் திருமணத்திற்குச் சென்று வந்திருந்தீர்கள் என்றால் நீங்களே கண்கூடாகப் பார்த்திருக்கலாம், இன்றெல்லாம் திருமணம் என்றால் மணமகன், மணமகள்கள் மட்டுமே மேக் அப் செய்து கொள்வதில்லை. அவரவர் சார்ந்த இருவீட்டார் குடும்பத்திலுள்ள குஞ்சு, குளுவான்கள் முதல் பல்லுப்போன பாட்டி, தாத்தாக்கள் வரை எல்லோருமே சிம்பிளாகவேனும் மேக் அப் பிரஸ்ஸால் டச் செய்து கொள்ளாமல் புகைப்படத்துக்கும். வீடியோவுக்கும் போஸ் தருவதாக இல்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆக மேக் அப் என்பது இப்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள் என அனைவருக்குமான ஒரு ஒருங்கிணைந்த பிணைப்பாகி விட்டது.

ஆகவே; லேடிஸ் & ஜெண்டில்மென் கவனமாக இந்த டிப்ஸுகளைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு முறை உங்களது காஸ்மெடிக்ஸ் பாக்ஸுகளை திறக்கும் போதும் மறவாமல் இதை கவனத்தில் கொள்ளுங்கள்;

ஒரு நபர் ஆணோ அல்லது பெண்ணோ நான் மேக் அப் செய்து கொள்வதே இல்லை, தினமும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவித் துடைப்பேன் என்று சொன்னாரென்றால் அது முழுப்பொய் என்று நம்புங்கள்! வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்பத்திலேனும் மேக் அப் செய்து கொள்ள விரும்பாதவர்களே இல்லை என்பது தான் உண்மை. மேக் அப்பில் என்ன ஒரு கஷ்டம் என்றால் நொடிக்கொரு காஸ்மெடிக் சாதனத்தை பரிந்துரைக்கும் திரைப்பலங்களால் மேக் அப் செய்து கொள்ளும் அப்பாவி பொது ஜனம் எந்த காஸ்மெடிக் பொருட்கள் தரமானவை, எவை தரமற்றவை, எதைப் பயன்படுத்தலாம்? எதைத் தவிர்க்கலாம்? என்று ஒரு முடிவுக்கு வர இயலாமல் ரொம்பவே குழம்பிக் போகிறார். ஆனால், இனி அந்தக் கவலையே வேண்டாம்... ஏனென்றால் இனி உங்களுக்கு காஸ்மெடிக் டிப்ஸ் சொல்லத்தான் நாங்கள் இருக்கிறோமே! 

காஸ்மெடிக் பொருட்களுக்காகச் செலவு செய்ய வேண்டாம், முதலீடு செய்யுங்கள்...

காஸ்மெடிக் சாதனங்கள் என்ன தங்கமா? வெள்ளியா? முதலீடு செய்வதற்கு என்று கேட்டு விடாதீர்கள். சில தரமான காஸ்மெடிக் சாதனங்கள் தங்கம் மற்றும் வெள்ளியை விட விலை அதிகமானவை. அப்படிப்பட்ட காஸ்மெடி பொருட்களைக் கண்டு; ஐயோ! இத்தனை அதிக விலை கொடுத்து முதல் தரமான இந்த காஸ்மெடிக் செட்டை வாங்கிப் பயன்படுத்துவதை விட இதை விட சற்று விலை குறைவாக இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர காஸ்மெடிக்குகள் கிடைத்தாலும் போதும் என்று முடிவு செய்வீர்களெனில். அது முற்றிலும் தவறான முடிவு. தரமான காஸ்மெடிக்குகள் விலை அதிகமென்றாலும் அவற்றால் உண்டாகும் பின்விளைவுகள் குறைவானதாக இருக்கும். அதோடு மனித உடலின் மிகுந்த சென்ஸிடிவ்வான பாகமான முகச்சருமத்துடன் தொடர்புடைய விஷயம் என்பதால் தரமான காஸ்மெடிக் பொருட்களுக்காக செலவிடப்படும் தொகையை நாம் செலவுக்கணக்கில் எழுதாமல் முதலீட்டுக் கணக்கில் எழுதி வைத்துக் கொண்டாலும் தவறில்லை.

