உங்கள் முக அமைப்புக்குப் பொருத்தமான பெஸ்ட் ‘ஐப்ரோ’ த்ரெட்டிங் டிப்ஸ்... 

ஏனெனில். ஐப்ரோ @ புருவம் முகத்தின் மிக முக்கியமான அழகு அம்சங்களில் ஒன்று. ஆணோ, பெண்ணோ அவர்களது முகத்தின் கம்பீரத்தை புருவங்களே தூக்கி நிறுத்துகின்றன. ஆகவே அவற்றை அழகு படுத்திக் கொள்வதில் கொஞ்சம்
உங்கள் முக அமைப்புக்குப் பொருத்தமான பெஸ்ட் ‘ஐப்ரோ’ த்ரெட்டிங் டிப்ஸ்... 

இந்தியப் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், அந்த அழகு தங்களுக்குப் பொருத்தமான வகையில் தான் அமைந்திருக்கிறதா? என்று அறிந்து கொள்வதில் இருப்பதில்லை. பெரும்பாலும்  'பெர்ஃபெக்ட் பியூட்டி 'என்று வெகு சிலரிடமே சொல்ல முடிகிறது. காரணம் அழகென்பது அவரவர் சொந்தப் பார்வை சார்ந்த அதாவது மனம் சார்ந்த விஷயம் என்பதாலும் தான்.

சிலருக்கு குளிர்நீரில் முகம் கழுவித் துடைத்து, நெற்றிக்குச் சின்னதாகப் பொட்டிட்டு... நீளமான கேஷத்தை வெறுமே ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டினால் போதும். அந்தத் தோற்றமே அவர்களை அப்சரஸ்களாகக் காட்டி விடக்கூடும். சிலருக்கோ தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது மெனக்கெட வேண்டியதாக இருக்கும். இது அவரவர் தோற்றப் பொலிவைப் பொருத்த விஷயம். யெஸ்... அஃப்கோர்ஸ் சில நேரங்களில் மனப் பொலிவைப் பொருத்ததும் தான்.

சரி இப்போது பார்லருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையுமே, நமக்கு மிகக் குறைந்த செலவை மட்டுமே இழுத்து வைக்கக் கூடிய  ‘ஐப்ரோ’ திரெட்டிங் குறித்துக் கொஞ்சம் பார்ப்போம். 

இப்போதையா பார்லர்களில் திரெட்டிங் செய்து கொள்வதற்கென அணுகினால், அதற்கான மாதிரிகளைப் பார்த்து தேர்ந்தெடுக்க எந்த விதமான கேட்லாக்குகளும் தரப்படுவதில்லை. ஆனால் பார்லர்கள் அரிதாக இருந்த காலங்களில் ஹேர் கட் முதல் ஐப்ரோ த்ரெட்டிங் வரை அனைத்துக்குமே கேட்லாக்குகள் இருந்தன. கஸ்டமர்கள் அவற்றைப் பார்த்து தங்களது முக அமைப்புக்குத் தக்கவாறு ஹேர் கட் மற்றும் ஐப்ரோ த்ரெட்டிங் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போது பார்லர்களின் அழகுக் கலை நிபுணர்கள், கேட்டலாக்குகள் எதுவுமின்றி வருகின்ற கஸ்டமர்களின் முக அமைப்பைக் கிரகித்து அதற்கு ஏற்றாற் போன்ற ஐப்ரோ த்ரெட்டிங்கை அவர்களே தீர்மானித்து விடும் அளவுக்கு வல்லவர்களாகி விட்டார்கள் போலும்! அதனால் தான் இப்போதெல்லாம் பார்லர்களில் ஐப்ரோ கேட்டலாக்குகள் கேட்டால் ‘இல்லை’ என்ற் பதிலே கிடைக்கிறது.

சரி அதை விடுங்கள்;

தினமணி வாசகிகள், இங்கே நாங்கள் தரவுள்ள கேட்டலாக் புகைப்படத்தை பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டு அவற்றை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனெனில். ஐப்ரோ @ புருவம் முகத்தின் மிக முக்கியமான அழகு அம்சங்களில் ஒன்று. ஆணோ, பெண்ணோ அவர்களது முகத்தின் கம்பீரத்தை புருவங்களே தூக்கி நிறுத்துகின்றன. ஆகவே அவற்றை அழகு படுத்திக் கொள்வதில் கொஞ்சம் மெனக்கெட்டால் தவறேதுமில்லை.

