காசைக் கரியாக்க வேண்டாம், மூங்கில் கரிச்சாம்பல் போதும் முகத்தை அழகாக்க!

பார்லருக்குப் போவதால் முகம் பொலிவு பெறுகிறதோ இல்லையோ நமது பர்ஸ் பொலிவின்றி வற்றிக் காய 100 % வாய்ப்புகளுண்டு. அதனால் அதைத் தவிர்த்து விடலாம்.
காசைக் கரியாக்க வேண்டாம், மூங்கில் கரிச்சாம்பல் போதும் முகத்தை அழகாக்க!

சிலருக்கு சம்மர் வந்தாலே போதும்... முகம் கருத்து வறண்டு சோபையிழந்து காணப்படும். மாய்ஸ்சரைசர்கள், ஃபேஸ் க்ரீம்கள், கோல்டு க்ரீம்கள் என விதம் விதமான கிரீம்களை காசைக் கொட்டி வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தினாலும் சிலருக்கு அவற்றால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. முகம் வெயிலில் காயப்போட்ட கத்தரிக்காய் வத்தல் போல வாடி வதங்கி பொலிவிழந்தே இருக்கும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பார்லருக்குப் போய் முகத்துக்கான அத்தனை ஃபேஸியல்களையும் வாரம் ஒன்றாக முறை வைத்து செய்து பார்ப்போமா? இப்படிச் செய்வதில் முகம் பொலிவு பெறுகிறதோ இல்லையோ நமது பர்ஸ் பொலிவின்றி வற்றிக் காய 100 % வாய்ப்புகளுண்டு. அதனால் இதை தவிர்த்து விடலாம். பிறகு வேறென்ன செய்வது? பழங்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு தினம் ஒரு பழத்தை அரைத்து முகத்தில் பூசிக் காய வைத்து ஃப்ரூட் ஃபேஸியல் செய்து பார்ப்போமா? அட... பழம் விற்கும் விலையில அரைத்து முகத்துல பூசுவதா? பேசாமல் அதை அப்படியே சாப்பிட்டோமானால் அதை விட அதிகப் பலன் கிடைக்குமே என்ற பாட்டு வரும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து. அட இதற்கும் முட்டுக்கட்டையா? வேறு என்ன தான் செய்வது இந்த வறண்ட முகத்தை தள, தளவென பளபளக்கச் செய்ய?

சிம்ப்பிளாக ஒன்று செய்யலாம்.

அளவாக உண்டு, அளவாக உறங்கி.. வேளா...வேளைக்குச் சாப்பிட்டு முறையாக உடற்பயிற்சி செய்து வீட்டிலும் வேலையாட்கள் வைத்துக் கொள்ளாமல் அவரவர் வேலைகளை அவரவர் செய்தாலே போதும். வெயிலில் தெருவில் இறங்குவதென்றால் குடையோ அல்லது பனை ஓலைத் தொப்பிகளையோ பயன்படுத்தலாம். ஆனால் இவற்றையெல்லாம் நம்மால் தொடர்ந்து பின்பற்ற முடியுமா என்றால் அது தான் இல்லை என்றாகிறது. இன்றைய பரபரப்பான உலகில் அளவாக உண்டு, அளவாக உறங்குவது எல்லாம் பகற்கனவு. வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் பேலன்ஸ் செய்யும் நேரத்தில் பல பெண்கள் சாப்பிடுவதையோ அல்லது தூக்கத்தையோ கொஞ்சம் தியாகம் செய்து தான் ஆக வேண்டியதாயிருக்கிறது. அது மட்டுமல்ல இன்றைய ஜங்க் ஃபுட் மோகத்தில் நாம் விரும்பியும், விரும்பாமலும் கூட நமக்கு ஜீரணமாகாத சில உணவுகளையும் உண்ண வேண்டியதாகத் தான் இருக்கிறது.அப்படி இருக்கும் போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க எடுக்கக் கூடிய முயற்சிகள் போலவே முகம் வறண்டு போகாமலிருக்கவும் சில முயற்சிகளை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியும் கூட அதிக செலவின்றி அமைந்து விட்டால் சுபம் என்கிறது மனம்.

அப்படி ஒரு எளிதான, செலவற்ற முயற்சியொன்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

மூங்கில் சாம்பல் ஸ்கிரப்பர் முறை...

மூங்கில் சாம்பல் தற்போது Bamboo Charcoal என்ற பெயரில் மார்கெட்டில் கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக் கொண்டு நாம் தினம் பயன்படுத்தும் பேசிக் ஃபேஸ் வாஷுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். இந்த சாம்பலை ஃபேஸ் வாஷுடன் இணைத்து முகத்தில் தேய்த்துக் கழுவும் போது முகம் சுத்தமாவதுடன், முகத்தின் எலாஸ்டிசிட்டியும் மேம்பாடு அடைந்து முகம் மென்மையாகிறது.

செயலூக்கம் பெற்ற மூங்கில் சாம்பலை முகத்தில் தேய்த்துக் கழுவுவதால் முகத்திலிருக்கும் தேவையற்ற அழுக்கு நீங்குவதோடு வறண்டு இறந்த சரும செல்களும் நீக்கப்படுகின்றன. இதனால் முகம் சுருக்கங்கள் நீங்கப்பெற்று பொலிவுடன் தோன்றுகிறது.

மூங்கில் சாம்பல் மாஸ்க்...

மூங்கில் சாம்பலுடன் சிறிதளவு கற்றாழை ஜெல், டீ ட்ரீ ஆயில், ஜோஜோபா ஆயில் இவற்றைக் கலந்து முகத்தில் மாஸ்க் மாதிரி அப்ளை செய்து, கலவை காய்ந்த பின் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவித்துடைத்தால் முகம் ஜொலிக்கும். மேற்குறிப்பிட்ட கலவையானது முகச் சருமத்தில் படிந்திருக்கும் ரசாயனங்கள், வாகனப் புகையால் முகத்தில் படியும் விஷத்தன்மை கொண்ட வாயுக்கள், மைக்ரோ துகள்கள் உள்ளிட்ட அசுத்தங்களை முற்றிலுமாக நீக்கக் கூடியது. அதுமட்டுமல்ல வயதாவதால் முகத்தில் தோன்றக்கூடிய சுருக்கங்களையும் கூட மறையச் செய்யக்கூடிய திறன் இந்த மூங்கில் சாம்பல் ஃபேஸ் மாஸ்க்குக்கு உண்டு.

மூங்கில் சாம்பல் ஃபேஸியல்...

மாதமிருமுறை இந்த மூங்கில் சாம்பல் கொண்டு முகத்தை ஃபேஸியல் செய்து கொண்டால் போதும் முகச்சருமத்தின் ஈரப்பதம் நிலைபெற்று முகத்தில் படிந்துள்ள கசடுகளை அகற்றி விடும்.

சூப்பர் மார்கெட்டுகளில் Bamboo charcoal அல்லது மூங்கில் சாம்பல் என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும். இதை வீட்டிலேயே நம்மால் செய்து பார்க்க முடியும் என்பதால் செலவும் குறைவே. அதோடு முகமும் துடைத்து வைத்த வெண்கல விளக்காய் சுடரள்ளி வீசும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com