உங்கள் நிறத்துக்குப் பொருத்தமான ஷேட்களை தேர்ந்தெடுங்கள்...

ஆண்களை விடுங்கள்... அவர்களுக்கு இந்த டிப்ஸ் மட்டும் உதவப் போவதில்லை. ஏனென்றால் ஐ ஷேடோ, உதடுகளுக்கு இன்னர் ஷேட், அவுட்டர் சேட் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துப் பயன்படுத்தும் பக்குவமோ, பொறுமையோ அவர்களிடம் இருப்பதில்லை. எனவே இது முற்றிலும் பெண்களுக்கான டிப்ஸ்... ஏனெனில் ஐ ஷேடோ முதல் பல நிற லிப்ஸ் ஷேடோக்கள் கன்னங்களில் செயற்கையான சிவப்பழகை வரவழைக்கும் ரூஜ் மாதிரியான சிவப்பழகுக் கிரீம்கள் வரை இவை முற்றிலும் பெண்களுக்கானவை. இந்த ஷேடோக்களில் எது நமது சரும நிறத்துக்குப்  பொருத்தமாக இருக்கும் என்ற ஞானம் எல்லாப் பெண்களுக்கும் இருந்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் பொருந்தாத ஷேட்கள் பெண்ணைப் பேயாகக் கூட காட்டக் கூடும். உதாரணத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் விஜய் சேதுபதியின் டயலாக்கை நினைத்துப் பாருங்கள்! அப்படி யாரேனும் உங்களைக் கலாய்க்காமல் இருக்க வேண்டுமானால் முகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த ஷேட்கள் பொருத்தமானவை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தினால் நல்லது.

மேக் அப் டூல்களை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது!

மேக் அப் டூல்கள் என்றால் என்னவோ, ஏதோ என்று பயந்து விட வேண்டாம். ஒவ்வொரு மேக் அப் பாக்ஸிலுமே லிப்ஸ்டிக் அப்ளை செய்வதற்கு, காஜல் அப்ளை செய்வதற்கு, ஐ ஷேடோ அப்ளை செய்வதற்கு, கன்னங்களில் காம்பாக்ட் பவுடர்கள் அப்ளை செய்வதற்கு எனத் தனித்தனியாக மேக் அப் டூல்கள் இருக்கும். அவை முக உறுப்புகளுக்கு ஏற்றவாறு சின்னஞ்சிறு பிரஸ் வடிவிலோ அல்லது ஸ்பாஞ்ச் வடிவிலோ இருக்கும். நாம் வழக்கமாக காஸ்மெடிக்ஸ் பயன்படுத்தும் போது இந்த மேக் அப் அப் டூல்களை அவை எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளனவோ பிரத்யேகமான அந்தந்த ஷேட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக லிப்ஸ்டிக் ஷேட் அப்ளை செய்ய ஒதுக்கப்பட்ட மேக் அப் டூல் கொண்டு ஐ ஷேடோ அப்ளை செய்தால் என்ன ஆகும்? வேறென்ன? ப்ப்பா... யார்டா இந்தப்பொண்ணு பேய் மாதிரி?! என்று ஊரே நம்மைப் பார்த்து அலறி ஓடும் நிலைக்கு ஆளாவோம். சுருங்கச் சொல்வதென்றால் சாம்பார் பரிமாறப் பயன்படுத்திய கரண்டியை சர்க்கரைப் பொங்கல் பரிமாறப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? அஃதே இங்கேயும்!

மேக் அப் டூல்களில் சுகாதாரத்தை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்...