பெண்களின் முக அமைப்பை ஆறு வகையாகப் பிரிக்கலாம்;

1. நீள் வட்டமுகம்

நீள்வட்ட முகம் கொண்டவர்களுக்கு முன் நெற்றிப் பகுதி, முகவாய்ப் பகுதியைக் காட்டிலும் அகலமாக இருக்கும், எனவே இத்தகைய முக அமைப்பு கொண்டவர்கள் மேற்கண்ட விதமாக, மெல்லிய வில் போன்று புருவத்தைத் திருத்துவதைக் காட்டிலும் சற்றே அடர்த்தியாகத் தொடங்கி கண் பாவைக்கு நேர் மேலே வளைத்து முடிவில் மெல்லிய கோடாக  இழுத்துத் திருத்தினால் பார்க்க அழகாக இருப்பதோடு, அது இந்த வகை முகத்திற்குப் பொருத்தமாகவும் இருக்கும். இந்த வகை த்ரெட்டிங்கில் துவக்கத்தை விட முடிவில் நீளம் அதிகமாக இருக்கலாம்.

2. வட்ட முகம்

நிலவைப் போன்ற வட்ட முகம் என்பார்கள்... அந்த வகையான முகத்தில் முகத்தின் நீளத்துக்கு ஏற்ப அகலமும் அதே விதமாக அமைந்திருக்குமென்பதால் கன்னப் பகுதி அதிகமாக இருக்கும், நெற்றியும் அகலமாக இருக்கும். முகமே விரிந்து மலர்ந்த தாமரை போல அகண்ட தோற்றம் தருவதால் புருவங்கள் கண் விழிக்கு நேர்மேலே ஆரம்பமும், முடிவும் இணையும் இடத்தில் வளைவு வரும் வண்ணம் த்ரெட்டிங் செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

3. குதிரை போன்ற நீள முகம்...

இந்த வகை முகத்தில் முன்நெற்றிப் பகுதியைப் போலவே முகவாய்ப் பகுதியும் நீளமாகவே அமைவதால், புருவங்களை வில்லாய் வளைக்காமல் நீளக் கோடிழுத்ததைப் போலத் திருத்தி முடிவில் மட்டும் சன்னமாக வளைத்து விடலாம். இல்லாவிட்டால் ஏற்கனவே நீளமாகத் தோன்றும் முகம் மேலும் நீளமாகி பார்க்க ஒவ்வாமல் இருக்கும்.

4. சதுர வடிவ முகம்

இந்த வகை முகத்துக்கு, புருவமும் கூட கணித வடிவங்களைப் போல வளைவுகள் சரி கோணத்தில் வெட்டிக் கொள்ளும் வண்ணம் ஐப்ரோ திருத்திக் கொண்டால் பார்க்க ‘நச்’சென்று இருக்கும்.

5. இதய வடிவ அல்லது வெற்றிலை வடிவ முகம்

இந்த வகை முகம் மிகவும் அரிதாகத் தான் காண முடியும். வெற்றிலை அல்லது இதய வடிவ முகத்துக்குப் புருவங்களை அரை வட்ட நிலா போல திருத்திக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும்.


6. டைமண்ட் அல்லது ஐங்கோண வடிவ முகம்

டைமண்ட் வடிவ முகத்துக்கு ஐப்ரோ திருத்தும் போது, முதலில் கண்களுக்கு அருகே ஆழமாகத் தொடங்கி அடர்த்தி குறையாது மேல் நோக்கி நீளமாக இழுத்து வளைத்து கூர்மையான வில் போன்று நீட்டி முடிக்கலாம்.

இந்தியப் பெண்கள் காலம், காலமாக இந்த 6 வகையான முக அமைப்புகளுடன் தான் இருந்து வருகிறார்கள். இந்த அறுவகை முகத்திற்கும், முகத்திலுள்ள மோவாய், நாசி, உதடுகள், கன்னங்கள், கன்ன எலும்புகள், முன் நெற்றி, முன் நெற்றியில் விழும் கூந்தல் அமைப்பு என சர்வமும் கவனித்தறியப் பட்டு அந்தந்த முகங்களுக்குத் தக்கவாறு ஐப்ரோ த்ரெட்டிங் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல காலமாக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ப, அந்தந்த முகத்துக்குத் தோதான ஐப்ரோ த்ரெட்டிங் முறையைக் கண்டறிந்து அதைப் பின்பற்றிப் பார்த்தீர்களானால் அது உங்களுக்கே புரியும்.
 

Image courtesy: eyebrowz.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com