சில வீடுகளில் தோசைக்கல்லை தோசை ஊற்றப் பயன்படுத்தி விட்டு நாள் கணக்கில் ஏன் மாதக்கணக்கில் கூட சுத்தம் செய்யவே மாட்டார்கள், கேட்டால் அடிக்கடி தண்ணீர் விட்டுக் கழுவினால் தோசை சரியாக எழும்பாது என்று சாக்குச் சொல்வார்கள். அதே தான் தோசைக் கரண்டிக்கும் கூட, இது கொஞ்சம் தேவலாம்... வாரத்திற்கு இருமுறையாவது தோசைத் திருப்பியைக் கழுவிச் சுத்தம் செய்வார்கள் என நம்பலாம். ஆனால் இந்த சப்பாத்திக் கட்டையையும், மனையையும் வருடக்கணக்காக, ஜென்ம, ஜென்மாந்திரமாக கழுவாமல் அப்படியே புராதனப் பாசத்துடன் பயன்படுத்தும் அந்தராத்மாக்கள் நம்மில் சிலர் இருப்பார்கள். அவர்கள் தங்களது அத்தகையை சம்பிரதாயத்தை சமையல் டூல்களில் மட்டுமல்ல மேக் அப் டூல்களிலும் கூட அப்படியே பின்பற்றுவார்கள். அதாவது ஒரு முறை லிப்ஸ்டிக் அப்ளையர் பயன்படுத்தினால் அந்த பாக்ஸில் உள்ள மொத்த லிப்ஸ்டிக்கும் தீரும் வரைக்கும் அதே அப்ளையர் தான். வேறு மாற்றும் எண்ணமே வராது. அதே அப்ளையர் கொண்டு அவர்கள் மட்டுமல்ல அவர்களது நெருங்கிய தோழிகளும், உடன் பிறப்புகளும் கூட லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள். லிப்ஸ்டிக் விஷயத்தில் மட்டுமில்லை மேக் அப் டூல்களின் சுகாதார விஷயத்தில் நமது கவனமும், எச்சரிக்கை உணர்வும் எப்போதும் மிக அலட்சியமாகவே இருக்கிறது. அதனால் தான் எத்தனை தரமான மேக் அப் பொருட்களை உபயோகித்தாலும் கூட சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள், முகச்சருமத்தில் அலர்ஜி, பருக்கள் போன்ற பிரச்னைகள் வருகின்றன.

காஸ்மெடிக் பொருட்கள் காலாவதியாகும் தேதிகளைப் பற்றிய ஞானம்...

அது உணவுப் பொருளாக இருக்கட்டும், மருந்துப் பொருளாக இருக்கட்டும் அல்லது மேக் அப்புக்கான காஸ்மெடிக் பொருட்களாகவே கூட இருக்கட்டும். நிச்சயம் இந்த உலகில் எல்லாப் பொருட்களுக்குமே பயன்பாடு தீர்ந்து போவதற்கான காலாவதி தேதி என்ற ஒன்று நிச்சயம் உண்டு. மனிதனுக்கே மரணம் என்ற பெயரில் எக்ஸ்ஃபயரி டேட் இருக்கும் போது மனிதனால் உருவாக்கப்படும் மற்ற பொருட்கள் எல்லாம் எம்மாத்திரம்?! எனவே நீங்கள் எத்தனை தரமான காஸ்மெடிக்குகளை உபயோகிப்பவர்களானாலும் சரி அவற்றின் காலாவதி தேதிகளை தெரிந்து வைத்துக் கொள்ளாமல் காலாவதிக்கும் பின்னும் தொடர்ந்து பயன்படுத்தினீர்கள் எனில் நீங்கள் செய்து கொள்ளும் மேக் அப்பினால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லாமல் போகும்.

ஆகவே மேக் அப் ப்ரியர்களான ஆண்களே, பெண்களே, குழந்தைகளை, தாத்தாக்களே, பாட்டிகளே தயவு செய்து நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மேக் அப் டிப்ஸுகளை பின்பற்றுங்கள். அப்புறம் எப்போதுமே நீங்கள் தான் உங்கள் வீட்டின் உலக அழகி, அழகன்கள்!


Image courtesy: Uc web News & Google search Indus ladies site

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com